Published:Updated:

"மணிகண்டனுக்கு பதவி நீக்கம்... உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு...!?" பழனிசாமியின் பதில் என்ன?

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

''கட்சி விரோத நடவடிக்கையை வெளிப்படையாகச் செய்த உடுமலை ராதாகிருஷ்ணனுக்குப் பதவி... அதைத் தட்டிப்பறித்தற்காகக் கருத்துச் சொன்ன மணிகண்டனுக்குத் தண்டனையா?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள், கட்சியினர்.

எடப்பாடி பழனிசாமியுடன் மணிகண்டன்
எடப்பாடி பழனிசாமியுடன் மணிகண்டன்

'ஜெயலலிதா கொடுத்த பதவியை ஜெயலலிதாவால்தான் நீக்க முடியும்' என்கிற வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டிருக்கிறார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டனின் பதவியைப் பறித்திருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

வளம் கொழிக்கும் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தைக் கைப்பற்றுவதிலும் தக்கவைப்பதிலும் நடந்த மோதலில், மணிகண்டனின் தலை உருண்டிருக்கிறது. உடுமலை ராதாகிருஷ்ணனின் கை ஓங்கியிருக்கிறது. இந்த பவர் பாலிடிக்ஸில் மணிகண்டன், உடுமலை ராதாகிருஷ்ணன் நடத்திய அரசியல் திருவிளையாடல்களைப் பார்ப்போம்.

ஜெயலலிதாவுடன் பொள்ளாச்சி ஜெயராமன்
ஜெயலலிதாவுடன் பொள்ளாச்சி ஜெயராமன்

மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மோதலில், அவர்களைப் பழிவாங்க ஆரம்பிக்கப்பட்டது 'தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம்'. ஆனால், அதற்கு உயிர்கொடுத்தது ஜெயலலிதாதான். அ.தி.மு.க-வின் முந்தைய ஆட்சியில், அரசு கேபிள் டிவி நிறுவனம் செயல்பட ஆரம்பித்தபோது, அதன் சேர்மனாக உடுமலை ராதாகிருஷ்ணனை 2011 ஜூலையில் நியமித்தார், ஜெயலலிதா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டு வந்த அனுபவத்தால், சேர்மன் பதவி உடுமலை ராதாகிருஷ்ணனைத் தேடிவந்தது.

பொள்ளாச்சியும் உடுமலையும் பக்கத்துப் பக்கத்து மாவட்ட ஊர்கள். ஆனால், அந்த ஊர்களைச் சேர்ந்த உடுமலை ராதாகிருஷ்ணனும் பொள்ளாச்சி ஜெயராமனும் எதிரும்புதிருமாக அரசியல் செய்துகொண்டிருந்தார்கள். 2016 ஜனவரியில், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த பொள்ளாச்சி ஜெயராமனை நீக்கிவிட்டு, உடுமலை ராதாகிருஷ்ணனை நியமித்தார், ஜெயலலிதா.

விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை போட்டபோது...
விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை போட்டபோது...
விகடன்

கேபிள் டிவி தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணன் ஒருவரிடம் பேசும் ஆடியோ ஒன்று, 2016-ம் ஆண்டு வைரல் ஆனது. அதன் பிறகு, கேபிள் டிவி சேர்மன் பதவியைத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனிடம் ஒப்படைத்தார், ஜெயலலிதா.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா புகாரில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை போட்டனர். அப்போது, அங்கே அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தார்கள் என்கிற புகாரில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் உள்ளிட்டோர்மீது புகார்கள் பாய்ந்தன.

ஜெயலலிதா இருந்த வரையில் பொட்டிப் பாம்பாக இருந்த பொள்ளாச்சியும் உடுமலையும், எடப்பாடி காலத்தில் வெளிப்படையாகவே வாள்சுழற்ற ஆரம்பித்தனர். அதற்கு ஊரறிந்த சாட்சி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா. திருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், முதல்வர் எடப்பாடிக்குப் பக்கத்தில் யார் அமர்வது என்கிற 'நாற்காலிச் சண்டை'யில் உடுமலையும் பொள்ளாச்சியும் செய்த அரசியல், சந்தி சிரித்தது.

நாற்காலி சண்டை...
நாற்காலி சண்டை...
விகடன்

விழா மேடையில், எடப்பாடி அருகில் சென்று அமர முற்பட்டார், துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். கோபத்துடன் வந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமனைப் பின்னால்போய் உட்காரச் சொன்னார். கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு நாற்காலியை இருவரும் பிடித்துக் கொண்டு மல்லுக்கட்டினார்கள்.

எடப்பாடி பழனிசாமி இருவரையும் சமாதானப்படுத்தினார். ஒருவழியாக உடுமலை ராதாகிருஷ்ணன், எடப்பாடி அருகே அமரவைக்கப்பட்டார். பொள்ளாச்சி ஜெயராமன் மேடையின் ஓரத்துக்குத் தள்ளப்பட்டார். உடுமலை ராதாகிருஷ்ணன் மீது எடப்பாடி காட்டிய பாசத்துக்கு இது ஒரு சாம்பிள். இப்போது, அவருக்காகத் தன் மந்திரி சபையில் இருந்த மந்திரி மணிகண்டனையே 'எந்திரி' எனச் சொல்லிவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் உடுமலை ராதாகிருஷ்ணனுக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரை நேரில் போய் நலம் விசாரித்தார், எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதாவுடன் உடுமலை ராதாகிருஷ்ணன்
ஜெயலலிதாவுடன் உடுமலை ராதாகிருஷ்ணன்

மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த மார்ச் மாதம் நீக்கப்பட்டார். அதனை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். அ.தி.மு.க தலைமைக்கு எதிராக உடுமலையின் ஆதரவாளர்களே களத்தில் இறங்கி போராட்டம் நடத்தியபோதும், எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த உடுமலை ராதாகிருஷ்ணனுக்குத்தான் அரசு கேபிள் டிவி தலைவர் பதவியை சமீபத்தில் அளித்தார், முதல்வர். ''இந்த விஷயம்கூட எனக்குத் தெரிவிக்கப்படவில்லை'' என மணிகண்டன் சொன்ன அன்றுதான், அவரின் மந்திரிப் பதவியைப் பறித்துவிட்டார், எடப்பாடி.

தெர்மக்கோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம். முதல்வர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம்.
எடப்பாடியுடன் உடுமலை ராதாகிருஷ்ணன்
எடப்பாடியுடன் உடுமலை ராதாகிருஷ்ணன்

''மேடையில் நாற்காலிக்கு சண்டைபோட்ட, கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட, உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கேபிள் டிவி சேர்மன் பதவி. அதை எதிர்த்து வெறும் கருத்து மட்டும் சொன்ன மணிகண்டனுக்குப் பதவி பறிப்பா?'' எனக் கொதிக்கிறார்கள், மணிகண்டனின் ஆதரவாளர்கள். உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வெண்ணெய்யும் மணிகண்டனுக்கு சுண்ணாம்பும், எடப்பாடி பழனிசாமி அளிப்பது ஏன் என்கிற கேள்விக்கு, கொங்கு மண்டல பாசம்' எனப் பதில் எழுதுகிறார்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

தன்னுடைய தகவல் தொழில்நுட்பத்துறையின்கீழ் வரும் கேபிள் டிவி நிறுவனத்துக்கு இன்னொரு துறையில் இருக்கும் அமைச்சரை சேர்மன் ஆக்கியது மட்டுமல்லாமல், அதைக்கூட தெரிவிக்காமல் போனதால்தான், மணிகண்டன் பிரஸ்மீட்டில் கோபத்தைக் கொட்டித் தீர்த்தார். சேனல்கள் சேர்ப்பது, கேபிள் ஆபரேட்டர்களை இணைப்பது, செட்டாப் பாக்ஸ் வழங்குவது என வளம் கொழிக்கும் இடமாக கேபிள் டிவி நிறுவனம் இருக்கிறது. அதை உடுமலை ராதாகிருஷ்ணன் கைப்பற்றிய ஆத்திரத்தைத் தாங்க முடியாமல், மணிகண்டன் கொட்டிய வார்த்தைகள் அவரின் மந்திரிப் பதவியையே காவுவாங்கிவிட்டது.

அன்வர் ராஜாவும் மணிகண்டனும்
அன்வர் ராஜாவும் மணிகண்டனும்

தமிழ்நாடு கேபிள் டிவி தலைவராகப் பதவியேற்றபோது, ''கேபிள் டிவி கட்டணத்தை 130 ரூபாயாகக் குறைத்துள்ளோம்'' என்றார், உடுமலை ராதாகிருஷ்ணன். ''உங்கள் கட்டுப்பாட்டில்தான் கேபிள் டிவி வருகிறது. உங்களுக்குத் தெரியாமல் எப்படி கேபிள் டிவி கட்டணம் குறைப்பு சாத்தியமாகும்?'' எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, உடுமலை ராதாகிருஷ்ணனின் வண்டவாளத்தை எடுத்துவிட்டார் மணிகண்டன். காலையில் பேட்டி... இரவில் கல்தா என முடிந்தது விவகாரம். ”2 லட்சம் கனெக்‌ஷன்கள் கொண்ட தனியார் நிறுவனத்தை வைத்திருக்கும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கேபிள் டிவி தலைவராகிவிட்டார். அவர், முதலில் தன்னிடம் இருக்கும் கனெக்‌ஷன்களை அரசு கேபிளுக்கு வழங்க வேண்டும்'' என அதிரடி கிளப்பிய மணிகண்டனும் உடுமலைக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல.

2016 சட்டசபைத் தேர்தலில், மணிகண்டனுக்கு சீட் கொடுத்து அமைச்சர் ஆக்கினார், ஜெயலலிதா. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்ததால், மாவட்டச் செயலாளர் பதவியும் தந்தார். 20 நாள்கள்கூட மாவட்டச் செயலாளர் பதவியை மணிகண்டனால் தக்கவைக்க முடியவில்லை. கட்சிக்காரர்களுக்கும் சீனியர்களுக்கும் மதிப்பு கொடுக்காததால், மாவட்டச் செயலாளர் பதவி பறிபோனது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரத்தில், போலீஸ் எஸ்ஐ ஒருவரைத் தாக்க முயன்று காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த கொக்கி குமார் என்கிற ரவுடியைக் கடந்த ஆண்டு அமைச்சர் மணிகண்டன் நேரில் சந்தித்து நலம் விசாரித்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த விஷயத்தில், மணிகண்டனை நீதிமன்றம் தலையில் கொட்டியது. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் எப்படி எதிரியோ அதுபோல ராமநாதபுரத்தில் மணிகண்டனுக்கு அன்வர் ராஜா. இவர்களும், ஒரே மேடையில் மோதிக்கொண்ட சம்பவமும் அரங்கேறியது.

தெர்மக்கோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; முதல்வர்முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இதற்கெல்லாம் நடவடிக்கை பாய்ச்சல் ஏன் எடப்பாடி காட்டவில்லை என்கிற கட்சிக்காரர்களின் கேள்விக்குப் பதில் இல்லை.

மணிகண்டன் விக்கெட்: எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல்களின் தொடக்கப்புள்ளியா?

''எடப்பாடி ஆட்சி ஊழல் நிறைந்தது'' என்று சொல்லி போராட்டத்துக்கு தேதி குறித்த... 11 எம்.எல்.ஏ-க்களை வைத்து இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்வர் அளித்த எடப்பாடியின் பெருந்தன்மை, மணிகண்டனின் விஷயத்தில் ஏன் நடக்கவில்லை?'' கேட்பது உடன்பிறப்புகள். பதில் சொல்லவேண்டியது முதல்வர்.