Published:Updated:

`குடமுழுக்கு நிகழ்வில் பங்கேற்பாரா முதல்வர்?!'- பெரியகோயில் விழா குழுவைக் கலங்கடிக்கும் சென்டிமெண்ட்

முதல்வருக்கு அழைப்பிதழ்
முதல்வருக்கு அழைப்பிதழ்

` என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், நான் செய்து தருகிறேன். விழாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது' என விசாரித்தார் முதல்வர்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவுக்கு வருகைதரும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், `சென்டிமென்ட் காரணத்தால் அவர் வருவாரா?' என்ற கேள்வி விழா குழுவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

முதல்வருக்கு அழைப்பிதழ்
முதல்வருக்கு அழைப்பிதழ்

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக விமான கோபுரத்தின் மேல் உள்ள கலசம் உட்பட மொத்தம் உள்ள ஏழு கலசங்களில் தங்கமுலாம் பூசப்பட்டது. கோபுரக் கலசம் நாளை மீண்டும் விமான கோபுரத்தில் பொறுத்தப்பட உள்ளது. குடமுழுக்கு சிறப்பாக நடைபெற வேண்டும் எனக் கோயில் வளாகத்துக்குள் அஸ்திர பூஜை இரண்டு நாள்களாக நடைபெற்றது. அத்துடன் கடந்த 27-ம் தேதி பூர்வாங்க பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

`தஞ்சை சிட்டியே தெரியுது பாருங்க..!' -போலீஸ்காரரின் முகநூல் லைவால் கொதித்த பெரியகோயில் பக்தர்கள்

இந்தநிலையில், பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்கு வருகை தரும்படி கோயில் விழாக்குழு சார்பில் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அழைப்பிதழைப் பெற்றுக் கொண்ட முதல்வர், `நிச்சயமாக வருகிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

எடப்பாடி, ஓ.பி.எஸ்
எடப்பாடி, ஓ.பி.எஸ்

இதுகுறித்து அ.தி.மு.க தரப்பில் விசாரித்தபோது, ``கோயில் குடமுழுக்கில் கலந்துகொள்ள வேண்டும் என விழாக் குழுவினர் முதல்வருக்கு அழைப்பு விடுத்தனர். அதைப் பெற்றுக்கொண்ட அவர், `நான் வருகிறேன்' என கூறியதுடன், `பெரியகோயில் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே பெருமைமிக்க கோயில், அதன் குடமுழுக்கு விழா அனைவரும் பெருமைப்படும்படி சிறப்பாக நடைபெற வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், நான் செய்து தருகிறேன். விழாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு' என விசாரித்தார்.

அத்துடன், `கோயில் குடமுழுக்கு விழாவிலும் சிலர் அரசியல் செய்கிறார்களே' எனக் கேட்டார். மேலும், `ஆகம விதியை பின்பற்றுவதுடன் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழாவை சிறப்புமிக்க வகையில் நடத்துங்கள்' எனக் கூறினார்.

பெரியகோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்
பெரியகோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்

குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார் முதல்வர். ஆனால், அவர் இதில் கலந்துகொள்வது என்பது சந்தேகம்தான். பெரியகோயிலுக்கு வந்தால் ஆட்சி பறிபோய் விடும், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது, பதவியும் நிலைக்காது என்பன போன்ற சென்டிமென்ட், காலம்காலமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

பெரியகோயில் 1000-வது ஆண்டுவிழாவின்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அந்த விழாவில் அப்போதைய முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கோயில் வளாகத்துக்குள் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டு வேட்டி சட்டை அணிந்து கலந்துகொண்டார். அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க தோல்வியைத் தழுவியது. அத்துடன் பல சிக்கல்களையும் சந்தித்தார் கருணாநிதி. மேலும், கோயிலுக்கு வந்தவர்கள் குறித்த சில தகவல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சொல்லப்பட்டது. இதனால் அவர் விழாவில் பங்கேற்பதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

பெரியகோயிலைப் பொறுத்தவரை உள்ளே இருக்கும் இறைவன்தான் மிகப்பெரியவன். இங்கு வரும் யாராக இருந்தாலும் ஆடம்பரம் இல்லாமல் வந்து செல்ல வேண்டும். அதை மீறினால் அவர்களுக்கு பிரச்னை ஏற்படும். ஆனால், பல உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் கோயிலுக்கு வந்து பெருவுடையாரை வணங்கிச் செல்வதுடன் பல வளர்ச்சிகளை அடைந்தும் வருகின்றனர். இதையும் மறுக்க முடியாது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு