Published:Updated:

எகிறி அடிக்கும் ராஜேந்திர பாலாஜி... என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இதற்கு முன் அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டனை நீக்கியவர்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் எகிறி அடிக்கும் ராஜேந்திர பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது தெரியவில்லை.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், தி.மு.க-வுக்கு எதிராக மதரீதியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாகக் கொந்தளித்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

"நெஞ்சில் நஞ்சும் வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு சட்டவிரோதியாக ஆகிவரும் ராஜேந்திரபாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதுடன், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராஜேந்திர பாலாஜி மீது பாய்ந்திருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சுற்றுச்சூழல் அமைச்சரும் பவானி தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.சி.கருப்பணன், "மக்கள் சில இடங்களில் வாக்குகளை மாற்றிப் போட்டுவிட்டனர். அதனால்தான் தி.மு.க சில இடங்களில் வெற்றி பெற்றது. அவர்கள் வெற்றி பெற்றதால் ஒரு பயனும் இல்லை. ஆட்சியில் இருப்பது அ.தி.மு.க தான். உள்ளாட்சிகளுக்கு நாம்தான் நிதி ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் எதற்கு நிதி ஒதுக்குவோம்? அப்படியே கொடுத்தாலும் மிகவும் குறைவான நிதியைத்தான் ஒதுக்குவோம். உதாரணமாக, காவல்நிலையத்துக்குப் பிரச்னை என்று சென்றால், அ.தி.மு.க-காரன் சொல்வதை போலீஸ் கேட்பார்களா, இல்லை தி.மு.க-காரன் சொல்வதைக் கேட்பார்களா... அப்படித்தான் இதுவும்!” என்று சமீபத்தில் பேசினார்.

அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் கருப்பணனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க கோரியது. அதுபோல, டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளுக்காக அமைச்சர் ஜெயக்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க-விலிருந்து குரல் எழுந்தது. இந்த இருவருக்கும் எதிரான கோரிக்கை என்பது வழக்கமான ஒன்றாகவே இருந்தது. ஆனால், இப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் பொறுத்தளவில், இதில் தி.மு.க மிகவும் சீரியஸாக இருப்பதாகத் தெரிகிறது. காரணம், தி.மு.க-வுக்கு எதிராக ராஜேந்திரபாலாஜி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அப்படி!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

"தி-மு.க-வுக்கு இந்துக்களின் ஓட்டு மட்டும் இனிக்கிறது... அவர்களின் உயிர்கள் என்றால் கசக்கிறது" என்று கூறியுள்ள ராஜேந்திரபாலாஜி, "இஸ்லாமியர்கள் என்ன தவறு செய்தாலும் தி.மு.க கண்டுகொள்வதில்லை" என்று குற்றம்சாட்டியிருக்கிறார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் கருத்துகள் தி.மு.க-வுக்கு எதிரானது என்பதையும் தாண்டி, அது பா.ஜ.க-வின் குரலாக இருக்கிறது என்பதே பிரதான குற்றச்சாட்டாகவுள்ளது. `மோடியா... இந்த லேடியா?’ என்று நரேந்திர மோடிக்கே சவால் விட்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர் அ.தி.மு.க-வின் ‘நிரந்தரப் பொதுச்செயலாளர்’ என்று அ.தி.மு.க-வினரால் வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதா. ஆனால், ‘மோடிதான் எங்கள் டாடி’ என்று சொல்பவர் ராஜேந்திர பாலாஜி. தொடர்ச்சியாகவே இவர் பா.ஜ.க-காரர் போலப் பேசிவருவதாகச் சொந்தக்கட்சியிலேயே சூடான எதிர்ப்புக்குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் முன்வைத்த கருத்து பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியபோது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு உட்பட பலரும் பெரியாருக்கு ஆதரவாகப் பேசினார்கள். அமைச்சர் ஜெயக்குமார், "ரஜினிகாந்த் வாயை மூடிக்கொண்டிருந்தால் நல்லது" என்று கடுமையாக `கமென்ட்’ கொடுத்தார். அப்போது, இரண்டு அமைச்சர்கள் மட்டும் பெரியாருக்கு எதிராக வேறொரு குரலில் பேசினார்கள். அவர்கள், மாஃபா பாண்டியராஜனும் ராஜேந்திர பாலாஜியும்தான். இவர்கள் இருவரும் அ.தி.மு.க-வுக்கு காவி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள் என்ற விமர்சனம் அப்போது எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்
பா.ஜ.கவில் சாய்னா நேவால்... அரசியல் கட்சிகள்  பிரபலங்களின் ரிட்டயர்மென்ட் ப்ளானா?

"தி.க-வும், தி.மு.க-வும் ரஜினிக்கு எதிராக நிலைப்பாடு எடுத்ததால், அதைத் தடுக்கிற பணியில் நான் ஈடுபட்டேன்" என்று இப்போது ராஜேந்திர பாலாஜி கூறுகிறார். "முஸ்லிம் தெருக்களில் முன்பு எங்களுக்கு பாதிக்குப்பாதி ஓட்டுகள் விழும். இப்போது 10 ஓட்டுகள்தான் விழுகின்றன. காரணம், தி.மு.க நம்மை ஆதரிக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்று கூறியுள்ள ராஜேந்திரபாலாஜி, "இப்படியே இந்துக்களைக் கொல்ல தீவிரவாதிகளுக்கு தி.மு.க துணைபோனால், இந்துத் தீவிரவாதம் உண்டாவதைத் தடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

இவ்வளவு `சீரியஸாக’ப் பேசியிருப்பதால்தான், ராஜேந்திர பாலாஜியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் தி.மு.க மிகவும் சீரியஸாக இருக்கிறது. அதனால்தான், ஆளுநர் மாளிகை வரைக்கும் நேரில் போய் தி.மு.க வலியுறுத்தியுள்ளது. தி.மு.க எம்.எல்.ஏ-க்களான ஜெ.அன்பழகனும், மா.சுப்பிரமணியனும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இது தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மனு அளித்துள்ளார்கள். "ராஜேந்திர பாலாஜி மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் சென்று சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்போம்" என்கிறார் ஜெ.அன்பழகன். தி.மு.க-வுக்குப் `பதிலடி’ கொடுத்துள்ள ராஜேந்திரபாலாஜி, "ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
vikatan

பெரியார் குறித்து அமைச்சர்கள் சொன்ன கருத்துகள் வெவ்வேறு குரல்களில் ஒலித்ததால், அதுகுறித்து எழுந்த விமர்சனங்களால் அ.தி.மு.க-வின் தலைமைக்கு அழுத்தம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் அனைவரையும் தனித்தனியாகச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்ததாகச் செய்திகள் கசிந்தன. இந்நிலையில், `சர்ச்சைக்குரிய வகையில் பேசாதீர்கள்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தம்மிடம் கூறியதாகவும், இதுபோல ஒவ்வொரு அமைச்சரையும் தனித்தனியாக அழைத்து இதே கருத்தை முதல்வர் சொன்னதாகவும் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார். இது முதல்வருக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் செயல் என்று அ.தி.மு.க நிர்வாகிகளே கடும் அதிருப்தியில்தான் உள்ளனர்.

`ஆட்சியைக் கவனிப்பதா..இல்லை உங்களைக் கண்காணிப்பதா?!' -அமைச்சர்களிடம் கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி

ஐ.டி துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் என்ன தவறு செய்தார் என்பதே தெரியாமல் அவருடைய பதவியைப் பறித்து தன்னையும் ஜெயலலிதாவுக்கு இணையான தலைவர் என்று காண்பித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இப்போது யாருக்கும் அஞ்சமாட்டேன் என்கிற ரீதியில் பேசிவரும் ராஜேந்திர பாலாஜியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஏன் அமைதி காக்கிறார் என்ற கேள்வியையும் கட்சிக்காரர்கள் எழுப்புகின்றனர். அவர் பி.ஜே.பி.க்கு ஆதரவாகப் பேசுவதால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பயப்படுகிறாரா என்றும் பேச்சு எழத்தொடங்கியுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் மீது எடப்பாடி எடுக்கப்போகும் நடவடிக்கையில்தான் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கப்போகிறது.

அடுத்த கட்டுரைக்கு