Published:Updated:

விவசாயக் கடன் தள்ளுபடி முதல் வழக்குகள் வாபஸ் வரை... எடப்பாடியின் வாக்குவங்கி அரசியல் எடுபடுமா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடியான அறிவிப்புகள் தேர்தல் களத்தில் எந்த அளவுக்குக் கைகொடுக்கும்?

``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன், கல்விக் கடன், நகைக் கடன் ஆகியவற்றைத் தள்ளுபடி செய்வோம்'' என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாகப் பிரசாரம் செய்துவந்த வேளையில், ``16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பெற்ற ரூ 12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்'' என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கூடவே, ஜல்லிக்கட்டுப் போராட்டக் காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நாள் முதலாகவே பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டிவருகிறார். தமிழ் உணர்வாளர்களின் வெகுநாள் கோரிக்கையான, நவம்பர் 1 தமிழ்நாடு தின அறிவிப்பு, எட்டு ஆண்டுகளாகக் கொடுக்கப்படாமல் இருந்த கலைச்செம்மல் விருதுகள் அறிவிப்பு, காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், தைப்பூசத்துக்கு விடுமுறை, வீடில்லாத அனைவருக்கும் இலவச வீடு எனப் பல அறிவிப்புகளையும் `பொங்கல் பரிசாக 2,500 ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா' உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளையும் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

சசிகலா காரில் அ.தி.மு.க கொடி
சசிகலா காரில் அ.தி.மு.க கொடி

அவற்றில் ஒரு சில திட்டங்கள் நடைமுறைக்கு வந்தும், சில நடைமுறைக்கு வராமலும் இருக்கின்றன. முக்கியமாக, மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டு அரசாணை அனைவரின் கவனத்தையும் பெற்றது. எழுவர் விடுதலை குறித்து அ.தி.மு.க எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றுவருகின்றன.

ஒருபுறம், இந்த அரசின் மீதான அடுக்கடுக்கான ஊழல் புகார்கள், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள், சசிகலாவின் விடுதலை, கூட்டணிக் கட்சிகள் விளைவிக்கும் குழப்பங்கள் இவை எல்லாவற்றையும் தாண்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை லைம்லைட்டில், அதுவும் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பதுபோல வைத்துக்கொண்டிருக்க உதவுவது இந்த அறிவிப்புகளே. ஆனால், அது தேர்தல் களத்தில் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆட்சியில் இருந்த 91-96, 2001-06 ஆகிய காலகட்டங்களில் இது போன்ற மக்கள் நலத் திட்டங்களில் எல்லாம் பெரிதாக நாட்டம் இல்லாமல்தான் இருந்தார். ஆனால், 2006 தேர்தல் முடிவுகள், இது போன்ற இலவச திட்டங்களை நோக்கி அவரைத் திருப்பியது. அந்தத் தேர்தலில், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி எனப் பல இலவச அறிவிப்புகள் தி.மு.க-வுக்கு வெற்றியைத் தேடி தந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான், 2011 தேர்தலில், தி.மு.க முதலில் அறிவித்த, இலவச மிக்ஸி, ஃபேன், முதியோர் உதவித்தொகை உயர்வு, திருமண உதவித்தொகை உயர்வு ஆகியவற்றுடன் கூடுதலாக, இலவச கிரைண்டர், மாணவர்களுக்கு லேப்டாப் எனப் பல அதிரடி அறிவிப்புகளை அள்ளிவீசி வெற்றி வாகை சூடினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஆட்சிக்கு வந்த பிறகும், 110-விதியின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியின் மீது மிகப்பெரிய அதிருப்தி இல்லாதவாறு பார்த்துக்கொண்டார். தற்போது எடப்பாடி பழனிசாமியும் அதே பாணியைத்தான் கடைபிடிக்கிறார். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல அறிவிப்புகளையும் குறிப்பாக, பெண்களைக் கவரும் வகையில் பல திட்டங்களையும் எதிர்பார்க்கலாம் எனும் ஆளும் தரப்பினர்,

``பத்தாண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் தொடரும் போதும் மக்களிடம் மிகப்பெரிய அதிருப்தி எதுவும் எங்கள் ஆட்சியின் மீது இல்லை. மக்களின் தேவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக முதல்வர் நிறைவேற்றிவருகிறார். அதனால், மூன்றாவது முறையாகவும் நாங்கள்தான் ஆட்சிக்கட்டிலில் அமருவோம்’’ என மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஆனால், ``தமிழகத் தேர்தலைப் பொறுத்தவரை இது போன்ற இலவச அறிவிப்புகள், நலத்திட்ட உதவிகளைவிட கூட்டணிதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும். அ.தி.மு.க கூட்டணி இன்னும் இழுபறியாகவே இருக்கிறது. அதேவேளையில் மிக வலுவாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது தி.மு.க தலைமையிலான கூட்டணி. அதி.மு.க கூட்டணி பலமாக அமைந்தால் மட்டுமே தி.மு.க கூட்டணியை வெல்ல முடியும்'' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தி.மு.க கூட்டணித் தலைவர்கள்
தி.மு.க கூட்டணித் தலைவர்கள்

மேலும், ``தேர்தல் நேரத்தில் இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவது மிகப்பெரிய அளவில் கைகொடுக்காது. காரணம், தேர்தலுக்காகத்தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். கொரோனா காலத்தில் மக்கள்பட்ட துயரங்களால், ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பது மக்கள் மனதில் நிச்சயமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த முறை தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன. இலவச செல்போன், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம் எல்லாம் என்ன ஆகின என்றே தெரியவில்லை. இது போன்ற திட்டங்களை எதிர்பார்த்து ஏமாந்த மக்கள் நிச்சயமாக இந்த முறை நம்ப மாட்டார்கள்.

`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்...’; உற்சாகத்தில் எடப்பாடி - விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி

அதேபோல, இதுவரை நடைமுறைக்கு வந்த திட்டங்களால் பயனடைந்தவர்கள்கூட அப்படியே வாக்காளர்களாக மாறுவார்களா என்பது சந்தேகம்தான். காரணம், கடைசி நேரத்தில் என்னதான் செய்தாலும், இந்த ஆட்சி தொடர வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள் இந்நேரம் முடிவெடுத்திருப்பார்கள். நிச்சயமாக அதன்படிதான் வாக்களிப்பார்கள். ஆனால், இது போன்ற அறிவிப்புகள் எதிரணிக்கு மிகப்பெரிய சவாலை உண்டாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

விவசாயக் கடன்
விவசாயக் கடன்

அதனால்தான், நாங்கள் சொல்வதைத்தான், எடப்பாடி நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் என்கிற பிரசாரத்தை தி.மு.க-வினரும் மிகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றனர். ஆனால், மக்கள் யார் பேச்சை நம்பினார்கள் என்பது தேர்தல் முடிவுகளின்போது தெரிந்துவிடும்'' என்கின்றனர் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு