Election bannerElection banner
Published:Updated:

வெற்றிநடை போடும் விளம்பரங்கள்... இளைஞர் வாக்குகளில் தாக்கம் ஏற்படுத்துமா?

இளைஞர் வாக்கு
இளைஞர் வாக்கு

அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்கள் செய்கின்றன, இந்த விளம்பரங்கள் இளைஞர்களிடையே அரசியல்ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்துமா... ஏற்படுத்தாதா?

பரபரப்பாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் டிஜிட்டல் யுகத்தில், உணவு, உடை முதல் சிறிய ஊக்கு வரை எல்லாமும் கையில் தேடிவந்து சேரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. அந்த வகையில் அரசியலும் நாம் வைத்திருக்கும் கேட்ஜெட்களுக்குள் அடங்கிவிட்டது. முன்பெல்லாம் பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள், துண்டுக்காகிதங்கள் என இளைஞர்கள் ஓடி ஓடி அரசியல் கற்றனர். தற்போதுள்ள இளைஞர்கள் ஸ்மார்ட்டாக யூடியூப், வாட்ஸ்அப் என சமூக ஊடகங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அங்கும் அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு விளம்பரங்கள் செய்கின்றன. இந்த விளம்பரங்கள் இளைஞர்களிடையே அரசியல்ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்துமா... ஏற்படுத்தாதா? என்று இளைஞர்களிடமே கேட்டோம். அவர்களின் அரசியல் பல்ஸை இங்கே பார்க்கலாம்.

கோமல் ஹரிணி
கோமல் ஹரிணி
கோமல் ஹரிணி - கல்லூரி மாணவி, மதுரை

``பொதுவாக நான் அரசியல்வாதிகளைப் பற்றியும் எனது தொகுதி வேட்பாளர்களையும், அவர்களின் அறிவிப்புகளைப் பற்றியும் செய்தி விளம்பரங்களின் மூலம்தான் தெரிந்துகொள்வேன். சினிமாவும் எனக்கு அரசியலைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. எந்தெந்தத் துறைகளில் எப்படியெல்லாம் ஊழல் நடக்கிறது என்பதையும், இப்படி அரசியலில் நடந்துகொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதையும் நான் சினிமாவைப் பார்த்து தெரிந்துகொள்கிறேன். இவை அனைத்தும் என்னைச் சிந்திக்கவைக்கின்றன. தவிர இவருக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும் என விளம்பரங்களின் மூலம் நான் உணர்ந்ததில்லை. எனது வேட்பாளர்களைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு சுயமாக நன்கு சிந்தித்து வாக்களிப்பேன்” என்கிறார்.

கார்த்திகா.ஜெ - கல்லூரி மாணவி, திருவாரூர்.

``விளம்பரம் பார்த்து நான் ஓட்டு போடுறது இல்லை. விளம்பரம் அனைத்துக் கட்சிகளும் பண்ணுறாங்க. விளம்பரம் போடுற எல்லோருக்கும் ஓட்டுப்போட முடியாதுல்ல... தினமும் செய்தி பார்க்குறேன், அதைப் பார்த்து யாருக்கு ஓட்டு போடலாம்னு முடிவு பண்ணலாம். எல்லோருக்கும் சுயமா யோசிக்க அறிவு இருக்கு, அதை உபயோகப்படுத்தித்தான் ஓட்டு போடணும்.”

சுஸ்ருதன்
சுஸ்ருதன்
சுஸ்ருதன் - கல்லூரி மாணவர், கோயம்புத்தூர்.

``முதலில் எனது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலைப் பார்ப்பேன். அவர்களின் கட்சியைத் தாண்டி தனிநபரின் பின்புலத்தைப் பார்ப்பேன்.வெற்றிபெற்ற வேட்பாளர் இதற்கு முன்பு என்ன செய்தார், கடந்த முறை தோல்வி அடைந்தவர் என்ன செய்தார் என்பதை ஆராய்ந்து, அவர்கள் தற்போது என்னென்ன அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள்... அந்த அறிக்கைகளை நமது நிதியைக்கொண்டு செயல்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்பேன்.

ஓரளவுக்குச் செய்யக்கூடிய வாக்குறுதிகளைக் கொடுப்பவர்களை ஆதரிக்க முயல்வேன். மேலும், ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை இருக்கும். அப்படியிருக்க என் தொகுதியில் வெற்றிபெற்று எங்கள் தொகுதி மக்களின் பிரதிநிதி ஆகப்போகிறவர், எங்களில் ஒருவராக எங்கள் தொகுதியைப் பற்றி நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும் என நினைப்பேன். இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான் எனது வாக்கு இருக்கும். செய்தி, விளம்பரம் அரசியல்வாதிகளின் அறிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் கருவி. அதைப் பார்த்து மட்டுமே நான் வாக்களிக்க மாட்டேன்.”

ஹரி பாரதி
ஹரி பாரதி
ஹரி பாரதி - கல்லூரி மாணவர், திருவாரூர்

``அது எப்படி விளம்பரத்தைப் பார்த்து ஓட்டுப் போட முடியும்! அவங்க ஓட்டு வாங்க அனைத்துவிதமான விளம்பரங்களையும் செய்யத்தான் செய்வாங்க. பெண்களுக்கு முழுப் பாதுகாப்புன்னு விளம்பரம் போடுறாங்க, ஆனா பொள்ளாச்சி சம்பவம் நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். அதெல்லாம் பார்த்து எப்படி ஓட்டுப் போட முடியும்? களத்தில் நமக்காகப் போராடுறவங்க யாருன்னு நமக்குத் தெரியும்! அவங்களுக்குத்தான் என் ஓட்டு!”

ர.மகேஷ் குமார்
ர.மகேஷ் குமார்
ர. மகேஷ் குமார் - தனியார் நிறுவன ஊழியர், கும்பகோணம்

``இப்போ பாக்குற டிஜிட்டல் விளம்பரங்களை ஆரம்பிச்சது தி.மு.க-தான். பிரசாந்த் கிஷோர் அறிவுரைகள்படி தி.மு.க நடந்துக்க அதைக் கொஞ்சம் பெருசா காப்பி பண்ணி அ.தி.மு.க விளம்பரம் செய்றாங்க. உட்கட்சிப் பூசல்களையும் கடந்து அ.தி.மு.க விளம்பரங்களின் மூலம் மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது. தி.மு.க தன் கறைகளைத் துடைக்க மெனக்கெட வேண்டும். மக்கள் கள நிலவரங்களை ஆராய்ந்துதான் வாக்களிப்பார்கள் என்றாலும் எம்.ஜி.ஆர் என்னும் தலைவரின் எழுச்சியே ஊடகங்கள் மூலம்தான் என்பது முந்தைய தலைமுறையின் கள நிலவரம்! இளைஞர்கள் கள நிலவரங்களையும் கொள்கைகளையும் ஆராய்ந்துதான் வாக்களிப்பார்கள். விளம்பரங்கள் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தாது!”

செய்யது இப்ராகிம் ஆஷிக்
செய்யது இப்ராகிம் ஆஷிக்
செய்யது இப்ராகிம் ஆஷிக் - தனியார் ஊழியர், தூத்துக்குடி

``மக்களுக்கு யார் நல்லது செய்வார்களோ, அவர்களுக்குத்தான் வாக்களிப்பேன். விளம்பரங்களைப் பார்த்து நிச்சயமாக வாக்களிக்க மாட்டேன். அது ஏழை, எளிய மக்களை ஏமாற்றும் செயல் என நான் நினைக்கிறேன். தொலைக்காட்சி, இணையம் என்று எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள்தான் உள்ளன. இவர்கள், விளம்பரங்களுக்குச் செலவிடும் தொகையை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். இவர்களுடைய விளம்பரங்களைப் பார்த்துப் பார்த்து எப்போது தேர்தல் முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். அரசியல் கட்சிகள் இன்றைக்கு கார்ப்பரேட் கைவசம் சென்றுவிட்டன. அதனால்தான் விளம்பரங்களுக்கு நிறையத் தொகையைச் செலவிட்டு, மக்கள் மனதில் இடம்பிடித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.”

பாலாஜி - தனியார் நிறுவன மேலாளர், சென்னை.

``தொகுதியிலுள்ள அடிப்படைப் பிரச்னைகள், வேட்பாளர்களின் செயல்பாடுகளைப் பொறுத்துத்தான் தேர்தலில் வாக்களிப்பேன். ஊடகங்களின் மூலமாக மக்களிடம் எளிதில் சென்றடைய முடியும். அதனால்தான் அரசியல் கட்சிகள் ஊடகங்களைப் பயன்படுத்திவருகின்றனர. குறிப்பாக, தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எனவேதான், அரசியல் கட்சிகள் சினிமாவுக்கும் விளம்பரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அது இந்தத் தேர்தலில், நிச்சயமாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, ஓட்டுகளாக மாறும். இந்த விளம்பரங்களின் மூலம், ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளைப் பற்றி வெறுப்பு பிரசாரம்தான் செய்து வருகிறது. மக்கள் நலனைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதனால், நான் விளம்பரங்களைப் பார்த்து வாக்களிக்க மாட்டேன்.”

ஸ்ரீராம் குமார் - கல்லூரி மாணவர், திருநெல்வேலி

``தமிழக அரசியல் சூழலில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு மக்களுக்கான செயல்திட்டங்களை வகுப்பவர்களுக்கே, நான் ஓட்டுப்போடுவேன்‌. அரசியல் கட்சிகள், கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பதில், ஒரு நன்மையும் இல்லை. ஒவ்வொரு கட்சியும், தங்களுடைய கொள்கைகளை, திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்ல விளம்பரங்களைப் பயன்படுத்துகின்றனர். அது அந்தந்தக் கட்சியின் தனிப்பட்ட விருப்பம். விளம்பரங்கள், தேர்தலில் மிக முக்கியமான பேசுபொருளாக இருக்கும். இன்றைக்கு திரைத்துறையிலிருந்து நிறைய பேர் கவர்ச்சிகரமான பிம்பங்களாகத் தேர்தல் அரசியலில் குதிக்கிறார்கள். தனிமனித பிம்பத்தைத் தவிர்த்து கொள்கைகளைப் பிரதானமாக முன்னிறுத்தினால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே, அரசியலில், மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். விளம்பரம், சினிமா போன்ற நாயக பிம்பங்களைத் தவிர்க்க வேண்டும்.”

ஜெகன் - இயற்கை வேளாண்மை வழிகாட்டி, திருச்சி.

``ஊடகங்களில் வரும் விளம்பரங்கள், பாடல்கள் இவை அனைத்துமே போலியான, செயற்கைத்தனம் வாய்ந்தவையாகவே எனக்குத் தோன்றுகிறது. பிற அரசியல் கட்சிகளின் மேல் நேர்மறை அபிப்ராயங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக, அவர்களின் அரசியல் கட்சியின் கொள்கைகள் மக்களிடம் சென்று சேர்க்க முயல வேண்டும். விளம்பரத்துக்கு எதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டும்... அதனால் இவர்கள் தேர்தலுக்குப் பின்னான திட்டம் என்ன, மக்களை நலப்படுத்துவதா அல்லது தங்கள் கட்சியை வலுப்படுத்துவதா என்ற எதிர்மறையான எண்ணங்கள் தோன்றத்தான் வழி வகுக்கிறது. அதனால் என் வாக்கு என்றும் எதையும் விளம்பரப்படுத்தாத கட்சிக்கு மட்டுமே.”

லதா - கல்லூரி மாணவி, நாமக்கல்.

``என்னதான் கள விவரங்களை ஆராய்ந்தாலும் நமக்குத் தாண்டிய சில விஷயங்கள், எங்கள் பிறப்புக்கு முன் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், அதனால் பலனடைந்தவர்கள் என அனைத்தும் ஊடகங்கள் வழியாகவும், திரைப்படங்கள் வழியாகவும்தானே என்னால் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்... நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய விளம்பரங்களும் உதவியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.”

Election: `ஓட்டுக்கு பணம் பெறுவது சரியா?’ - என்ன சொல்கிறார்கள் முதன்முறை வாக்காளர்கள்?

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆள நினைக்கும் அரசியல்வாதிகள், தேர்தல் நேரங்களில் விளம்பரங்களுக்குக் கோடிக்கணக்கில் செலவிடுவதை முதலீடாக நினைத்துவருகிறார்கள். பல கட்சிகள் சொந்தமாக சேனல்களை நடத்தி செய்திகளையே பரப்புரையாகத்தான் செய்துவருகிறார்கள். இன்றைய இளைஞர்கள் இந்தச் செயல்களை எதிர்க்கவில்லை. மாறாக, அவர்களைத் தெளிவாக யோசிக்கவைப்பதற்குக் குறைந்தபட்ச உதவியாக ஊடகங்கள்தான் உதவுகின்றன என்பது மறுக்க முடியாத நிதர்சனம். இருப்பினும் இளைஞர்கள் தங்கள் சுய சிந்தனையைக் கொண்டே வாக்களிக்க விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது!

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

வெற்றிநடை போடும் விளம்பரங்கள்... இளைஞர் வாக்குகளில் தாக்கம் ஏற்படுத்துமா?

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு