Published:Updated:

`நதிநீர் பங்கீட்டுக்கு 5 பேர் கொண்ட குழு' - 15 ஆண்டுகளுக்குப்பின் நடந்த இரு மாநில பேச்சுவார்த்தை!

யானைமலை ஆறு, நீராறு நல்லாறு திட்டம், சிறுவாணி ஆறு பிரச்னைகள் உள்ளிட்ட பிரச்னைகளும் இந்தக் கமிட்டி மூலம் ஆய்வுசெய்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

meeting between two states
meeting between two states

தமிழ்நாடு - கேரளா இடையே பல்வேறு நதிநீர் பிரச்னைகள் நிலுவையில் இருக்கின்றன. குறிப்பாக, சிறுவாணி அணை, பரம்பிகுளம் -ஆழியாறு, ஆனைமலையாறு, புன்னம்புழா ஆகிய ஆறுகளின் நீர் பங்கீட்டில் இருமாநிலங்களுக்கிடையே பிரச்னைகள் நீடித்துவருகின்றன. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக, இரு மாநிலங்களுக்கும் இடையே தீர்வு எட்டியபாடில்லை. இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இருமாநிலங்களுக்கிடையிலான பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால், பருவமழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீர் கிடைக்காமல், விவசாயம் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என இருமாநில விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

edappadi palanisamy and pinarayi vijayan
edappadi palanisamy and pinarayi vijayan

அண்மையில், `நதிநீர் பிரச்னை குறித்துப் பேச முன்வர வேண்டும்’ என்று பினராயி விஜயனிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். அதன்அடிப்படையில், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது. அதையடுத்து, இரு மாநில முதல்வர்களும் நேரில் சந்தித்துப் பேசி முடிவெடுக்க தேதி குறிப்பிடப்பட்டது. அதன்படி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 3 மணி அளவில் இருமாநில முதல்வர்களும் நேரில் சந்தித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்-அமைச்சரின் முதன்மைச் செயலாளர் சாய்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

`சீனாவின் துயரம் மஞ்சள் நதி;இந்தியாவின் துயரம் இந்த ஆட்சி!' - கே.எஸ்.அழகிரி

இக்குழுவினருடன் கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மற்றும் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். 15 ஆண்டுகளுக்குப் பின், தமிழக - கேரள முதல்வர்கள் சந்தித்துள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், அப்போதைய கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

tamilnadu cm
tamilnadu cm

அந்தப் பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. அதன் பிறகு இப்போதுதான் அதுபோன்ற பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரு மாநில முதல்வர்களும் ஆலோசனை நடத்தியதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ``தண்ணீர் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இரு மாநிலத்தவர்களும் வேறுபாடு இல்லாமல் சகோதரர்களாக உள்ளனர். இரு மாநில பிரச்னைகளைத் தீர்க்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அந்தக் குழு ஒரு வாரத்துக்குள் அமைக்கப்படும். முல்லைப் பெரியாறில் இருந்து மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ``15 ஆண்டுகளுக்குப் பிறகு இருமாநிலங்களும் நீர் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. ஏற்கெனவே பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் எப்படி நீர் பங்கீடு செய்துகொள்வது என்பதற்காக இரண்டு மாநிலத்திலும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு ஆய்வு செய்து, அந்த ஆய்வின் அடிப்படையில் அந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

two sate cm
two sate cm

அதேபோல, பாண்டியாறு, புன்னம்புழா திட்டம் நிறைவேற்றுவதற்கு தனிக்குழு அமைக்கப்படும். அதில் உள்ள பிரச்னைகள் ஆய்வுசெய்து அவை நிறைவேற்றப்படும். யானைமலை ஆறு, நீராறு நல்லாறு திட்டம், சிறுவாணி ஆறு பிரச்னைகள் உள்ளிட்ட பிரச்னைகளும் இந்தக் கமிட்டி மூலம் ஆய்வுசெய்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து ஆய்வுசெய்து தீர்வு காணப்படும். பிரச்னையைத் தீர்க்க கமிட்டி அமைத்துள்ளோம். இருமாநில மக்களும் சகோதரர்களாகப் பழகி வருகின்றனர்” என்றார்.