Published:Updated:

மதுசூதனன் மறைவு: அதிமுக அவைத்தலைவர் ஆகிறாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

அதிமுக-வின் அடுத்த அவைத்தலைவர் யார் என்கிற விவாதம் தமிழக அரசியல் களத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த ஜூலை 18-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று மதியம் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தநிலையில், அ.தி.மு.கவின் அடுத்த அவைத்தலைவர் யார் என்கிற விவாதம் தமிழக அரசியல் களத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

அவைத்தலைவர் மதுசூதனன்
அவைத்தலைவர் மதுசூதனன்

இது தொடர்பாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம்,

'' கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன்,ஜெயக்குமார், செங்கோட்டையன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பட்டியலில் இருக்கின்றன. ஆனால், ஏற்கெனவே அ.தி.மு.கவைக் கவுண்டர் கட்சியாக மாற்றுகிறார்கள் என்கிற முணுமுணுப்பு கட்சிக்குள்ளேயே இருக்கிறது. அதனால், அனுபவமும் தகுதியும் இருந்தாலும் செங்கோட்டையனுக்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறோம். அதேபோல, வன்னியர் உள் இடத்துக்கீட்டால் ஏற்கெனவே தென் மாவட்டக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால், கே.பி. அன்பழகனுக்கான வாய்ப்பும் குறைவே. சீனியர், சபாநாயகராக இருந்தவர் என்கிற அடிப்படையில் தனபாலுக்கு வாய்ப்பிருக்கிறது.

அ.தி.மு.க அவைத்தலைவர் மாற்றம்? - எடப்பாடியின் மூவ்... செக் வைக்கும்  பன்னீர்!

ஆனால், கட்சியை கைப்பற்ற சசிகலா முனைப்பு காட்டும் இந்த வேளையில் அவைத்தலைவர் என்ற பொறுப்பு என்பது மிக முக்கியமானது. ஆனால், தனபால் அதிரடியாக செயல்படமாட்டார் என்ற கருத்தும் நிலவுவதால் அவருக்கான வாய்ப்பும் மிகக் குறைவுதான். வன்னியர் உள் இட ஒதுக்கீட்டால் அதிருப்தியில் இருக்கும் தென் மாவட்ட நிர்வாகிகளை, தொண்டர்களைச் சாந்தப்படுத்தும் முயற்சியாக, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவரும் சீனியருமான திண்டுக்கல் சீனிவாசனைக் கொண்டு வரலாம். ஆனால், இவரைவிட, அதிக வாய்ப்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கே இருக்கிறது. காரணம், சசிகலாவை எதிர்த்து மிகத் துணிச்சலாகப் பேசி வருபவர் அவர் மட்டுமே. எதிர்காலத்தில் கட்சியைக் கைப்பற்ற சசிகலா ஏதாவது நடவடிக்கையில் இறங்கினால்கூட சென்னையில் இருந்து அதை எதிர்கொள்வதற்கு ஜெயக்குமார்தான் பொருத்தமான நபராக இருப்பார் என்று கட்சித் தலைமை நினைக்கிறது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

அதுமட்டுமல்ல, நாங்கள் சொன்ன பட்டியலில் ஜெயக்குமார் தவிர மற்ற அனைவருமே எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர். அதனால், கட்சியில் முக்கியமான ஒரு பதவியை அவர் எதிர்பார்க்கிறார். எடப்பாடியாரின் சாய்ஸ் ஜெயக்குமார்தான். இவருக்கு ஓகே சொல்லாவிட்டால், எங்கே எடப்பாடி தனக்கு நெருக்கமான வேறு யாரையாவது போட்டுவிடுவார் என்பதால், ஓ.பி.எஸ்ஸும் ஒப்புக்கொள்வார் என்றே நினைக்கிறோம். பொன்னையன், வளர்மதி பெயர்கள் எல்லாம் அவைத்தலைவர் பொறுப்புக்கு அடிபடுகின்றன. ஆனால், பொன்னையன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். வளர்மதிக்கு தற்போதுதான் மாநில மகளிரணி பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதனால், அவர்கள் வருவதற்கான வாய்ப்பில்லை'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு