Published:Updated:

‘நாஜி அரசு போல ஸ்டாலின் அரசு...’ சுவாமியின் சர்ச்சைப் பட்டாசு வெடிக்குமா?

ஆட்சி அமைந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், ஸ்டாலின் அரசுக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநருக்கு பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கடிதம் சலசலப்பை ஏற்படுத்தினாலும், அதை யாரும் பொருட்படுத்தவில்லை.

பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்து எப்போதுமே விமர்சனங்களை முன்வைத்துவருபவர் பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி. 1989-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியை நான்தான் கலைத்தேன் என்று அவர் பெருமையுடன் சொல்லிக்கொள்வது உண்டு. தற்போது, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அமைந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், இந்த ஆட்சிக்கு எதிராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக ட்விட்டரில் சுவாமி தெரிவித்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளை ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார். அவர் பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தார் என்றும், பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்துக்கு புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன.

அந்தப் பள்ளியில் தம்மைப் போலவே, வேறு சில ஆசிரியர்களும் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துவந்ததாகவும் போலீஸ் விசாரணையில் ராஜகோபாலன் கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பான காவல்துறையின் விசாரணைக்கு பள்ளி முதல்வர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் ஒத்துழைக்க மறுத்ததாகவும் ஆரம்பத்தில் செய்திகள் வந்தன.

பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அந்தப் பள்ளி நிர்வாகம் மீது சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இன்னொருபுறம், சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த சூழலில்தான், ஸ்டாலின் அரசுக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சுப்பிரமணியன் சுவாமி புகார் கடிதம் எழுதினார். தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இன்றுவரை அமலில் இருக்கிறது. பூதாகரமாகக் குறிப்பிடுகிற அளவுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை.

ஆனால், “தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் ஆதரவால் பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது” என்று அந்தக் கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். “பிராமணர்கள் மீது குறிவைத்து, தாக்குதல் நடத்தப்படுகிறது. இது ஜெர்மனி நாஜியின் தொடக்கக் கால நிகழ்வுபோல இருக்கிறது. பிராமணர் சமூகத்தின் ஆசிரியர்கள், பூசாரிகள் ஆகியோர் குறிவைக்கப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தாங்கள் கவனம் செலுத்த வேண்டும். திராவிடர் கழகம், தி.மு.க-வில் இருக்கும் சிலர் மற்றும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஆகியோர்தான் இந்த நிலைக்குக் காரணம்” என்று சுவாமி கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசிரியர் ராஜகோபால்
ஆசிரியர் ராஜகோபால்

அத்துடன், “புதிய அரசு பணியைத் தொடங்கியுள்ள சூழலில், சட்டப்பிரிவு 356-ஐப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவது பொருத்தமாக இருக்காது. ஆனாலும், இதுபோன்ற பிரச்னைகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். எனவே, தமிழகத்தில் தற்போது பிராமணர்கள் பாதிக்கப்படுவது குறித்து தமிழக தலைமைச்செயலாளரை அழைத்து அறிக்கை பெற்று அவருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார். இது கூடுதல் சர்ச்சை.

பின்னர் இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுப்பிரமணியன் சுவாமி, “ஹிட்லர் காலத்தில் யூதர்கள் குறிவைக்கப்பட்டதுபோல, இப்போது குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் குறிவைக்கப்படுகிறார்களோ என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதனால்தான் ஆளுநருக்கு கடிதம் எழுதினேன்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அந்தப் பள்ளியை அரசு கையிலெடுக்கப்போவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கூறுகிறார். அந்தப் பள்ளியைப் பற்றி சமூக ஊடகங்களில் கன்னாபின்னாவென்று எழுதுகிறார்கள். பிராமணர்களை டார்கெட் செய்கிற போக்கு நூறு ஆண்டுகளாக நடக்கிறது. இதனால், அச்சுறுத்தலான சூழல் உருவாகிறது. ஏதோ ஓர் இடத்தில் இதை நிறுத்த வேண்டும்” என்று சுவாமி ஆவேசப்பட்டார்.

பத்ம சேஷாத்ரி பள்ளி
பத்ம சேஷாத்ரி பள்ளி

வழக்கம் போலவே, சுப்பிரமணியன் சுவாமி தொடர்பாக கருத்து தெரிவிக்க பா.ஜ.க தலைவர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ‘பா.ஜ.க-வின் மூத்த தலைவர்’ என்று அழைக்கப்படும் சுப்பிரமணியன் சுவாமி பா.ஜ.க-வில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அதே நேரத்தில், அதிகார மையத்தில் அவருக்கென செல்வாக்கு உண்டு.

ஆகவேதான், பா.ஜ.க-வில் இருந்துகொண்டே பா.ஜ.க-வை விமர்சிக்கக்கூடிய ஒருவராக அவர் இருக்கிறார். மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் உள்பட பல விவகாரங்கள் குறித்து கடும் விமர்சனங்களை சுவாமி முன்வைப்பது உண்டு. ஆனால், அதற்கு பா.ஜ.க-வுக்குள் இருந்து எதிர்வினைகள் வருவதில்லை.

மோடி அரசுடன் தி.மு.க அரசை இணக்கம் காட்ட வைக்க திட்டமிடுகிறதா பா.ஜ.க? - ஒரு பார்வை!

டெல்லியில் அரசியல் செய்தாலும், சொந்த மாநிலம் என்பதால் தமிழ்நாட்டின் மீதும் எப்போதும் ஒரு கண் வைத்திருப்பார். நடிகர் ரஜினியை அரசியலுக்கு கொண்டுவருவதில் பா.ஜ.க தரப்பு மும்முரமாக இருந்தது. ரஜினியை முன்னிறுத்தி அதிகாரத்துக்கு வந்துவிடலாம் என்று கணக்குப்போட்டார்கள். அதைக் கடுமையாக சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்தார், ‘ரஜினியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்தால் வேறு மாநிலத்துக்கு சென்று அரசியல் செய்வேன்’ என்று ஆத்திரப்பட்டார்.

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட வேண்டும்” என்ற கருத்தையே அவர் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். ஆனால், அவரது கருத்துகளை தமிழ்நாடு பா.ஜ.க-வினர் கண்டுகொள்ளவில்லை.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாமல், பல கோரிக்கைகளையும் அவர் எவ்வப்போது எழுப்பிக்கொண்டே இருப்பார். சமீபத்தில், தலைநகர் டெல்லிக்கு ‘இந்திரப்பிரஸ்தா’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றார். டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்றார். கொரோனாவுக்கு எதிராக தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு நிதின் கட்கரியைத் தலைமை தாங்கச் செய்ய வேண்டும் என்றார். ஆனால், எதையும் பா.ஜ.க தலைமை கண்டுகொள்ளவில்லை. அதைப்போலவே, தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள ஸ்டாலின் அரசுக்கு எதிராக சுவாமியால் எழுதப்பட்ட கடிதம் மீது பன்வாரிலால் புரோஹித் என்ன நடவடிக்கை எடுப்பாரென்பது ஒருபுறம் இருக்கட்டும்.

ஆசிரியர் ஒருவரால் பள்ளி மாணவவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதில், சுவாமி குறிப்பிடுகிற சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அவர்களைப் பற்றியெல்லாம் சுவாமிக்கு கவலை இல்லையா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு