Published:Updated:

`அரசியல் விளையாட்டுகளால் எனக்கு எந்த லாபமும் கிடைக்கப்போவதில்லை!' - கர்நாடக சபாநாயகர்

கலிலுல்லா.ச
சத்யா கோபாலன்

``அவர்கள் கொடுத்த அந்த ராஜினாமா கடிதம் குறித்து, அது உண்மையாக, அவர்கள் விருப்பத்தின் பேரில் கொடுக்கப்பட்டதா என்று ஆராயவேண்டும்” என கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ரமேஷ்குமார்
சபாநாயகர் ரமேஷ்குமார் ( ANI )

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை கவிழ்க்க, பி.ஜே.பி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகச் சொல்லப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ-க்கள், ஜூலை 6-ம் தேதி, திடீரென அம்மாநில சட்டமன்றச் செயலரிடம் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

ரமேஷ்குமார்
ரமேஷ்குமார்
ANI

ராஜினாமா கடிதம் குறித்துப் பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், தனக்கு வேறு வேலை இருப்பதாகவும், அது தொடர்பாக திங்கள் அல்லது அதற்குமேல் பேசிக்கொள்ளலாம் என்று நேற்று கூறியிருந்தார். இதனிடையே பதவியை ராஜினாமா செய்த அனைத்து எம்.எல்.ஏ-க்களும் மும்பை சென்றுவிட்டனர். ராஜினாமா கடிதம் கொடுத்து, ஐந்து நாள்களுக்கு மேல் ஆன நிலையில் சபாநாயகர் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுப்பதாக கூறி, எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது `எம்.எல்.ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் இன்றே முடிவெடுக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்தனர்.

‘சபாநாயருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறபிக்க முடியாது என்றும் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா தொடர்பாக முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் வேண்டும்’ என ரமேஷ்குமார் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

இந்த சந்திப்புக்குப்பின் பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், ``கர்நாடக அரசின் சட்டவிதிப்படி, தானாக முன்வந்து ராஜினிமா செய்பவர்களின் கடிதங்கள் முறையான ஃபார்மெட்டில் இருக்கவேண்டும். 13 எம்.எல்.ஏக்கள் கடந்த வாரம் என் அலுவலகத்து வந்தனர். ஆனால், அவர்களின் ராஜினாமா கடிதம் முறையாக இல்லை. எம்.எல்.ஏக்கள் தற்போது சரியான ஃபார்மெட்டில் தங்கள் ராஜினாமா கடித்தத்தை கொடுத்துள்ளனர். நான் அந்த ராஜினாமா கடிதம் குறித்து, அது உண்மையாக, அவர்கள் விருப்பத்தின் பேரில் கொடுக்கப்பட்டதா என்று ஆராயவேண்டும்.

இந்த சூழலுக்கு நான் காரணமல்ல. ஏற்கெனெவே எனக்கு 70 வயதாகிவிட்டது. இந்த வயதில் இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளால் எனக்கு எந்த லாபமும் கிடைக்கப்போவதில்லை.எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா அளித்த ஜூலை 6-ம் தேதி பிற்பகல் 1:30 மணி வரை நான் சட்டமன்ற வளாகத்தில்தான் இருந்தேன். ஆனால் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் வந்தனர். அவர்கள் வருவதாக எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. என்னைப் பார்க்க அவர்கள் அனுமதியும் வாங்கவில்லை. எனவே எம்.எல்.ஏக்கள் வருவது தெரிந்து நான் அங்கிருந்து ஓடிவிட்டதாகக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்றிலும் பொய்யானது.

ரமேஷ் குமார்
ரமேஷ் குமார்
ANI

இங்கு நடக்கும் அனைத்து சம்பவங்களையும் நான் வீடியோவாக பதிவு செய்து உச்சநீதிமன்றத்தில் அளிப்பேன். எம்.எல்.ஏக்களை காப்பதோ அல்லது அவர்களை நீக்குவதோ என் பணி கிடையாது. நான் அரசியலமைப்பை விரும்புகிறேன். அதன் அடிப்படையில்தான் செயல்படுவேன். என்னால் மின்னல் வேகத்தில் செயல்பட முடியாது. யாருக்கு ஆதரவாகவும் செயல்படமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.