Published:Updated:

ஜார்க்கண்ட் அரசியலில் டார்கெட் செய்யப்படுகிறாரா முதல்வர் ஹேமந்த் சோரன்?!

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், நம்பிக்கை இல்லா தீர்மானம், அமலாக்கத்துறை சோதனை என தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வரான ஹேமந்த் சோரனுக்கு சிக்கல்கள் அணிவகுக்கிறது...

ஜார்க்கண்ட் அரசியலில் டார்கெட் செய்யப்படுகிறாரா முதல்வர் ஹேமந்த் சோரன்?!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், நம்பிக்கை இல்லா தீர்மானம், அமலாக்கத்துறை சோதனை என தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வரான ஹேமந்த் சோரனுக்கு சிக்கல்கள் அணிவகுக்கிறது...

Published:Updated:
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

2019 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா - காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது. அப்போது ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 25 இடங்களை வென்ற பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

சோரன் முதலமைச்சரான பிறகு நிலக்கரித்துறையை தன்வசமே வைத்திருந்தார். இந்நிலையில் தனது அதிகாரங்களை பயன்படுத்தி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தனக்கு சாதகமாக ஒதுக்கியதாக பாஜக குற்றச்சாட்டு வைத்தது. இதை விசாரித்த தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இல் பிரிவு  9-ஏ மீறிப்பட்டிருப்பதாகக் கூறி ஹேமந்த் சோரனை பதவி விலக உத்தரவிட வேண்டுமென ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

நிலக்கரி
நிலக்கரி

எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கப்பட்டால், தன் முதலமைச்சர் பதவி பறிபோகும் என கணக்கு போட்டு, தன் மனைவியை முதலமைச்சராக்க முடிவு செய்தார். இந்நிலையில்தான் அவர் ஆட்சியின் மீது  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அப்போது, பாஜக சார்பில் முக்தி மோச்சா கட்சியினை சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசி பாஜக வசம் இழுக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. முதலமைச்சர் சோரனும் அதே கருத்தையும் முன் வைத்தார்.

ஹேமந்த் சோரன் - ராம்நாத் கோவிந்த் - கல்பனா சோரன்
ஹேமந்த் சோரன் - ராம்நாத் கோவிந்த் - கல்பனா சோரன்
ட்விட்டர்

சட்டசபை கூடுவதற்கு முன்னதாக பேசிய சோரன், பாஜக உள்நாட்டு போரை ஏற்படுத்தி வருவதாகவும் கலவரங்களை ஊக்குவித்து வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். அது மட்டுமில்லாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருக்கும் வரை இதுபோன்ற சதிகள் நிலைக்காது என்றும் இதற்காக தகுந்த அரசியல் பதிலடி கிடைக்கும் என்று கூறினார். மேலும் பாஜக ஜனநாயகத்தை அழித்து வருவதாகவும், நம்பிக்கை தீர்மானத்தில் தன்னை தோற்கடிக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டையும் முன் வைத்தார். இது ஜார்கண்ட் அரசியலில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியது.

ஆனால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் முக்தி மோச்சா கட்சி 48 ஆதரவு வாக்குகளைப் பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இந்த பிரச்னை ஓய்திருக்கும் நிலையில்,  தற்போது  மீண்டும் ஜார்க்கண்ட் அரசுக்கு அடுத்த தலைவலியாக அமலாக்க துறை வந்துள்ளது. சுரங்க ஓதுக்கீட்டில் பண மோசடி செய்ததாக முதலமைச்சர் மீது விசாரணை நடத்த அமலாக்கத் துறை  சம்மன் அனுப்பியுள்ளது.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

குறிப்பாக இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக சொல்லப்படுபவரும் முதலமைச்சருக்கு மிக நெருங்கியவருமான பங்கஜ் மிஸ்ரா என்பவர் வீட்டில் நடத்திய சோதனையில் ஹேமந்த் சோரனின் பாஸ்புக் மற்றும் அவர் கையெழுத்திட்ட சில காசோலைகளை அமலாக்கத்துறை சார்பாக கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த வியாழக்கிழமை சோரனக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது அமலாக்கத்துறை.

இந்த விசாரணைக்கு தான் அஞ்சப்போவதில்லை என்று முதலமைச்சர் சோரன் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த நடவடிக்கைகளை சோரன் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.