Election bannerElection banner
Published:Updated:

அ.தி.மு.க., தி.மு.க-வை அசைத்துப் பார்க்குமா கமல் கூட்டணி?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்துவரும் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., தி.மு.க கூட்டணிகளுக்கு எந்தளவுக்கு சவாலாக இருக்கும்?

பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியை அகற்றிவிட வேண்டுமென்று, ‘ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போறாரு...’ என்று தி.மு.க தரப்பினர் தமிழகத் தேர்தல் களத்தை அதிரவைத்துக்கொண்டிருக்கும் சூழலில், ‘நான் தான் மாற்று..’ என்று டார்ச் லைட்டை உயர்த்திப்பிடித்துக்கொண்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வந்துகொண்டிருக்கிறார். ‘அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஊழல் கட்சிகள்.. நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற நிர்வாகத்தைத் தருவேன்’ என்று வாக்குறுதி அளிக்கிறார் கமல்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகத்தில் செல்வாக்குமிக்க இரு பெரும் ஆளுமைகளான கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த பிறகு, புதிய அரசியல் கட்சியை கமல் தொடங்கினார். மதுரையில் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் உதயமானது. ஊழல் எதிர்ப்பைப் பிரதானமாக அவர் முன்வைத்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல்தான் ம.நீ.ம சந்தித்த முதல் தேர்தல். அதில் நகர்ப்புறங்களில் அதிகமான வாக்குகளை இந்தப் புதிய அரசியல் கட்சி பெற்றது. குறிப்பாக, 3.7 சதவிகிதம் வாக்குகளை வாங்கியது.

தற்போது முதன்முறையாக சட்டமன்ற பொதுத்தேர்தலை ம.நீ.ம சந்திக்கிறது. வளரும் கட்சிகள் என்று சொல்லப்படும் சிறிய கட்சிகளும் அமைப்புகளும் ம.நீ.ம-வுடன் கூட்டணி சேருவதற்கு ஆர்வம் காட்டிவருகின்றன. அ.தி.மு.க ஆதரவு நிலையில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திடீரென கமல்ஹாசனுடன் கைகோத்துள்ளார். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகரும் ‘அப்துல்கலாம் லட்சியக் கட்சி’யின் தலைவருமான வெ.பொன்ராஜ், திடீரென மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து, அந்தக் கட்சியில் துணைத் தலைவராகிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று பெரம்பலூரில் வெற்றிபெற்றார் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பச்சைமுத்து என்ற பாரிவேந்தர். அவரது கட்சியும் தற்போது ம.நீ.ம-வில் இணைந்துள்ளது. ச.ம.க-வும் ஐ.ஜே.கே-வும் தற்போது ம.நீ.ம-வின் முக்கியக் கூட்டணிக் கட்சிகளாக இருக்கின்றன. ஆகவேதான், இந்த இரு கட்சிகளுக்கும் தலா 40 தொகுதிகளை கமல்ஹாசன் வழங்கியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தலின்போது கமல் பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் நிறைய மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் பிரசாரம் குறித்து யோசிப்பதற்கு முன்பாகவே முதல் ஆளாகக் களமிறங்கி பிரசாரத்தைத் தொடங்கியவர் கமல்ஹாசன். நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு கூடிய கூட்டத்தைக் காட்டிலும் இந்த முறை சற்று அதிகமாகவே கூட்டம் கூடுகிறது. திரைப்பிரபலம் என்பதால் அவரைப் பார்ப்பதற்கு மக்கள் கூடத்தான் செய்வார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

நகர்ப் புறங்களில் அவருக்கான ஆதரவு வெளிப்படையாகவே தெரிந்தது. நிறைய புதிய திட்டங்களை முன்வைக்கிறார். குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு ஊதியம் தருவோம் என்ற அறிவிப்பை ம.நீ.ம-தான் முதலில் வெளியிட்டது. தற்போது அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இது மாறியிருக்கிறது. ஆகவே, நான் முன்வைக்கும் திட்டங்களை காப்பியடிக்கிறார்கள் என்று கழகங்களை கமல் விமர்சிக்கிறார்.

வெறும் நடிகராக இருந்த காலத்திலும் சரி, அரசியல் கட்சியைத் தொடங்கி பிறகு சமீபத்திய நாள்கள் வரை அரசியல் ரீதியான விமர்சனங்களை மட்டுமே கமல் முன்வைத்துவந்தார். ஆனால், கடந்த சில நாள்களாக தனிப்பட்ட முறையில் தலைவர்களை விமர்சிப்பது, அதாவது தனிமனிதத் தாக்குதலில் கமல் இறங்கியிருக்கிறார். குறிப்பாக, தி.மு.க தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கிறார்.

இரண்டு கட்சிகளுக்கும் மாற்று என்று சொல்லிக்கொள்ளும் கமலும், இரண்டு கழகங்களும் கையாளுகிற தனிமனிதத் தாக்குதல் என்ற அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார். இந்த நிலையில், அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ம.நீ.ம எந்தளவுக்கு சவாலாக இருக்கும் என்ற அலசல் அரசியல் அரங்கில் நடந்துகொண்டிருக்கிறது.

கமல்ஹாசன்  பிரசாரம்
கமல்ஹாசன் பிரசாரம்

இது தொடர்பாக திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணாவிடம் பேசினோம். “தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தளவில் தீர்மானிக்கக்கூடிய சக்திகள் என்பது தி.மு.க-வும் அ.தி.மு.க-வும்தான். 1967-ல் இருந்து இந்த இரு திராவிடக் கட்சிகள்தான் வலுவான அரசியல் சக்திகளாக இருக்கின்றன. இந்த நிலையில், மூன்றாவது அணி… நான்காவது அணி என எத்தனை அணிகள் வந்தாலும் இந்த இரண்டு கழகங்களையும் அசைக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். 2016-ல் மக்கள் நலக்கூட்டணிக்கு எற்பட்ட முடிவு அதைத் தெளிவுபடுத்தியது.

தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு யார் வந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவிலான மக்கள் ஆதரவு கிடைப்பதில்லை. மக்கள் நீதி மய்யத்துக்கு முன்னோடியாக எம்.எஸ்.உதயமூர்த்தி தொடங்கிய மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பைச் சொல்லலாம். படித்தவர்கள் அதிகமுள்ள சில தொகுதிகளில் மக்கள் சக்தி இயக்கம் போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில்கூட அவர்களால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. ஊழலுக்கு எதிராகவும் மாற்று குறித்தும் பேசுகிற மேட்டுக்குடியினரும் மெத்தப்படித்தவர்களும் பெரும்பாலும் வாக்களிக்கக்கூட வருவதில்லை. அடிமட்டத்தில் இருக்கும் வாக்காளர்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அ.தி.மு.க ஏழு முறையும் தி.மு.க ஐந்து முறையும் ஆட்சியில் இருந்துள்ளன. அவ்வப்போது எடுக்கப்படும் அரசியல் நிலைப்பாடு மற்றும் ஆட்சி மீதான அதிருப்தி அதன் அடிப்படையிலான மதிப்பீடு ஆகியவைதான் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கின்றன. இந்த இரு கட்சிகள் மீதும் மக்கள் மத்தியில் ஒரு பார்வை இருக்கிறது. இந்த நிலையில், மாற்று என்று சொல்லிக்கொண்டுவருகிற கமல், சீமான் என யார் வந்தாலும் அவர்களுக்கு ஓரளவுக்கு வாக்குகள் கிடைக்குமே ஒழிய அவர்கள் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு துளியும் கிடையாது. இவர்களால் சிதறடிக்கப்படும் வாக்குகள் ஆளும் கட்சிக்குத்தான் சாதகமாக அமையும்.

இப்போது தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பணத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலை இடைத்தேர்தல்களில் மட்டுமே இருந்தது. அது இப்போது பொதுத்தேர்தலிலும் வந்துவிட்டது. இப்படியான சூழலில், வெற்றிபெறும் அளவுக்கு ம.நீ.ம போன்ற கட்சிகளுக்கு வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே, அவர் தி.மு.க-வுக்கோ, அ.தி.மு.க-வுக்கோ பெரிய சவாலாக இருப்பார் என்று சொல்ல முடியாது.

அவரது தொடர்ச்சியான செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து அடுத்த வரக்கூடிய தேர்தல்களில் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெறக்கூடிய தலைவராக அவர் உருவெடுக்கலாம். அதற்கு அவர் ஹைடெக் தலைவர் என்ற இடத்திலிருந்து கீழே இறங்கிவந்து மக்களோடு மக்களாகக் கலந்தால்தான் முடியும்” என்றார் துரைகருணா.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இரண்டு கழகங்களுக்கும் ம.நீ.ம எந்தளவுக்கு சவாலாக இருக்கும் என்ற கேள்வியை ம.நீ.ம-வைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரங்கராஜனிடம் முன்வைத்தோம்.

“மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வாக்களித்து மக்கள் சலித்துப்போய்விட்டார்கள். எனவே, ஆக்கபூர்வமான பல திட்டங்களை முன்வைக்கிற, மாற்று அரசியல் சக்தியான எங்களுக்கு மக்கள் பேராதரவு அளிப்பார்கள். நேர்மையான ஆட்சியை அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தலைவரின் கனவு.

''அஜித் என் ரோல் மாடல்; விஜய்க்கும் சப்போர்ட்!'' - கலந்துகட்டும் ஹரி நாடார்

பல ஆண்டு காலம் நற்பணிகளைச் செய்திருக்கிறார். வரி செலுத்துவதில் நேர்மையாக இருந்துவருகிறார். இதற்காக மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். ஒரு மேன்மையான தமிழகத்தை அவர் நிச்சயம் உருவாக்குவார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவது என்ற திட்டத்தை எங்கள் தலைவர் ஓராண்டுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார். எப்படி அது சாத்தியம் என்று சொல்லி அப்போது சிரித்தவர்கள், இப்போது அந்தத் திட்டத்தை போட்டிபோட்டுக்கொண்டு அறிவிக்கிறார்கள். அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் எந்தளவுக்கு நாங்கள் சவாலாக இருப்போம் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்” என்றார் ரங்கராஜன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை, தென்சென்னை உள்பட ஆறு தொகுதிகளில் அதிக வாக்குகளை ம.நீ.ம பெற்றது. நகர்ப்புறங்களில் மட்டுமே இந்தக் கட்சிக்கு ஆதரவு இருப்பது அவர்கள் பெற்ற வாக்குகளின் மூலம் அறிய முடிந்தது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடித்ததைப் போல, தமிழகத்தில் அதிகாரத்துக்கு வந்துவிட முடியும் என்று கமல் நம்புவது போலத் தெரிகிறது. டெல்லியின் சூழல் வேறு, தமிழ்நாட்டு அரசியல் சூழல் வேறு. நகர்ப்புறங்களைத் தாண்டி கிராமங்களில் ஊடுருவ வேண்டிய அவசியம் ம.நீ.ம-வுக்கு இருக்கிறது. ஒரு அரசியல் தலைவராக அதற்கான முன்னெடுப்புகளை கமல் மேற்கொண்டால் வரும் தேர்தல்களை இன்னும் நம்பிக்கையாக எதிர்கொள்ளலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு