Published:Updated:

கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் உச்சநீதிமன்ற விவாதம்! -தப்பிப்பாரா ஓ.பி.எஸ்?

ந.பொன்குமரகுருபரன்

கர்நாடக அரசியல் சூழல் குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதம், தமிழகத்தின் 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கிலும் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

கர்நாடகாவில் அரசியல் சூழல் தகித்துக் கிடக்கிறது. குமாரசாமி அரசுக்கு ஆதரவான 15 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆட்சியை தக்கவைக்கத் தேவையான பலத்தை ஆளுங்கட்சி இழந்து நிற்கிறது. எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காததால், இதை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். இவ்வழக்கில் காரசார விவாதம் நீதிமன்றத்தில் நடந்தது.

அபிஷேக் மனு சிங்வி
அபிஷேக் மனு சிங்வி

கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ``சட்டமன்ற நடவடிக்கை தொடர்பான விவகாரங்களில், குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகரை யாரும் நிர்பந்திக்க முடியாது. ஒரு வழக்கில் உத்தரவிடுமாறு கீழமை நீதிமன்றத்துக்குக் கூட யாரும் உத்தரவிட முடியாது. ராஜினாமா செய்வதாகக் கூறியவர்கள், ஜூலை 11-ம் தேதிதான் முறைப்படி சபாநாயகரிடம் நேரில் கடிதம் அளித்துள்ளனர்” என்று வாதிட்டார்.

அதிருப்தி பத்து எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ``சட்டமன்ற நடவடிக்கைகளில்தான் நீதிமன்றம் தலையிட முடியாதே தவிர, ராஜினாமா விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடலாம். இதற்கு எந்தத் தடையுமில்லை. பதவியை ராஜினாமா செய்வதற்கு எம்.எல்.ஏ-க்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் ராஜினாமாவுக்கும் பி.ஜே.பி.க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவர்களை தகுதிநீக்கம் செய்துவிட்டு, ஆட்சியைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று வாதிட்டார்.

முகுல் ரோஹத்கி
முகுல் ரோஹத்கி

இருதரப்பு விவாதத்தையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, ``ஒருகுறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது. ஆனால், ஜூலை 6-ம் தேதியே அவர்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்ட நிலையில், இவ்வளவு நாள்கள் எந்த முடிவும் ஏன் எடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து நாளைக்குள் (17.7.2019) ராஜினாமா குறித்தும், தகுதிநீக்கம் குறித்தும் முடிவெடுப்பதாக சபாநாயகர் ரமேஷ் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 18-ம் தேதி, வியாழக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது. இதற்கும் தமிழத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

பிப்ரவரி 18, 2017-ல் நடைபெற்ற தமிழக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்துள்ளனர். சபாநாயகர் தனபால் நடவடிக்கையில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இவர்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு நடத்தி வருகிறது.

இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது என உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம், அதற்காக எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று கூறியுள்ளது. நாளை புதன்கிழமை உச்சநீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பு, ஓ.பி.எஸ். வழக்கிற்கும் அடித்தளமாக அமையும். ஒருவேளை சபாநாயகரின் நடவடிக்கையில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கிலும் அது எதிரொலிக்கலாம். ஒருவேளை சபாநாயகரின் அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டால், ஓ.பி.எஸ் வழக்கிலும் 11 பேருக்கு சிக்கல்தான். உச்சநீதிமன்றத்தில் நாளை என்ன நடக்கிறது என்பது தமிழகத்திலும் அதிர்வலைகளை உருவாக்கும்.