பிப்ரவரி 14-ல் காதலர் தினத்தன்று இவ்வாறு செய்யுங்கள் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அதை அரசியல் கட்சிகள் சில விமர்சனங்களும் செய்தன.

இவ்வாறு வைரலாவதற்கும், விமர்சனங்களுக்குள்ளாவதற்கும் அப்படி அந்தக் கடிதத்தில் என்னதான் இருந்ததென்றால், ``பசு நம் கலாசாரத்தின் முதுகெலும்பு. மேற்கத்திய கலாசாரத்தால் நம் வேத மரபுகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. எனவே, வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ பிப்ரவரி 14 அன்று பசுவை அரவணைத்து Cow Hug Day''-வாகக் கொண்டாடலாம்" என்று விலங்குகள் நல வாரியம் கூறியிருந்தது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த், Cow Hug Day' தொடர்பாக பா.ஜ.க-வை விமர்சிக்கும் வண்ணம் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடர்பாகக் கேள்வியெழுப்பியிருக்கிறார். இது குறித்து சச்சின் சாவந்த் தன் ட்விட்டர் பக்கத்தில், ``டியர் பா.ஜ.க, Cow Hug Day' கோவா, வட மாநிலங்களுக்கும் பொருந்துமா... பசுக்களை கிரண் ரிஜிஜு கட்டிப்பிடிப்பாரா... அன்றைய தினம் அற்ப மனங்களுக்கு ஏதாவது சிறப்புக் கொண்டாட்டங்கள் இருக்குமா... ஒன்றுமில்லை சும்மாதான் கேட்கிறேன்" என ட்வீட் செய்திருக்கிறார். இதற்கு பா.ஜ.க தரப்பிலிருந்து எந்த பதில் கருத்தும் வெளிவரவில்லை.

முன்னதாக 2015-ல் கிரண் ரிஜிஜு, ``நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன். அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் நான். என்னை யாராவது தடுக்க முடியுமா... எனவே யாரோ ஒருவரின் பழக்கவழக்கங்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்" என்று கூறியதாக, கருத்துகள் பேசுபொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.