Published:Updated:

உத்தரப்பிரதேச தேர்தல்: லக்கிம்பூர் சம்பவத்தால் யோகிக்கும், பாஜக-வுக்கும் பின்னடைவா?

லக்கிம்பூர் சம்பவத்துக்குப் பின்னர், நாடு முழுவதும் இருக்கும் முக்கியத் தலைவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச அரசு மீது கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் பலரையும் உலுக்கியிருக்கிறது. லக்கிம்பூர் மாவட்டத்திற்கு வருகை தரவிருந்த உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மெளரியா, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி விவசாயிகள் பலரும் போராட்டம் நடத்தினர். அந்தச் சமயத்தில் அவ்வழியே வந்த பா.ஜ.க-வினரின் இரண்டு கார்கள் விவசாயிகள்மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக நடந்த கலவரத்தில் மேலும் ஐந்து பேர் இறந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், விவசாயிகள்மீது ஏறிய காரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராதான் ஓட்டிவந்தார் என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதை மறுத்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, ``என் மகன் அங்கு இல்லை என்பதற்கு எங்களிடம் ஆதரம் இருக்கிறது'' என்றார்.

லக்கிம்பூர்
லக்கிம்பூர்
கறுப்புக்கொடி போராட்டம்... பறிபோன 9 உயிர்கள்... உ.பி லக்கிம்பூர் கலவரத்தில் என்ன நடந்தது?

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். தொடர்ந்து எதிர்ப்புகள் எழவே, மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட சிலரின்மீது கொலை வழக்கு பதிவுசெய்தது உ.பி காவல்துறை. இந்த நிலையில், எதிர்வரும் உ.பி சட்டமன்றத் தேர்தலில், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பா.ஜ.க-வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

பா.ஜ.க-வுக்குப் பின்னடைவா?

``பா.ஜ.க, கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு உத்தரப்பிரதேசத்திலுள்ள 103 சட்டமன்றத் தொகுதிகளில், 72 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. மேற்குப் பகுதியில் கிடைத்த சட்டமன்றத் தொகுதிகள்தான், உ.பி-யில் பா.ஜ.க ஆட்சியமைப்பதை எளிதாக்கியது. ஆனால், புதிய வேளாண் சட்டங்கள் அமலானதை அடுத்து, விவசாயிகள் அதிகம் வாழும் உ.பி-யின் மேற்குப் பகுதியில் பா.ஜ.க-வுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அதிலும், உ.பி-யின் பெரிய மாவட்டமான லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், பா.ஜ.க-வுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருந்துவருகிறது. உத்தரப்பிரதேசத்தில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பகுதி லக்கிம்பூர் கேரிதான். அங்கு 2.6 சதவிகித சீக்கியர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் அனைவருமே வேளாண் சட்டங்கள் காரணமாக பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். ஜாட் சமூக வாக்கு வங்கி அதிகமிருப்பதும் லக்கிம்பூர் கேரியில்தான். இது மேற்கு உ.பி மட்டுமல்லாமல், ஜாட் சமூகத்தினர் அதிகம் வாழும் பஞ்சாபிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், நாடு முழுவதுமிருக்கும் முக்கியத் தலைவர்கள் அனைவரும் உ.பி அரசுமீது கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றனர். பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் என லக்கிம்பூர் கேரி மாவட்டத்துக்குச் செல்ல முயன்ற முக்கியத் தலைவர்கள் அனைவருக்கும் முதலில் அனுமதி மறுத்தது உ.பி அரசு. அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதே உ.பி அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம். அதை உணர்ந்த பிறகுதான் அவர்களுக்கு லக்கிம்பூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைக் காண அனுமதி வழங்கியது யோகி அரசு. அதுவும், விவசாயிகள்மீது கார் ஏறுவது போன்ற வீடியோக்கள் வெளியான பிறகு, சொந்தக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழத் தொடங்கின. பா.ஜ.க-வைச் சேர்ந்த வருண் காந்தி, குஷ்பு உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். மேலும், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருப்பதும் பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் மத்திய இணை அமைச்சரின் மகன் பெயர் அடிபடுவதால், இது உ.பி-யைத் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு