Published:Updated:

பிக் பாஸில் கட்சிக்கொடி, பிரசார வாகனம் ரெடி... மக்களுடனேயே கூட்டணி - வெல்வாரா கமல்?#TNElection2021

கமல்
கமல்

பிக் பாஸ் வழியிலான கமலின் தேர்தல் பிரசாரம் அல்லது கட்சிக்கான புரொமோஷன் என்பது எந்த அளவுக்குத் தமிழக மக்கள் மத்தியில் எடுபடும்?

'மக்கள் நீதி மய்யம்' கட்சிக் கொடியோடு பிக் பாஸில் தோற்றம்... `தலைநிமிரட்டும் தமிழகம்' என்கிற அடைமொழியோடு தேர்தல் பிரசார வாகனம்... `மக்களுடன்தான் கூட்டணி’ என நிர்வாகிகள் மத்தியில் அறிவிப்பு... என 2021 சட்டமன்றத் தேர்தல் களத்துக்குத் தயாராகிவிட்டார் நடிகர் கமல்ஹாசன்.

இந்த `பிக் பாஸ்’ சீஸனின் ஆரம்பம் முதலே வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் அரசியல் பேசிவந்த கமல்ஹாசன், கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், தான் அணிந்துவந்த கறுப்பு ஊதா நிற கோட் சூட்டின் ஹேண்ட் ஸ்லீவில் கட்சிக்கொடியோடு காட்சி தந்தார். அது மட்டுமல்லாமல், கொடி தெரியும்படி அடிக்கடி கையை ஆட்டி ஆட்டியும் பேசிக்கொண்டிருந்தார். அதற்கடுத்த நாள், கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது, முதல்சுற்றுக் கூட்டம் முடிந்தவுடனேயே, 'திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என கமல்ஹாசன் கூட்டத்தில் பேசியதாகச் செய்திகள் கசிந்தன. ஆனால், 'திராவிடம் என்பது நமக்கு உவப்பான ஒன்று, கழகங்களுடன்தான் நமக்குக் கலகம்' என விளக்கம் தந்தார் கமல்ஹாசன், ஆக மொத்தத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியானது.

கலந்தாய்வுக் கூட்டம்
கலந்தாய்வுக் கூட்டம்

'மக்களுடன்தான் கூட்டணி என்பதே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை' என கமல்ஹாசன் நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதோடு, 2021 தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு பிரசார வாகனத்தின் புகைப்படமும் அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வாகனம் முழுவதும் சிவப்பு நிறத்தில் உள்ளது. அதில், 'தலை நிமிரட்டும் தமிழகம்' என்ற வாசகமும் 'மக்கள் நீதி மலர… தக்க தருணம் இதுவே' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளன. அதோடு, 'நமது சின்னம் டார்ச் லைட்' என்று டார்ச் லைட் சின்னமும் இடம்பெற்றுள்ளது.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கமல் அறிவித்திருப்பதாக எழுதியிருக்கிறாா்கள். அதில் சிறு திருத்தம். தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் உள்ளவரை திராவிடம் இருக்கும். அதை அழிக்க முடியாது. அதனால் திராவிடக் கட்சிகளுடன் என்பதைவிட கழகங்களுடன் கூட்டணி இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
கமல்

இது ஒருபுறமிருக்க, சென்னையின் ஏரி, குளங்கள் பற்றிய கருத்துகள், தொ.ப-வின் `அழகர்கோயில்’ புத்தகம் பற்றிய விளக்கம் என `பிக் பாஸி’ல் பட்டையைக் கிளப்பிவருகிறார் கமல்ஹாசன். கடந்த சீஸன்களைவிட இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தன் அரசியல் பிரசார மேடையாக முழுமையாக மாற்றிக்கொண்டார் கமல்ஹாசன் என்கிற கருத்துகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. கடந்த வாரம் கட்சிக்கொடி, காலப்போக்கில் தன் சின்னமான டார்ச்சைக்கூட `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமல் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகக் கருத்து தெரிவிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனால், இப்படி பிக் பாஸ் வழியிலான கமலின் தேர்தல் பிரசாரம் அல்லது கட்சிக்கான புரொமோஷன் என்பது எந்த அளவுக்கு தமிழக மக்கள் மத்தியில் எடுபடும்?

பிரசார வாகனம்
பிரசார வாகனம்

முதலில் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி கிராமத்தைச் சேர்ந்த `பிக் பாஸ்’ ரசிகை ஒருவரிடம் பேசினோம்,

''கோட் போட்டு வந்தார் அதைத்தான் பார்த்தேன்... அவர் கையை நான் கவனிக்கவே இல்லை. ஆனால், புத்தகங்கள் படிக்கச் சொல்வது போன்ற பல நல்ல விஷயங்களைச் சொல்கிறார். பிக் பாஸ் நடத்துவதன் மூலம் கட்சியை வளர்த்துக்கொள்கிறார். அவர் சொல்லும் நல்ல கருத்துகளை மக்கள் எடுத்துக் கொள்வார்கள். கண்டிப்பாக அந்தக் கருத்துகள் குறித்து யோசிப்பார்கள். ஆனால், அவருக்கு ஓட்டுப்போடுவது என்பது சந்தேகம்தான். காரணம், அவர் ஜெயிப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

கட்சி ஆரம்பித்து இவ்வளவு நாள்கள் ஆகியும் எங்கள் ஊர்ப்பக்கமெல்லாம் அவர் கட்சிக்கு ஆட்களே இல்லை. சிவகங்கையில்தான் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போது அவரின் ரசிகர்கள் எல்லா ஊர்களிலும் இருந்தார்கள். ஆனால், கமலுக்கு அந்த அளவுக்கு ரசிகர்கள் இல்லை. மக்கள் மனதில் ரஜினி அளவுக்குக் கமல் இடம் பிடித்துவிட்டாரா என்பதும் சந்தேகம்தான்'' என்கிறார் அவர்.

தொடர்ச்சியாக `பிக் பாஸ்’ பார்த்துவரும், கோவையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.

``பிக் பாஸில் கலந்துகொண்டிருக்கும் பிரபலங்கள் யாராவது வேண்டுமானால் அவரின் கட்சியில் சேரலாம். ஆனால், பிக் பாஸைப் பார்த்து அதனால் மக்கள் கவரப்படுவதற்கு வாய்ப்பு ஏதும் இல்லை. இந்த நிகழ்ச்சி மூலம் ஓட்டுகள் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. முதல் சீஸனில் பார்த்தபோது அவரின் அரசியல் கருத்துகள் ஓரளவுக்கு பார்க்கும்படியாக இருந்தன. ஆனால், தற்போது கமல் அரசியல் பேசுவது மிகவும் எரிச்சலையே தருகிறது. சம்பந்தமில்லாமல் பேசுவதுபோல் இருக்கிறது. தவிர, அவர் பேசுவதில் ஒரு தெளிவும் இல்லை, தகவல் பிழையோடும் பேசுகிறார். இந்தமுறை ஆடியன்ஸும் இல்லை, ஜூமில் பேசுவதால் பெரிதாக எடுபடவில்லை'' என்கிறார் அவர்.

பிரியன்
பிரியன்

`பிக் பாஸ்’ ரசிகர்களின் கருத்துகள் இப்படியிருக்க, மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர் பிரியனிடம் பேசினோம்.

''கமல் கட்சி ஆரம்பித்தபோது அவர் சந்தித்த நபர்கள் அனைவரும் மோடிக்கு எதிரானவர்கள். அதனால் `ஆன்டி மோடி' என்பது நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய நிலைப்பாடாக இருந்தது. அப்படி, 'ஆன்டி திராவிடக் கட்சிகள்' என்கிற நிலைப்பாட்டை தற்போது அவர் கையிலெடுத்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்த தொகுதிகளில், தற்போது அவர் அதிகம் கவனம் செலுத்துவார் என்று நினைக்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் தவிர நாம் தமிழர், அ.ம.மு.க ஆகிய கட்சிகளும் தனியாகப் போட்டியிடுவதால், வாக்குகள் பிரியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதனால் கமலுக்கு இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக ஐந்து சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பிருப்பதாக நான் கருதுகிறேன். காரணம், வெறும் வார்த்தை ஜாலங்களிலேயே மக்கள் மனங்களை வென்றுவிடலாம் என நினைக்கிறார். கமல் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டிய அவசியம் அதிகமாக இருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக வருபவர் இரண்டு கட்சிகளும் ஏன் தேவையில்லை என்பதை மக்களிடம் விளக்க வேண்டும். தான் எந்த வகையில் மாற்று என்பதையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

கட்சி ஆரம்பித்த பிறகு தமிழகம் முழுவதும் எங்கள் தலைவர் சுற்றி வந்திருக்கிறார். தவிர, தமிழகத்தில் மற்ற கட்சிகளைவிட பிரசார வாகனத்தோடு தேர்தல் பிரசாரத்துக்கு முதலில் தயாராகியிருப்பதும் எங்கள் தலைவர்தான். எங்களுக்குத் தேர்தல் சீட்டு குறித்தோ, மற்ற விஷயங்கள் குறித்தோ எந்த பயமும் கிடையாது. என்ன நோக்கத்துக்காக எங்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இடத்தில் இந்தத் தேர்தலிலும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.
முரளி அப்பாஸ், செய்தித் தொடர்பாளர், மக்கள் நீதி மய்யம்
ரஜினி, விசிக, கம்யூ... மக்கள் நலக் கூட்டணி 2.0-க்கு தயாராகிறதா மக்கள் நீதி மய்யம்? #2021TNElection

தவிர, பூச்சு வார்த்தைகளைப் பேசாமல் மக்களுக்குப் புரியும் வகையில் பேச வேண்டும். கமலின் பேச்சு மேல்தட்டு வர்க்க மக்களுக்கானதாகவே இருக்கிறது. மக்களின் நாடித்துடிப்பை அறிந்து, அவர்களின் மொழியில் பேச வேண்டும். `பிக் பாஸி’ல் கட்சிக்கொடியை புரொமோட் செய்வது தவறில்லை. ஆனால், அது பெரிய அளவில் கைகொடுக்காது. மேலும், அதை மற்ற கட்சிகள் விமர்சிக்கவும் செய்வார்கள். அதைச் சமாளிக்க வேண்டும்.

எது எப்படியோ, இந்தத் தேர்தலில் கமல் கட்சிக்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு. அவர் வெற்றி பெறுவாரா என்பதே சந்தேகம்தான். ஆனால், 2024 தேர்தலில் வெற்றிபெற அவர் முயலலாம். அதற்கும் அவர் இப்போதிருந்தே உழைக்க வேண்டும். மக்களிடம் நேரடியாகப் போக வேண்டும்'' என்கிறார் அவர்.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

கடைசியாக மேற்கண்ட விஷயங்கள் குறித்து, மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம்.

''பிக் பாஸ் ஒரு சாதனம். மக்களிடம் நேரடியாக உரையாடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களெல்லாம் எங்களுக்கான வாக்காளர்களாக மாற வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. மக்களிடம் சொல்ல வேண்டிய நியாயமான விஷயங்களைச் சொல்லிவிட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் தலைவரின் நோக்கம். எங்கள் தலைவரின் எண்ணவோட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளவும் முடியும். அதனால், மாற்றம் குறித்து யோசிக்கும் மக்கள் எங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. 20 சதவிகித வாக்காளர்கள், `யாருக்கு வாக்களிக்க வேண்டும்’ என்பதைக் கடைசி நேரத்தில் முடிவெடுப்பவர்கள்தான். அவர்களின் வாக்குகளுக்குத் தகுதியானவர்களாக நாங்கள் மட்டுமே இருப்போம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அறுபது தொகுதிகளில் நாங்கள் ஆறு சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகளை வாங்கியிருக்கிறோம். அது தமிழக தேர்தலில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது எங்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்டு வெகு சில மாதங்களில் சந்தித்த தேர்தல். தற்போது பலமான கட்டமைப்போடு நாங்கள் தேர்தலைச் சந்திக்கிறோம். யார் முதல்வர் வேட்பாளர் என்கிற கேள்வியில் மற்றவர்களைக் காட்டிலும் எங்கள் தலைவர் அதிக தகுதிகளோடு முன்னணியில் நிற்பார்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதே இந்தத் தேர்தலில் எங்கள் கட்சியின் இலக்கு. அதை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். கட்சி ஆரம்பிக்கும்போது இருந்த நம்பிக்கையைவிட இப்போது பலமடங்கு அதிகரித்திருக்கிறது. உறுதியாக வெல்வோம்'' என்கிறார் நம்பிக்கையோடு.

அடுத்த கட்டுரைக்கு