Published:Updated:

2021 சட்டமன்றத் தேர்தல்... ஊடக வழி பிரசாரங்கள்... எந்தக் கட்சிக்கு சாதகம்? #2021TNElection

கட்சிகள்

ஊடக வழி பிரசாரம் யாருக்குக் கை கொடுக்கும்; யாருக்கு வாக்கு வாங்கியை அதிகப்படுத்தும்; யாருக்கு வெற்றியைப் பரிசளிக்கும்... என்கிற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள், பார்வையாளர்கள் சிலரின் முன்வைத்தோம்...

2021 சட்டமன்றத் தேர்தல்... ஊடக வழி பிரசாரங்கள்... எந்தக் கட்சிக்கு சாதகம்? #2021TNElection

ஊடக வழி பிரசாரம் யாருக்குக் கை கொடுக்கும்; யாருக்கு வாக்கு வாங்கியை அதிகப்படுத்தும்; யாருக்கு வெற்றியைப் பரிசளிக்கும்... என்கிற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள், பார்வையாளர்கள் சிலரின் முன்வைத்தோம்...

Published:Updated:
கட்சிகள்
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசின் பதவிக்காலம் வரும் 2021 மே மாதத்தோடு முடிவடைகிறது. கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் சூழலில் அடுத்த ஆண்டு தேர்தல் எப்படி நடக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும், சமூக விலகல் போன்ற விஷயங்கள் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் என்றே தெரிகிறது. அதனால், தேர்தல் நடத்தப்பட்டாலும் எப்போதும் போல பொதுக்கூட்டங்கள், பிரசாரங்களுக்கு எல்லாம் அனுமதி கிடைப்பது சந்தேகம்தான்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய நாடாளுமன்றத் தேர்தல் என்றால் பரபரப்புக்கும் பண விளையாட்டுக்கும் பஞ்சமில்லாதது தமிழக சட்டமன்றத் தேர்தல். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, மாநாடு, பொதுக்கூட்டம், பிரசாரம் என்று எங்கு பார்த்தாலும் கரை வேட்டிகளின் ஆதிக்கமாகத்தான் இருக்கும். தலைக்கு இருநூறு, கோழிபிரியாணி, குவார்ட்டர் கொடுத்து ஆள் சேர்த்து, மாவட்டம் முதல் வட்டம் வரை கட்சியில் தன் பலத்தைக் காண்பிப்பதற்கான காலமும், எப்போதும் மக்களோடு, மக்களாக மக்களில் ஒருவராக கரைவேட்டிகள் முழுமையான ஜனநாயகவாதிகளாக மாறிப்போகும் காலமும் அதுதான். ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இதற்கெல்லாம் `வாய்ப்பில்ல ராஜா’ என்கிறது கொரோனா... அப்படி என்றால் எப்படித்தான் மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் செய்வது?

தேர்தல்
தேர்தல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருக்கவே இருக்கின்றன தினப்பத்திரிகை, வாரப்பத்திரிகை முதலான அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி, யூ டியூப் போன்ற காட்சி ஊடகங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக ஊடகங்கள்... பிற ஊடகங்கள் வழிப் பிரசாரத்தைவிட, சமூக ஊடக வழிப் பிரசாரத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும்.

தலைவனைக் காண கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் வந்தது போதும், இனி தலைவர்கள் உங்களைத் தேடி இணையம் வழியாக உலா வருவார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சில ஆண்டுகளாகவே இணையவழிப் பிரசாரத்துக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகிவிட்டன. ஆனால், கொரோனா கெடுபிடிகளுக்குப் பிறகு, அது தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 

தி.மு.கவில்,  ஸ்டாலின் மருமகன் சபரீசன் மேற்பார்வையில் பிராசாந்த் கிஷோர் மூலமாக, ஜெக ஜோராக வேலைகள் நடந்துவருகின்றன. அ.தி.மு.கவுக்கு முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுனின் மேற்பார்வையில் தனி டீம் வேலை செய்துகொண்டிருக்கிறது. பா.ம.கவில் சமூக ஊடகப் பேரவை என்ற இளைஞர் பட்டாளம் பல காலமாக களத்தில் நிற்கிறார்கள். மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளும் இவர்களுக்குச் சளைத்தவையல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கடைசி நேரத்தில் வெளியான கமல் வீடியோக்கள் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தின என அனைவரும் அறிந்ததே. கட்சி முழுக்க இளைஞர் பட்டாளங்களை வைத்திருக்கும் சீமானுக்கு அவர்களின் தம்பி /தங்கைகளே தனி பலம். இவ்வளவு ஏன் இன்னும் கட்சியே ஆரம்பிக்காத, ரஜினிகாந்துக்குக் கூட அவரின் மகள் சௌந்தர்யா, 20 பேர் கொண்ட டீமை உருவாக்கி சமூக வலைதளங்களை ஆக்கிரமிப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்.

Social media
Social media

தவிர, பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அ.ம.மு.க, தே.மு.தி.க வி.சி.க, ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என அனைத்துக் கட்சிகளும் இணைய வழி கட்சிப் பிரசாரங்களில் இறங்கிவிட்டார்கள்.

எல்லாம் சரி... அனைவருமே களத்தில் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்த ஊடக வழிப் பிரசாரம் யாருக்குக் கை கைகொடுக்கும்; யாருக்கு வாக்கு வங்கியை அதிகப்படுத்தும்; யாருக்கு வெற்றியைப் பரிசளிக்கும் என்கிற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள், பார்வையாளர்கள் சிலரின் முன்வைத்தோம்.

``சிறிய, புதிய கட்சிகளுக்குச் சாதகமான களம்'' - ராஜவேல் நாகராஜன்.

``பிரசாரங்கள் அனைத்தும் ஊடகம் வழியாக மட்டுமே நடைபெற்றால் பெரிய கட்சிகளுக்கு அது நிச்சயமாக பலவீனம்தான். தேர்தல் நேரத்தில் தங்களின் மாஸைக் காட்ட முடியாது. அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான களம் அமைந்துவிடும். அது சிறிய கட்சிகளுக்குப் பலமாக அமையும். நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற சிறிய கட்சிகளுக்கும் நாளை ரஜினி புதிய கட்சி ஆரம்பித்தாலும் அவர்களுக்கும் இது சாதகமாகவே இருக்கும். ரஜினி அரசியலுக்கு வந்தால், கமலின் வாக்குவங்கியில் சில மாற்றங்கள் இருக்கும். அ.தி.மு.க, தி.மு.க கூட்டணி வாக்கு வங்கிகளில் கூட சில தாக்கத்தை உண்டு பண்ணும். ஆனால், நாம் தமிழரின் வாக்கு வங்கியில் அதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால், இந்தத் தேர்தலில் அவர்கள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் கணக்கைத் தொடங்குவார்கள் என்றே நினைக்கிறேன்.

ராஜவேல் நாகராஜன்
ராஜவேல் நாகராஜன்

இது ஒருபுறமிருக்க, பெரிய கட்சிகள், பல நூறு கோடிகள் செலவு செய்து, கம்பெனிகள் மூலமாக ஏற்கெனவே தங்களின் இணையவழி பிரசாரங்களை தொடங்கிவிட்டார்கள். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், யாருக்கு இந்த ஊடக வழிப் பிரசாரம் நன்மையோ இல்லையோ, மக்களுக்கு மிகவும் நிம்மதிதான். தேர்தல் பிரசாரம் என்கிற பெயரில் அரசியல்வாதிகள் தரும் நெருக்கடிகளிலிருந்து மக்கள் தப்பிக்கலாம்.''

``ரஜினி வராவிட்டால் தி.மு.கவுக்கே லாபம்'' - ரவீந்திரன் துரைசாமி!

``நாம் தமிழர் கட்சிக்கு சமூக வலைதளப் பிரசாரங்கள் சாதகமாக இருக்கின்றன. தி.மு.கவுக்கே சவால் விடும் அளவுக்கு சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் செயல்படுகின்றனர். பிரபாகரனா - கருணாநிதியா என்கிற விவாதத்தில், தி.மு.க தலைமை பின்வாங்கியதை நாம் பார்த்தோம். அதேபோல, தொலைக்காட்சி வழியாக கமல் மக்களைச் சென்றடையலாம். ஆனால், இவையெல்லாம் வாக்கு வங்கியாக மாறுமா என்பது அப்போதுதான் தெரியும். அதேசமயம், ரஜினி கட்சி ஆரம்பித்தால் கண்டிப்பாக அவருக்கு மிகப்பெரிய பலமாக அமையும். அவர் வரும்போதே தலைவராகத்தான் வருகிறார். கண்டிப்பாக அவர் வெற்றி பெறுவார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

1967-ல் எப்படி `காமராஜர் வெர்சஸ் அதர்ஸ்’ என்று தமிழக அரசியல் களம் இருந்ததோ, அதேபோல, தற்போது ஸ்டாலின் வெர்சஸ் அதர்ஸ் என்று இருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அப்படி மாறியிருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வராவிட்டால், கண்டிப்பாக ஸ்டாலினுக்கே இந்தக் களம் சாதகமாக இருக்கும். காரணம், அ.தி.மு.கவுக்குப் பெரியளவில் ஊடகப் பிரசார பலம் இல்லை. பா.ம.கவுடனான நட்பும் எலி தவளை நட்பாக மாறிவிட்டது. கண்டிப்பாக, அந்த இரண்டு கட்சிகளுக்கிடையே, தேர்தல் வரைக்கும் கூட்டணி நீடிக்க வாய்ப்பு மிகக் குறைவு.''

``நிறுவனமயமாக்கப்பட்ட கட்சிகளே வெல்லும்'' - ஜெயபிரகாஷ் நாராயணன்!

``மக்களிடம் செல்ல வாய்ப்புக் குறைந்தாலும், ஊடக வழித் தேர்தல் பிரசாரம் நிறுவனமயமாக்கப்பட்ட கட்சிகளுக்கே சாதகமாக இருக்கும். காரணம், பணத்தைக் கொடுத்து, சிறிய கட்சிக்களுக்கு எதிராகப் பிரசாரத்தை, பெரிய கட்சிகளால் எளிதாக மேற்கொள்ள முடியும். அவர்களின் இமேஜைக் காலி பண்ண முடியும். சிறிய கட்சி உறுப்பினர்களையும் விலை கொடுத்து வாங்கமுடியும். அவர்களின் ரகசியங்கள் தெரிந்தவர்களிடம் பணம் கொடுத்து அதைப் பெற்று, அவர்களுக்கு எதிரான அஸ்திரமாகவும் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் வீடியோ, ஆடியோக்களை எல்லாம் நாம் இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அது எதுவும் ஏதேச்சையாக நடப்பது இல்லை. கண்டிப்பாக அதற்குப் பின்னால் இயக்குபவர்கள் வேறு நபராக இருப்பார்கள். தேர்தல் நேரத்தில், களத்தில் என்ன நடக்குமோ அது எல்லாம் இணைய வழி பிரசாரக் களத்திலும் நடக்கும். இவற்றையெல்லாம் செய்யமுடியாத செய்ய விரும்பாத கட்சிகளுக்குப் பின்னடைவாகவே இது அமையும். கட்சி உறுப்பினர்கள் மட்டுமே கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் முறை பெரியளவில் எடுபடாது.''

ஜெயபிரகாஷ் நாராயணன்
ஜெயபிரகாஷ் நாராயணன்

``வாக்குக்குக் கொடுக்கும் பணமே முடிவு செய்யும்'' - பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்!

``தகவல்களைத் திரட்டுவதிலும் தொழில்நுட்பங்களைக் திறமையாகக் கையாள்வதிலும் யார் திறமையாகச் செயல்படுகிறார்களோ அவர்களுக்கே சாதகமாக இருக்கும். 2ஜி மிகப்பெரிய ஊழலானதே, 2014 நாடாளுமன்றத் தேர்தலில், ஊடகங்கள் வழியாக பா.ஜ.க செய்த பிரசாரங்களால்தான். இன்றைய சூழலில் அது போன்ற விஷயத்தை யாராவது கையிலெடுத்துப் பிரசாரம் செய்தால், மக்களிடையே அது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

தமிழகத்தில் ஐந்து கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. அதில், குறைந்தது மூன்று கோடி பேரிடமாவது ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலமாக ஒரு தகவலைப் பரப்பும்போது அது பலரால் கேள்விக்குள்ளாக்கப்படாமலே நம்பப்படும் சூழல் இங்கு இருக்கிறது. ஆனால், மக்களிடம் அதைக் கொண்டு சேர்ப்பதற்கு பலமான கட்டமைப்பு வேண்டும். தமிழகத்தில் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக, மக்களிடையே ஒரு விஷயத்தை மிக வேகமாகக் கொண்டு சேர்ப்பது தி.மு.க, நாம் தமிழர் மற்றும் விஜய் ரசிகர்கள்தான். விஜய் இன்னும் கட்சி ஆரம்பிக்காவிட்டாலும், அவருக்கென்று ஒரு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. அவரது ரசிகர்களும் அதை வெளிப்படுத்திதான் வருகிறார்கள்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

பெரிய கட்சிகளுடன் போட்டிபோட்டு களத்தில் செலவு செய்ய முடியாத, பிரசாரம் செய்ய முடியாத சிறிய கட்சிகளுக்கு இந்த முறை சாதகமான ஒன்றுதான். கண்டிப்பாக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அதனால், பெரிய இரண்டு கட்சிகளுக்கு, இடையே கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளில், வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில் சிறிய கட்சிகள் இருக்கும்.

கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமானால் தேர்தல் களம் ஆளும் கட்சிக்கு எதிராக மாறும். ஆனால், என்னதான் பிரசாரம் செய்தாலும் கடைசியாக காசுதான் வேலை செய்யும். பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கி விடுவார்கள். தி.மு.கவை விட, அ.தி.மு.கவிடம் பணம் அதிகமாகவே இருக்கிறது. அரசு எந்திரமும் கையில் இருக்கிறது. அதன் மூலம் மக்களைச் சேரமுடியும். ஆனால், மக்கள் இந்த அரசை மீண்டும் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்,''