Published:Updated:

`நினைவிடம்... குறைந்தபட்ச ஆதரவு விலை!' - விவசாயிகளின் 6 அம்சக் கோரிக்கை; நிறைவேற்றுமா மத்திய அரசு?

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்திருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் விவசாயிகள் முன்வைத்திருக்கும் ஆறு கோரிக்கைகளை நிறைவேற்றுமா?

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம், நவம்பர் 26-ம் தேதியுடன் ஓராண்டை நிறைவுசெய்கிறது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு கடந்த ஓராண்டுக்காலமாக உறுதியாக இருந்தது. திடீரென நவம்பர் 19-ம் தேதி, `மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும்’ என்று பிரதமர் மோடி அறிவித்தார். விவசாயிகளின் போராட்டத்துக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று இதை விவசாயிகள் கொண்டாடுகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்கள் ரத்து என்று பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து, டெல்லியில் எல்லைப் பகுதிகளில் போராட்டக்களத்தில் இருக்கும் விவசாயிகள் இனிப்புகள் பரிமாறியும், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேநேரத்தில், பிரதமரின் அறிவிப்பால் விவசாயிகள் திருப்தி அடைந்துவிடவில்லை. போராட்டத்தைத் தொடங்கி ஓராண்டு நிறைவடையும் நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கு ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட திட்டங்களிலிருந்து அவர்கள் பின்வாங்கவில்லை. போராட்டம் தொடங்கப்பட்டு நவம்பர் 26-ம் தேதி ஓராண்டு நிறைவடைவதையொட்டி, இந்தியா முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மிகப்பெரிய அளவில் பேரணிகளை நடத்த, விவசாயிகள் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தயாராகிவருகிறது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தங்கியிருந்து கடந்த ஓராண்டுக்காலமாகப் போராடிவருகிறார்கள். வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதால், விவசாயிகள் அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இப்போதுதான் தங்களின் போராட்டம் புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது என்று கூறியிருக்கும் விவசாயிகள், மூன்று வேளாண் சட்டங்களையும் முறைப்படி நாடாளுமன்றத்தில் வாபஸ் பெறும்வரை போராட்டத்தைத் தொடருவோம் என்று அறிவித்திருக்கின்றனர்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதைத் தாண்டி, வேறு சில முக்கியக் கோரிக்கைகளையும் ஏற்கெனவே விவசாயிகள் முன்வைத்தனர். கடந்த ஆண்டு போராட்டம் தொடங்கிய காலத்தில் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, அந்தக் கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கு, சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், போராட்டத்தின்போது விவசாயிகள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். தற்போது, கூடுதலாகச் சில கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஓராண்டுக்காலமாக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தின்போது, சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த விவசாயிகளின் நினைவாக சிங்கூர் எல்லையில் நினைவிடம் அமைக்க வேண்டும், உயிரிழந்த அந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்திருக்கின்றனர்.

அவைபோக, மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைதுசெய்யப்பட்டார். விவசாயிகள் மீதான அந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருப்பதாக இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர். அவரைப் பதவி நீக்கம் செய்து, கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் தற்போது வலியுறுத்துகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

ஆரம்பத்தில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடியாது என்பதில் உறுதியாக இருந்த மத்திய அரசு, அதில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையின்போது கூறியது. ஆனால், திருத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருந்த விவசாயிகள், மூன்று சட்டங்களுக்கும் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டனர். தற்போது, அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் பஞ்சாப் மற்றும் உ.பி சட்டமன்றத் தேர்தல்களை மனதில்வைத்து, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

விவசாயிகள் வீடு திரும்புவது எப்போது? - நடுத்தெருவில் உலகின் ஆதித் தொழில்!

அதேநேரத்தில், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும், போராட்டக்களத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது மத்திய அரசின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. அது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

தேர்தல் அழுத்தம் காரணமாக, இந்தக் கோரிக்கைகளில்கூட மத்திய அரசு இறங்கி வரலாம். ஆனால், மத்திய உள்துறை இணை அமைச்சரைப் பதவிநீக்கம் செய்து அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு எப்படிப் பார்க்கும் என்பது தெரியவில்லை.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இது குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். ``மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்று சொல்லித்தான் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இப்போது, வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்துவிட்டார். வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை என்பதைப் பொறுத்த அளவில், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை நோக்கித்தான் அரசு சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டபூர்வமாக்க முடியாது என்ற சிக்கல் விளக்கப்பட்டுவிட்டது. காரணம், ஒவ்வோர் ஆண்டும் விளைபொருள்களுக்கான விலை மாறிக்கொண்டேயிருக்கும். பா.ஜ.க அரசு வந்த பிறகு கடந்த ஏழு ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதார விலை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. எனவே, இதை வேண்டுமென்றே அரசியல் ஆக்குகிறார்கள்.

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்ற பிறகும் போராட்டத்தை நடத்துவோம் என்று அவர்கள் சொல்வார்களேயானால், அவர்களின் நோக்கம் தவறானது என்று தெரிகிறது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காகத்தான் போராடினார்கள் என்கிறபோது, பிரதமர் அறிவித்தவுடன் இந்நேரம் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். ஆனால், புதிதாகக் கோரிக்கைகளைக் கொண்டுவருகிறார்கள் என்றால், இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க அரசியல்ரீதியானது என்பதை அவர்களே வெளிப்படுத்துகிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு