Published:Updated:

'சுப்பிரமணியன் சுவாமி, சிவசேனா ஆதரவு! -தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராவாரா நிதின் கட்கரி?'

Nitin Gadkari
Nitin Gadkari

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கவேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கைக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது.

நாட்டில் பரவி வரும் கொரோனாவை மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டுப்பத்திரிக்கைகள் நரேந்திரமோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதனால் மற்றொரு முழுமையான பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆனால் பொது முடக்கத்தை அமல்படுத்தினால் சாமான்ய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் பொருளாதாரமும் மோசமடையும் எனக் கருதி மத்திய அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயங்கிவருகிறது. இதனால் தினம் தினம் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஆக்சிஜன் மற்றும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கார்ப்ரேட் கம்பெனிகளிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கொரோனாவிற்கு தேவையான ஆக்சிஜன், மருந்து போன்றவற்றை ஏற்பாடுசெய்து தேவைப்படும் மாநிலங்களுக்கு கொடுத்துவருகிறார்.இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டும் கிடைத்துள்ளது.

Nitin Gadkari
Nitin Gadkari

அதோடு மகாராஷ்டிராவில் தினமும் 30 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவிர் கொரோனா சிகிச்சை மருந்து உற்பத்திசெய்ய ஏற்பாடு செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் இம்மருந்து தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஜெனிடெக் லைஃப் சயின்ஸ் என்ற கம்பெனி ரெம்டெசிவிர் மருந்தைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. தினமும் 30 ஆயிரம் டோஸ் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வார்தாவில் இக்கம்பெனி ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்திசெய்ய தேவையான அனுமதிகளை பெற்றுக்கொடுத்ததில் நிதின் கட்கரி முக்கிய பங்கு வகித்தார். இங்கு உற்பத்தியாகும் மருந்து மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்திற்கும் மாநிலத்தின் இதர பகுதிக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் நிதின் கட்கரியை கொரோனா மேலாண்மை தலைவராக நியமிக்கவேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் அபாயம் இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முழு நேர பொறுப்பாளர் ஒருவர் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கைக்கு சிவசேனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிஷோர் திவாரி அளித்த பேட்டியில்,தற்போதைய சூழ்நிலையில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் வட இந்தியாவில் இருந்து அதிகமாக பரவி வருகிறது. இரண்டாவது அலையில் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் நாட்களில் தினத்தொற்று 40 லட்சமாக அதிகரிக்கலாம். அதிகப்படியான மருந்து, படுக்கை, மருத்துவ வசதி, வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் தேவையாக இருக்கிறது. எனவே இதனை கையாள முழு நேர பொறுப்பாளர் ஒருவர் தேவை. எனவே மிகவும் அனுபவம் வாய்ந்த நிதின் கட்கரி போன்றவரை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கவேண்டும் என்று தெரிவித்தார். இந்த பதவியில் இதற்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 18 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதற்கு முன்பு நரேந்திரமோடிக்கு பதில் நிதின் கட்கரியை பிரதம வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நரேந்திரமோடி சில காலம் கட்கரியை ஓரங்கட்டி வைத்திருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு