Published:Updated:

பலமடையும் பாஜக... 2024-ல் வலுவான எதிரணி உருவாவது சாத்தியமா?!

ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்

நான்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து பலம் அதிகரித்துள்ள பா.ஜ.க-வை எதிர்த்து, 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து செயல்படத் தயார் என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா?

பலமடையும் பாஜக... 2024-ல் வலுவான எதிரணி உருவாவது சாத்தியமா?!

நான்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து பலம் அதிகரித்துள்ள பா.ஜ.க-வை எதிர்த்து, 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து செயல்படத் தயார் என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா?

Published:Updated:
ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ளது. இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணி சேராமல் தனித்தனியாகப் பிரிந்து நின்றதுதான், பா.ஜ.க-வின் பலம் அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் என்பது இந்தத் தேர்தல் முடிவுகளில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இதையொரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு, 2024-ல் வரவிருக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும் என்கிற கருத்தை பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் வலியுறுத்திவருகிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் விரும்பினால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து செயல்படத் தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா என்கிற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் முன்வைத்தோம்.

“ஐந்து மாநிலத் தேர்தலில், நான்கு மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. இதனாலேயே 2024-லிலும் பா.ஜ.க வெற்றிபெற்றுவிடும் என்று சொல்ல முடியாது. இந்த நான்கு மாநில வெற்றி, அந்தக் கட்சிக்கு ஓர் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக, வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவருவதற்குக்கூட வாய்ப்பு இருக்கிறது. அது போன்ற மத்திய அரசின் செயல்பாடுகளால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு ஏற்படும். தேசிய அளவில் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு ஓர் அணியை ஏற்படுத்தினால், அது சரிவராது. அது போன்ற ஒரு கூட்டணியை மக்கள் நம்ப மாட்டார்கள். மாநிலங்களில் உள்ள கட்சிகளை இணைப்பதற்கு தேசிய அளவில் கட்டமைப்புகொண்ட ஒரு கட்சி வேண்டும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அந்த வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை காங்கிரஸ் கட்சிக்கு அமைப்பு இருக்கிறது. தற்போது தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் இருப்பைப் பார்க்க முடியும். உ.பி-யில் காங்கிரஸ் தோற்றதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பிரியங்கா காந்தி தீவிரமாகப் பிரசாரம் செய்தார். அவர் நடத்திய பொதுக்கூட்டங்களுக்கு ஏராளமான பெண்கள் வந்தார்கள். ஆனால், இரு துருவ அரசியலாக மாறியதால், பா.ஜ.க-வா, சமாஜ்வாடி கட்சியா என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால், காங்கிரஸ் கட்சியினர்கூட பா.ஜ.க-வைத் தோற்கடிக்க, சமாஜ்வாடிக்கு வாக்களித்திருக்கலாம். இதே சமாஜ்வாடியும் காங்கிரஸும் நாடாளுமன்றத் தேர்தலில் கைகோப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேநேரத்தில், காங்கிரஸ் தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தனது வளர்ச்சிக்குத் தடைகளாக இருக்கும் அனைத்தையும் காங்கிரஸ் சரிசெய்ய வேண்டும். சோனியா காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகி, ராகுல் காந்திக்கு முழு அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும். கட்சியை எப்படியெல்லாம் மாற்ற வேண்டும் என்று ராகுல் விரும்புகிறாரோ, அதற்கான சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட வேண்டும். ப.சிதம்பரம், அசோக் கெலாட் போன்ற வயது முதிர்ந்த தலைவர்கள் கட்சியின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்காமல், ஒதுங்கிக்கொள்ள வேண்டும். கட்சியின் கட்டமைப்புகளில் மாற்றம் கொண்டுவந்து, தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான சக்தி என்ற நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும்.

ப்ரியன்
ப்ரியன்

2024-ல் மோடியைத் தோற்கடிப்பது சாதாரண விஷயமல்ல. ஏனென்றால், அவர் தனது இமேஜை பெரிய அளவுக்கு உயர்த்திக்கொண்டிருக்கிறார். எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தன் கட்சியை வலுப்படுத்த வேண்டும், தலைமையை வலுப்படுத்த வேண்டும், கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்யவேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. தேசிய அளவில் மாற்றுக்கூட்டணியை அமைப்பதற்கான வாய்ப்பு காங்கிரஸுக்குத்தான் இருக்கிறது

எந்தெந்த மாநிலங்களில், எந்தெந்தக் கட்சிகள் காங்கிரஸுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கின்றனவோ, அவற்றுடன் இப்போதே உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைக்கு மம்தா பானர்ஜி கூட்டணி வைப்பதற்கு முன்வந்துள்ளார். அவருடன் கைகோத்தால்தான், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியும். தமிழகத்தில் தி.மு.க-வுடன் உறுதியான கூட்டணியை ஏற்படுத்தியிருப்பதைப்போல, எல்லா மாநிலங்களிலும் வலுவான கூட்டணி உருவாக்குவதற்கு காங்கிரஸ் முயற்சி எடுக்க வேண்டும். இப்படித்தான், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கட்சிகளின் கையைப் பிடித்துக்கொண்டுதான் பா.ஜ.க வளர்ச்சி பெற்றது” என்கிறார் ப்ரியன்.

“தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேருவதற்கு 2024 வரை காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. வரும் ஜூன் மாதத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிறது. அதில், எதிர்க்கட்சிகள் ஒன்றுசேருவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

அவரிடம் பேசியபோது, “உ.பி-யில் பா.ஜ.க 303 எம்.எல்.ஏ-க்களை வைத்திருந்தபோதிலும், தாங்கள் நிறுத்துகிற குடியரசுத் தலைவர் வெற்றிபெறுவதற்குத் தேவையான பெரும்பான்மை அவர்களிடம் இல்லை. இப்போது, உ.பி-யில் 60 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க இழந்திருக்கிறது. தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களிலும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்கூட, 2017-ஐக் காட்டிலும் அதிகமான எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க இழந்துள்ளது. இப்படியான சூழலில், எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டுமென்றால், பிராந்திய அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்களால் ஒன்றுசேர முடியும்.

ஷ்யாம்
ஷ்யாம்

குடியரசுத் தலைவர் தேர்தலில், ஒரு பொதுவேட்பாளரை எதிர்க்கட்சிகள் முன்னிறுத்த வேண்டும். ஒரு வலுவான கட்சிக்கு எதிராக மற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும் என்பது ஒன்றும் கம்ப சூத்திரம் கிடையாது. மாநிலக் கட்சிகள் ஓரணியில் திரளுவதற்கான வாய்ப்பு குடியரசுத் தலைவர் தேர்தலில் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி விரும்பினால் கைகோப்பதற்குத் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி கூறுவது உண்மையென்றால், அதை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிரூபிக்கலாம். இதற்கான வாய்ப்பு அடுத்த சில மாதங்களிலேயே இருக்கிறது. அதை வைத்து, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை யூகிக்கலாம். அதற்கு, அப்துல் கலாம் போன்ற அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சி எடுக்க வேண்டும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ‘கம் பாலிட்டிக்ஸ்’ செய்ய வேண்டும். அதாவது, பசை மாதிரி மற்ற கட்சிகளுடன் காங்கிரஸ் ஒட்ட வேண்டும். அதேபோல, மற்றவர்களையும் தங்களுடன் ஒட்டவைக்க வேண்டும். அது மிக முக்கியம். மம்தா பானர்ஜி முதல் குரல் கொடுத்திருக்கிறார். “காங்கிரஸ் விரும்பினால்...” என்று அவர் சொல்கிறார். அப்படியென்றால், அவர்கள் விரும்பாமல்தான் போனார்கள் என்று தெரிகிறது.

கோவாவில் காங்கிரஸுடன் கூட்டணி சேர மம்தா தீவிரமாக முயன்றார். ஆனால், சோனியா காந்தி அதை விரும்பவில்லை. அது போன்ற அணுமுறையைக் கைவிட்டு, மாநிலக் கட்சிகளையெல்லாம் ஒன்றிணைக்கிற வேலையை காங்கிரஸ் செய்ய வேண்டும். கோபுரத்தின் உச்சியிலிருந்து அவர்கள் இறங்கிவர வேண்டும். இல்லையென்றால், கோபுரம் இடிந்துவிடும்” என்கிறார் தராசு ஷ்யாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism