Published:Updated:

'பெகாசஸ்' ஸ்பைவேர்: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புயலைக் கிளப்பும் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்?!

பெகாசஸ்' ஸ்பைவேர்: `உளவு பார்க்கப்பட்ட விவகாரம்!'
பெகாசஸ்' ஸ்பைவேர்: `உளவு பார்க்கப்பட்ட விவகாரம்!'

பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக சர்வதேசப் பத்திரிகைகளில் வெளியான புலனாய்வு அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைவைத்து நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்ப தீவிரம் காட்டிவருகின்றன.

இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ-வின் 'பெகாசஸ்' ஸ்பைவேரைப் பயன்படுத்தி இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தி கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச பத்திரிகைகளில் முக்கியமான அறிக்கை ஒன்று வெளியிடப்படவிருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஷீலா பட் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு நேற்றைய தினம் முழுவதும் இந்திய மக்களை பலத்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருந்தனர்.

இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் குறித்த அறிக்கை, நேற்றிரவு 9:30 மணிக்கு வெளியானது. தி வயர், தி கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேசப் பத்திரிகைகள் இணைந்து பணியாற்றிய `புராஜெக்ட் பெகாசஸ்'-ன் புலனாய்வு அறிக்கையில் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒரு சில மத்திய அமைச்சர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களின் தொலைபேசிகள் இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தது.

'பெகாசஸ்' ஸ்பைவேர்; ஹேக் செய்யப்பட்டதா உரையாடல்கள்? காத்திருக்கும் இந்தியா?!- என்ன காரணம்?

அந்தப் பட்டியலில், இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நியூஸ் 18, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெகுஜன ஊடகங்களின் மூத்த பத்திரிகையாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், என்.எஸ்.ஓ நிறுவனம் இந்தியர்களின் தொலைபேசிகளை ஹேக் செய்தவர்களின் விவரங்களைத் தெரிவிக்காததால், யார் இந்த ஸ்பைவேர் மென்பொருளைப் பயன்படுத்தி உளவு வேலைகளில் ஈடுபட்டது என்பதைச் செய்தி ஊடகங்களின் புலனாய்வில் வெளிக்கொண்டு வர முடியவில்லை.

பெகாசஸ் மென்பொருள் பயன்பாடு குறித்து இஸ்ரேல் நிறுவனத்தின் தரப்பில் அளிக்கப்பட்டிருக்கும் விளக்கக் குறிப்பில், பெகாசஸ், அரசாங்க அமைப்புகளுக்கு மட்டுமே விற்கப்பட்டதாகவும், தனி நபர்கள் யாருக்கும் விற்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவருடைய மகன் ஜெய் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் வணிக விவகாரங்கள் குறித்துச் செய்தி பதிவிட்ட தி வயர் ஊடகத்தின் சிறப்புப் பங்களிப்பாளர் ரோகினி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ரஃபேல் போர் விமானம் குறித்து ஸ்பெஷல் ஸ்டோரி எழுதிய சுஷாந்த் என மத்திய அரசுக்கு எதிராகச் செய்திகளைப் பதிவிட்ட பத்திரிகையாளர்களின் பெயர்கள் மட்டுமே அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால், இந்திய அரசாங்கம்தான் இஸ்ரேல் நிறுவனத்தின் வாடிக்கையாளரா என்ற கேள்வி பலமாக எழுகிறது.

அதேபோல், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2018-ன் இறுதியில் சொல்லிவைத்ததுபோல் வெகுஜன ஊடகங்களின் மூத்த பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டு அவர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு, உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருப்பது மோடி அரசாங்கத்தின் மீதான சந்தேகத்தை வலுவடையச் செய்திருக்கிறது. ஏற்கெனவே, 2019-ல் இஸ்ரேல் மென்பொருளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ்அப் சாட்டுகள் மற்றும் தரவுகள் உளவு பார்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, அப்போதைய மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடாளுமன்றத்தில் அரசாங்க நிறுவனங்களில் பெகாசஸ் பயன்படுத்தப்படவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார். இந்தநிலையில், சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் பெகாசஸ் விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது.

பெகாசஸ்
பெகாசஸ்
Pixabay

ஆனால், இப்போதும் மத்திய அரசு பெகாசஸ் மென்பொருளின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு இந்திய ஆரசாங்கத்தில் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிவருகிறது. இந்தநிலையில், பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தை நாடாளுமன்ற அவைகளில் விவாதப் பொருளாக்கி அமளியில் ஈடுபட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை நடக்கிறது. இன்று நடைபெறவிருக்கும் மழைக்காலக் கூட்டத் தொடரில் தடுப்பூசி, நோய்த்தொற்றுப் பரவல், மழைக்கால நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்துக் கலந்தாலோசிக்க ஆளும்தரப்பு தயாராக இருக்கும் வேளையில், மறுபுறம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'பெகாசஸ்' விவகாரத்தைக் கையிலெடுத்து விவாதிக்க முனைப்புக் காட்டிவருகின்றன.

'பெகாசஸ்' ஸ்பைவேர்: 40 பத்திரிகையாளர்கள்; ஒட்டுக்கேட்கப்பட்டதா உரையாடல்கள்?; மறுக்கும் மத்திய அரசு!

இன்று காலை முதலே பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஸ்பைவேர் குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு நோட்டீஸ் வழங்கினர். சி.பி.ஐ மாநிலங்களவை எம்.பி பினாய் விஸ்வம், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் விதி 267-ன் கீழ் விவாதிக்க நோட்டீஸ் வழங்கியிருக்கின்றனர்.

அதேபோல், காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி ஸ்பைவேர் சர்ச்சை குறித்து, ``தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நான் நிச்சயமாக இந்தப் பிரச்னையை (சபையில்) எழுப்புவேன்" என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை தனது ட்விட்டரில், ``அவர் என்ன படித்துவருகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். உங்கள் தொலைபேசியிலுள்ள அனைத்தும்..." என்று பதிவிட்டிருக்கிறார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இந்தியாவில் பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டிருப்பது தொடர்பான காரசாரமான விவாதங்களும், எதிர்க்கட்சிகளின் விமர்சன ஏவுகணைகளும் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு