Published:Updated:

அயோத்தி: `அறக்கட்டளைத் தலைவருக்கு கொரோனா; பிரதமர் மோடி தனிமைப்படுத்திக்கொள்வாரா?’ - சிவசேனா

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழாவில் 75 வயதான நிருத்யா கோபால் தாஸ் மேடையில் இருந்தார்.’’

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதையடுத்து, விழாவில் பங்கேற்ற ராமர் கோயில் அறக்கட்டளைத் தலைவர் நிருத்யா கோபால் தாஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. `இந்த நிலையில், மகாராஷ்டிராவின் ஆளும்கட்சித் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத், கோபால் தாஸுடன் நெருங்கி இருந்த பிரதமர் நரேந்திர மோடி, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வாரா?’ என்று கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

சிவசேனாவின்அதிகாரபூர்வ பத்திரிக்கையான சாமனாவில் வெளியாகியுள்ள கட்டுரையில் சஞ்சய் ராவத், ``ஆகஸ்ட் 5-ம் தேதி, ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்ட 75 வயதான நிருத்யா கோபால் தாஸ் மேடையில் இருந்தார். அவர் முகக்கவசத்தால் தன்னுடைய முகத்தை மறைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் அவருடன் இருந்தனர். பிரதமர் மோடி பக்தியுடன் அவரது கையையும் பற்றியுள்ளார். எனவே, நம்முடைய பிரதமர் மோடியும் தனிமைப்படுதிக்கொள்வாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தொடர்ந்து அந்தக் கட்டுரையில், ``அமித் ஷாவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு தனிமையில் இருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. தற்போது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் ஆபத்தான தொற்றுநோயால் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. டெல்லியில் கலவரங்கள் ஏற்பட்டபோதுகூட இவ்வளவு பயம் இருந்ததில்லை. ஆனால், இப்போது நிலைமை சற்று பயமாக இருக்கிறது” என்று டெல்லியில் கொரோன வைரஸ் பரவி வருவதையும் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட சஞ்சய் ராவத், ``ரஷ்யா தற்சார்பு தொடர்பான பாடத்தை உலகத்துக்கு வழங்கியுள்ளது. ஆனால், நாம் தற்சார்பு குறித்து பிரசாரம் மட்டுமே செய்துகொண்டிருக்கிறோம்” என்றும் குறிப்பிட்டு பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

`பிரதமர் மோடி ராஜினாமா செய்யக்கோரி மக்கள் போராட்டம் நடத்தும் நிலை வரலாம்!’ - சிவசேனா
அடுத்த கட்டுரைக்கு