Published:Updated:

`பிரியங்கா காந்திக்குப் பெருகும் ஆதரவு!’ - தனது முடிவை திரும்பப்பெறுவாரா ராகுல்?

பிரேம் குமார் எஸ்.கே.

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவனம் பெற, தற்போது காங்கிரஸின் புதிய தலைவராக பிரியங்கா காந்தி பதவியேற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த தோல்வியைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை முதலில் ஏற்க மறுத்தது காங்கிரஸ் கட்சி நிர்வாகம். பல மூத்த தலைவர்கள் ராகுல் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுலிடம் பலர் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் அவரது முடிவை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. ராகுல் தனது ராஜினாமா கடிதத்தில், `நான் ராஜினாமா செய்கிறேன். விரைவில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுங்கள். ஆனால், எங்கள் குடும்பத்திலிருந்து தலைவரைத் தேடாதீர்கள்' என குறிப்பிட்டிருந்தார்.

இதனால் சோனியா காந்தியோ அல்லது பிரியங்கா காந்தியோ இப்பதவிக்கு வரப்போவதில்லை எனக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான், உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமத்தில் மோதல் வெடித்தது. பழங்குடியினர் நிலத்தை அபகரிக்க வந்த யக்தா தத் என்பவரின் குழுவுக்கும் பழங்குடியினருக்கும் நடைபெற்ற மோதலில் யக்தா தத்தின் ஆதரவாளர்கள் பழங்குடியினரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 10 பேர் உயிரிழந்ததோடு, 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தர்ணாவில் பிரியங்கா காந்தி
தர்ணாவில் பிரியங்கா காந்தி

துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தன் ஆதரவாளர்களுடன் வாரணாசிக்கு வந்தார். ஆனால், அவர் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், அவர் கைது செய்யப்பட்டு மிஸாபூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் அவர் விடிய விடிய தர்ணா மேற்கொண்டார்.

மறுக்கப்பட்ட அனுமதி; விடிய விடிய நடந்த தர்ணா! - நள்ளிரவில் உ.பி அதிகாரிகளைத் திணறடித்த பிரியங்கா

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவனம் பெற, தற்போது காங்கிரஸின் புதிய தலைவராக பிரியங்கா காந்தி பதவியேற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகனான அனில் சாஸ்திரி, ``பிரியங்கா காந்தி கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். வேறு யார் அந்தப் பதவிக்கு வந்தாலும் அவரைக் கட்சியினர் 100% ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்லமுடியாது” என்றார்.

`பிரியங்கா காந்திக்குப் பெருகும் ஆதரவு!’ - தனது முடிவை  திரும்பப்பெறுவாரா ராகுல்?

அதைத் தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நட்வர் சிங், ``உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி செயல்பட்டதை நாம் அனைவரும் பார்த்தோம். அது அற்புதமானது. அவர் அங்கு காத்திருந்து தனக்கு வேண்டியதைச் சாதித்தார்” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த நட்வர் சிங், ``அதை பிரியங்காதான் முடிவு செய்ய வேண்டும். காரணம் அவரின் சகோதரரான ராகுல், அவரின் குடும்பத்திலிருந்து யாரும் தலைவர் பதவிக்கு வரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். இனி அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

`பிரியங்கா காந்திக்குப் பெருகும் ஆதரவு!’ - தனது முடிவை  திரும்பப்பெறுவாரா ராகுல்?

மேலும், காந்தி குடும்பம் அல்லாமல் வேறு ஒருவர் காங்கிரஸ் தலைமைக்கு பொறுப்பேற்றால் அடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி உடைந்துவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ``காந்தி குடும்பம் அல்லாத வேறு ஒருவர் இந்தப் பதவிக்குப் பொருத்தமாக இருப்பார் என நான் நினைக்கவில்லை. 134 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க ஒரு கட்சிக்குத் தலைவர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றார்.

பிரியங்கா காந்தி கட்சித் தலைவராக பதவியேற்க வேண்டுமென்றால், ராகுல் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். விரைவில் சில மாநிலங்களுக்குச் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புகள் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவரை விரைவில் தேர்வு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறது. பிரியங்கா காந்தி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!