Published:Updated:

`பெண்களுக்கு 40% சீட் முதல் கட்சிக்குள் களையெடுப்பு வரை' - உ.பி.யில் பிரியங்கா வியூகம் எடுபடுமா?!

பெண்களுக்கான ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கக் காங்கிரஸ் ஒன்றும் புதிதாக எதையும் செய்திடவில்லை. ஏற்கெனவே, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும், ஒடிசாவில்  பிஜு ஜனதா தளம் கட்சியும் தேர்தல் அரசியலில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன.

.உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை பலகட்டங்களாக நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் 7 மாநிலங்களில் 6 மாநிலங்களில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கிறது பாஜக. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாபையும் சேர்த்து அனைத்து மாநிலங்களையும் கைப்பற்ற முனைப்புக் காட்டி வருகிறது. மறுபக்கம், பழம்பெரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் அக்னிப் பரீட்சை என்பதால் அக்கட்சியினர் பாஜகவை வீழ்த்த அதிரடியான வியூகங்களை வகுத்து களப்பணியாற்றி வருகின்றனர்.

7 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது என்றாலும், அனைவரின் பார்வையும் உத்தரப்பிரதேசம் என்ற ஒற்றை மாநிலத்தின் மீதுதான் குவிந்திருக்கிறது. அதற்கு, காரணம், அங்கு பாஜக எனும் மாபெரும் கட்சியை எதிர்த்துக் களமிறங்கியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திதான். பாஜகவுக்கு எதிர்வினையாற்றுவதில் அண்ணன் ராகுலை விடவும் அதிக தீவிரம் காட்டி வரும் பிரியங்கா காந்தி, பாஜக-வின் யோகி ஆதித்யநாத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

நாட்டிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம். அங்கு, ஒருகாலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்குத் தற்போது வெறும் 7 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவானது 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகக் கருதப்படுவதால் காங்கிரஸ் தன்னை உ.பி-யில் வலுப்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 1985-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உ.பி-யில் 269 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸால் 2017 தேர்தலில் வெறும் 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது டெல்லி மேலிடத்தை பெரும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியது. தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமை அம்மாநிலத்தில் கட்சியை மீண்டும் வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை 2017-ளிலேயே தொடங்கிவிட்டது. ராகுல் காந்தியைத் தொடர்ந்து, அவரது தங்கை பிரியங்கா காந்தி 2019-ல் முழு நேர அரசியலில் இறங்கினார்.

அரசியலுக்கு வந்த கையுடன் பிரியங்காவை உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்கச் செய்து, அம்மாநிலத்தில் கட்சியை நிர்வகிக்கத் தயார்ப்படுத்தினார் சோனியா காந்தி. முழுநேர அரசியலில் இறங்கிய பிரியங்கா, விமர்சன அரசியலைத்தாண்டி களத்தில் இறங்கி மக்கள் ஆதரவைச் சம்பாதிக்கத் தொடங்கினார். காங்கிரஸ் உ.பி-யில் சறுக்கியதற்கான காரணங்களை மூத்த தலைவர்களுடன் ஆலோசித்தவர், கட்சியின் வளர்ச்சிக்கு இளைய சமுதாயத்தினரின் ஆதரவு முக்கியம் என்று எண்ணினார்.

காங்கிரஸ் உ.பி-யில் வலுவிழந்து போனதற்கு அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படும் மிக முக்கிய காரணம், அக்கட்சியால் பிராமணர்களின் வாக்குகளைக் கவரமுடியாமல் போனது என்பதுதான். எனவே, காங்கிரஸ் 2017 தோல்விக்குப் பிறகு சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் வாக்குகளுக்கு இணையாக பிராமணர்களின் வாக்குகளையும் பெற வேண்டும் என்ற முடிவினை கையிலெடுத்தது. அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்றால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று திட்டம் தீட்டினார் பிரியங்கா. அதற்கான வேலைகளை மாநில பொறுப்பிற்கு வந்த உடனே மேற்கொள்ளத் தொடங்கினார். உ.பி-யில் 500-ஆக இருந்த காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 115-ஆகக் குறைத்தார். மூத்த நிர்வாகிகள் பலரையும் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கி விட்டு, களப்பணியில் ஆர்வமுடைய இளைஞர்களுக்குப் பதவிகளை வழங்கினார். குறிப்பாக, மாநில காங்கிரஸ் கமிட்டியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ அஜய் குமார் லல்லுவைத் தலைவராக்கினார். அதேபோல், பிரியங்கா உ.பி-யில் அதிகளவில் இருக்கும் (பிராமணர்கள், தாகூர் மற்றும் குர்மிஸ்) சமூகங்களைச் சேர்ந்த 41 பேருக்குச் செயற்குழுவில் முக்கிய பதவி வழங்கியிருக்கிறார். கடந்த தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு இந்த சமூக மக்களின் வாக்கு முக்கியப் பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

விமர்சன அரசியலில் அதீத முனைப்புகாட்டி வரும் பிரியங்கா, உ.பி-யில் யோகி தலைமையிலான பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். விவசாயிகள் பிரச்னை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் தலித் பிரச்னைகளை முன்னிறுத்தி பாஜக-விற்கு எதிராகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். உன்னாவ் பாலியல் வழக்கு, லக்கிம்பூர் கலவரம் போன்ற அசம்பாவிதங்களின்போது மக்களுடன் பங்கெடுக்க பிரியங்கா காந்தி ஆர்வம் காட்டுகிறார். அந்த சமயத்தில், அவரைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் யோகி அரசு முனைப்புக் காட்டியது. அதை வைத்தே தனக்கான ஆதரவு வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டார் பிரியங்கா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண்களுக்கான அரசியல் பிரிதிநித்துவம்!

பிரியங்கா காந்தி நேற்றைய தினம் உ.பி பெண் வாக்காளர்களை மனதில் வைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 40% இடங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், "வரும் சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் அதிக அளவில் போட்டியிட முன்வர வேண்டும். பெண்களுக்குச் சம உரிமை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்சித் தலைமை உ.பி சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 40% இடங்களை வழங்க முடிவெடுத்திருக்கிறது. இருப்பினும், என்னிடம் அதிகாரம் இருந்தால் நிச்சயம் பெண்களுக்கு 50% இடங்களை வழங்கியிருப்பேன். இன்னும்கூட சில அரசியல் கட்சியினர் பெண்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் மற்றும் சிலிண்டர் கொடுத்துவிட்டால் போதும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு பெண்ணின் போராட்டம் என்பது மிக நீண்டது, மிகவும் ஆழமானது" என்றார். காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர்கூட ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று கூறிய பிரியங்கா, ``தேர்தலில் நிச்சயம் ஒருநாள் போட்டியிடுவேன்" என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்
நீரோடையை ஆக்கிரமித்த கொடநாடு முதல் முகம் திருப்பிக்கொண்ட ராகுல் வரை..! கழுகார் அப்டேட்ஸ்

பிரியங்காவின் இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் சிலரால் கவன ஈர்ப்பு சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கான ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கக் காங்கிரஸ் ஒன்றும் புதிதாக எதையும் செய்திடவில்லை. ஏற்கெனவே, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும், ஓடிஸாவில் பிஜு ஜனதா தளம் கட்சியும் பெண்களுக்கு அதிகளவில் தேர்தலில் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கென கிட்டத்தட்ட 50% இடங்களை ஒதுக்கி, மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் 17 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தினார். அதே போல், ஒடிசாவிலும் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் நவீன் பட்நாயக் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதியில் 7 தொகுதிகளில் பெண்களை நிறுத்தினார். இந்த இருகட்சிகளும் பெண்களை முன்னிறுத்தி எதிர்கொண்ட தேர்தலில் அமோக வெற்றியைப் பதிவு செய்தன. எனவே, பிரியங்காவின் இந்த 40% அறிவிப்பும் மேற்கு வங்க மாடலின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது என்கின்றனர். உ.பி-யில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முதல் ஆளாகக் குரல் கொடுப்பது காங்கிரஸ் மட்டும்தான் என்பது போல் காட்டிக் கொள்ளும் பிரியங்கா, பெண்களை வைத்தே பாஜகவை வீழ்த்துவதற்காகப் போட்ட ஸ்கெட்ச்தான் இந்த பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உ.பி-யில் தற்போது பெண் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 38-ஆக இருக்கிறது. ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தல் தரவுகளின்படி பார்க்கையில், மாநிலத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 6.61 கோடி ஆக இருக்கிறது. இந்த எண்ணிக்கை உ.பி -யின் மக்கள் தொகையில் சுமார் 46% ஆகும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் பிரியங்கா 40% இடங்களைப் பெண்களுக்கென்று அறிவித்திருக்கிறார். அவரின் கணக்குப்படி, மொத்தமுள்ள 403 இடங்களில் சுமார் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். அதேபோல், உ.பி-யில் கிராம பஞ்சாயத்துத் தேர்தல்களிலும் இதுவரை பெண்களே அதிகளவில் வாக்களித்திருக்கின்றனர்.

``பிரதமர் மோடி கோழையைப்போலச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" - பிரியங்கா காந்தி சாடல்!
உ.பி தேர்தல்
உ.பி தேர்தல்

2007-ல் மாயாவதி முதல்வரான போதும், 2017-ல் பாஜகவின் யோகி முதல்வரான போதும்கூட பெண்களே அதிகளவில் வாக்களித்திருந்தனர். பெண்கள் சக்தி வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி என்பதாலேயே பிரியங்கா இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விவசாயிகள் பிரச்னை, கொரோனா கால செயல்பாடுகள், மதப் பிரச்னைகள் என ஆளும் பாஜகமீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பெண்களின் அடிப்படைத் தேவைகளான மின் வசதி, சமையல் கேஸ் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றை பாஜக மொத்தத்தில் பூர்த்தி செய்திருப்பதால் பிரியங்கா காந்தியால் அவ்வளவு எளிதில் உ.பி-யில் பெண்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியாது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. உ.பி-யில் காங்கிரஸை விடவும் சமாஜ்வாடி கட்சியும், பாஜக-வும், பகுஜன் சமாஜ் கட்சியும் பலமாக உள்ளதால் காங்கிரஸின் போட்டியெல்லாம் வலுவான எதிர்கட்சிக்கானதுதான் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, பிரியங்காவின் தீவிர பிரச்சாரத்தால் உ.பி-யில் காங்கிரஸ் கட்சியின் குரல் மீண்டும் உரக்க ஒலிக்கத் தொடங்கி இருப்பது அக்கட்சியின் டெல்லி மேலிடத்திற்குச் சற்றே ஆறுதல் அளித்திருக்கிறது. அது காங்கிரஸ் கட்சிக்குக் கைகொடுக்குமா என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு