Published:Updated:

கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் ஆட்சி... என்.டி.ஆர் பாணியில் சாதிப்பாரா ரஜினி?

என்.டி.ஆர் - ரஜினி
News
என்.டி.ஆர் - ரஜினி

என்.டி.ஆர் - ரஜினி ஆகிய இருவரின் அரசியல் வருகை குறித்த ஒரு ஓப்பீட்டையும் என்.டி.ஆரைப்போல, ரஜினி சாதிக்க முடியுமா என்பதையும் பார்ப்போம்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர், முத்தையா முரளிதரனிடம் பத்திரிகையாளர்கள் ஒருமுறை, `பொதுசேவையில் தீவிரமாக இறங்கியிருக்கிறீர்கள். அரசியலுக்கு வரும் எண்ணம் உண்டா?’ என்ற கேள்வியை எழுப்ப, ``இந்தியாவுல ரஜினிகாந்த் அரசியலுக்கு வாரனா, வரலையா, வாரனா, வரலையான்னு சொல்ற மாதிரி நான் சொல்ல மாட்டேன். ஒரேடியாச் சொல்றேன் அரசியலுக்கு வர்றதுல எனக்கு விருப்பம் இல்லை'' எனச் சிரித்தபடியே பதிலளித்தார். அந்த அளவுக்குக் கடல் கடந்தும் கேலியாகப் பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் வருகை குறித்த விமர்சனங்களுக்கு, நேற்று முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.

2017-ம் ஆண்டு, இதே டிசம்பர் மாதத்தில், `நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போகிறோம். போருக்குத் தயாராக இருங்கள்’ எனத் தன் மன்ற நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டார் ரஜினி. பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக 'வருவார், நிச்சயம் வருவார், நிச்சயமாக வர மாட்டார்' என மாறுபட்ட கருத்துகள் நிலவிவந்த நிலையில், `ஜனவரியில் கட்சி தொடங்கப்படும், தேதி மற்றும் மற்ற விவரங்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும்’ என நேற்று ட்விட்டரில் பதிவிட்டார் ரஜினி.

அதுமட்டுமல்லாமல்,``வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்... நிகழும்!!!" என்றும் பதிவிட்டார் ரஜினி

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்.டி.ஆர் பாணி!

கட்சி ஆரம்பிப்பதோடு மட்டுமல்லாமல், `வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைப்போம்’ என்றும் அறிவித்திருக்கிறார் ரஜினி. ரஜினிக்கு முன்பாக தமிழகத்தில், நடிகர் ஒருவர் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்த வரலாறு உண்டு. அவர் எம்.ஜி.ஆர். ஆனால், எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியது 1972-ம் ஆண்டு. அவரின் கட்சி முதல் சட்டமன்றப் பொதுத்தேர்தலைச் சந்தித்த ஆண்டு 1977. இடையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு இடைவெளி இருந்தது. ஆனால், ஆந்திர மாநிலத்தில் என்.டி.ராமாராவ் கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே ஆட்சியைப் பிடித்தார். என்.டி.ஆரின் பாணியைத்தான், தற்போது ரஜினிகாந்தும் பின்பற்றுவதாகச் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், என்.டி.ஆர் - ரஜினி ஆகிய இருவரின் அரசியல் வருகை குறித்த ஓர் ஓப்பீட்டையும் என்.டி.ஆரைப்போல, ரஜினி சாதிக்க முடியுமா என்பதையும் பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

என்.டி.ஆரின் அரசியல் பிரவேசம்!

சப் ரெஜிஸ்ட்ரார்-ஆக இருந்து. பின்னர் நடிப்பின் மீதான காதலால் அந்த வேலையை உதறிவிட்டு, திரைத்துறைக்குள் காலடி வைத்தவர் என்.டி.ராமாராவ். அதேபோல்தான், நடத்துநராக இருந்து, நடிப்பின் மீதான காதலால் திரைத்துறைக்கு வந்தவர் சிவாஜிராவ். திரைத்துறையில் எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருந்த என்.டி.ஆரை, அரசியல் பக்கம் திருப்பிய இரண்டு சம்பவங்களைச் சொல்வார்கள். ஒன்று, ஆந்திர முதல்வராக இருந்த அஞ்சய்யா என்பவரை, 1982-ல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜீவ் காந்தி விமான நிலையம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார். அவருடன் விமானத்தில் பயணிக்கவும் ராஜீவ் காந்தி மறுத்தார். இந்தச் சம்பவம் ஆந்திரா முழுவதும் கடும் கொந்தளிப்பை உண்டாகியது. தெலுங்கு இன மக்களின் மான உணர்வைத் தட்டி எழுப்பியது. குறிப்பாக என்.டி.ஆர் மனதில் அது ஜுவாலையாகப் பற்றியெரிந்தது. இதுவே அவர் தெலுங்கு தேசம் எனும் கட்சி ஆரம்பிக்கக் காரணமாக அமைந்ததாகச் சொல்வதுண்டு.

அதேபோல, ஆந்திராவின் முதல்வராக சென்னாரெட்டி இருந்தபோது, அவரைச் சந்திக்க என்.டி.ஆர் பலமுறை முயன்றும், டெல்லி தலைமையின் பேச்சைக் கேட்டு, என்.டி.ஆரைச் சந்திக்க சென்னா ரெட்டி மறுத்ததாகவும், அந்தச் சம்பவமும் என்.டி.ஆர் மனதில் ஆறாத ரணமாக இருந்ததாகவும் சொல்வார்கள். அதனால்தான், தன் முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது, காங்கிரஸ் அரசின் ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றை விமர்சித்ததைவிட ,``ஆந்திர மக்களின் சுயமரியாதை காக்கப்பட வேண்டும்'' என்பதே என்.டி.ஆரின் முக்கியத் தேர்தல் முழக்கமாக இருந்தது. இதேபோல், ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கும் ஒரு சம்பவம் காரணமாகச் சொல்லப்படுகிறது.

செவாலியே விழாவில் ஜெயலலிதா, ரஜினி...
செவாலியே விழாவில் ஜெயலலிதா, ரஜினி...
விகடன்

ரஜினியின் அரசியல் பிரவேசம்!

1991-ல் தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. அவரின் வீடும் நடிகர் ரஜினிகாந்த்தின் வீடும் சென்னை போயஸ் கார்டனில் அருகருகேதான் இருந்தன. ஒருமுறை, ஜெயலலிதாவின் வருகைக்காக, ரஜினிகாந்த்தின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அது அடிக்கடி தொடர்ந்ததாகவும் சொல்லப்பட்டது. அதனால் கடுப்பானார் ரஜினிகாந்த். அதனால்தான் தொடர்ந்து அவர் நடித்த `அண்ணாமலை’, `உழைப்பாளி’, `முத்து’ உள்ளிட்ட படங்களில் அரசியல் தொடர்பான வசனங்கள் இடம்பெற்றன. திரையில் மட்டுமல்லாமல், 1996 சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து, ``ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது'' என நேரடியாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ரஜினி. தொடர்ந்து, 2004 வரை அரசியல் சார்ந்த கருத்துகளைத் தெரிவித்துவந்த ரஜினி, பின்னர் 13 ஆண்டுகள் கழித்து 2017-ல்தான் நேரடி அரசியல் வருகைக்காக ஆயத்தங்களைத் தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்.டி.ஆர் சாதித்த வரலாறு!

1982, மார்ச் 29-ம் தேதி கட்சி ஆரம்பித்து, 1983 ஜனவரி 9-ம் தேதி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் என்.டி.ஆர். இடையில் இருந்தது வெறும் 270 நாள்கள் மட்டுமே. ரஜினியும் `டிசம்பர் 31-ம் தேதி, கட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்’ எனக் கூறியிருக்கிறார். ஒருவேளை, ஜனவரி ஒன்றாம் தேதியே கட்சி தொடங்கினாலும் தேர்தலுக்கு வெறும் நான்கு மாதங்கள் அதாவது, 120 நாள்கள் மட்டுமே இருக்கும்.

இந்தக் குறுகிய நாள்களில் என்டி.ஆரைப்போல ரஜினியால் சாதிக்க முடியுமா?

மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்த 1956-லிருந்து என்.டி.ஆர் ஆட்சிக்கு வந்த 1983-க்கு முன்பு வரை ஆந்திராவை ஆட்சிபுரிந்தது காங்கிரஸ் கட்சி மட்டுமே. அங்கி நிலவிவந்த கொடுமையான வறுமையிலிருந்து விடுபட மாட்டோமா என ஆந்திர மக்கள் ஏங்கித் தவித்த நேரமது. அப்போது அவர்களுக்காக அரசியல் கட்சி ஆரம்பித்த ரட்சகர்தான் என்.டி.ஆர். வெறும் உவமைக்காக மட்டுமல்ல, ஆந்திர மக்கள் தொடர்ச்சியாக கிருஷ்ணர், ராமர் வேடங்களில் நடித்துவந்த என்.டி.ஆரைக் கடவுளின் அவதாரமாகத்தான் பார்த்துவந்தார்கள். கட்சி ஆரம்பித்த பிறகு, காக்கும் கடவுளாகப் பார்த்து வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் அமரவைத்தார்கள்.

என்.டி.ஆர்
என்.டி.ஆர்

தமிழகத்தில் சாத்தியமா?

தமிழகத்தின் சூழலே வேறு, காமராஜர் மற்றும் கடந்த 53 ஆண்டுக்கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தமிழகம் மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது. ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றைத் தவிர்த்து இன்னும் வளர்ச்சியான மாநிலமாக மாற்றியிருக்கலாம் என்கிற விமர்சனங்கள் வேண்டுமானால் இங்கு எடுபடுமே தவிர, இங்கு எந்த வளர்ச்சியுமே இல்லை என்கிற முழக்கம் நிச்சயமாக கேலிக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படும். அதனால், ஆந்திராவின் அப்போதைய சூழலும், தமிழகத்தின் இப்போதைய சூழலும் முற்றிலும் வேறானவை. தவிர, என்.டி.ஆரை அவரின் ரசிகர்களைத் தாண்டி, ஆந்திராவின் பெருவாரியான மக்களே தங்களின் கடவுளாகப் பார்த்தார்கள். ஆனால், ரஜினியை அவரின் ரசிகர்கள் வேண்டுமானால் அப்படிப் பார்க்கலாமே தவிர, பொதுவாக மக்கள் அப்படிப் பார்க்கவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

கட்டமைப்பு & சுற்றுப்பயணம்!

கட்சி ஆரம்பித்த என்.டி.ஆர், ஆந்திர மாநிலம் முழுவதும், கிட்டத்தட்ட 75,000 கி.மீட்டர் சுற்றுப்பயணம் செய்தார். திறந்தவெளியில் மக்கள் மத்தியில் உரையாடினார். படித்த, திறமையான நபர்களை வேட்பாளர்களாக அறிவித்தார். ஆனால், தற்போதுள்ள கொரோனா நெருக்கடியில், ரஜினியின் தற்போதைய உடல்நிலையில் அதற்கு எந்தச் சாத்தியமும் இருப்பதாகத் தெரியவில்லை.

ரஜினிக்கு தமிழகம் முழுவதும் அதாவது 234 தொகுதிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள், ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. பூத் கமிட்டிகளுக்கான வேலைகளும் தொடங்கப்பட்டுவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன. ஆனால், ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கும் அளவுக்கான கட்டமைப்பு இருக்கிறதா... மக்களிடம் தங்கள் கொள்கைகளை விளக்கிப் பிரசாரம் செய்து, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வை நடத்தி, அவர்கள் மக்களிடம் வாக்குக் கேட்டு வெற்றி பெற முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது. முக்கியமாக மக்களை நேரடியாகச் சந்திக்காமல், டிஜிட்டல் வழியாகச் செய்யப்படும் பிரசாரமெல்லாம் ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு புதிய கட்சிகளுக்குக் கைகொடுக்குமா என்பதிலும் மிகப்பெரிய கேள்வியே தொக்கி நிற்கிறது.

ரஜினி
ரஜினி

ரசிகர்களின் நம்பிக்கை!

''1972-ல் கட்சியைத் தொடங்கி, 77-ல் தான் தேர்தலைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். இடைப்பட்ட கால அவகாசம் என்பது அதிகம். அதாவது மக்கள் யோசிப்பதற்கான காலம் அதிகம். அதனால்தான் கட்சி ஆரம்பித்தபோது, அவருக்கு இருந்த செல்வாக்கு கொஞ்சம் குறைந்து, மொத்தமிருந்த 234 தொகுதிகளில் வெறும் 130 தொகுதிகளில் மட்டுமே அவர் வெற்றி பெற்றார். ஆனால், என்.டி.ஆர் கட்சி ஆரம்பித்து வெறும் ஒன்பது மாதங்களில் தேர்தலைச் சந்தித்தார், அதனால்தான் அவரால், 289 தொகுதியில் போட்டியிட்டு 202 இடங்களில் வெற்றிபெற முடிந்தது. மக்களுக்குப் பெரிதாக சிந்திக்க நேரம் அப்போது இல்லை. என்.டி.ஆர் தேவையா, தேவையில்லையா என்பது மட்டுமே பிரதான முழக்கமாக இருந்தது. அவர் வந்ததைவிடக் குறுகிய காலத்தில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது எங்கள் கட்சி. இப்போது தமிழகத்திலும், எங்கள் தலைவர் ரஜினி தேவையா, தேவையில்லையா என்பது மட்டுமே முதன்மையான விவாதமாக இருக்கும். தேவை என்பதே பெருவாரியான மக்களின் விருப்பமாகவும் இருக்கும். அதனால், நிச்சயமாக நாங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடிப்போம்'' என்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.

மக்கள் என்ன நினைத்திருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளின்போது தெரிந்துவிடும்... அதுவரை நாம் பொறுத்திருப்போம்.