Published:Updated:

சசிகலா: `தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுதலை ஆவாரா?!’ - பெங்களூரு சிறைத்துறை சொல்வது என்ன?

சசிகலா
சசிகலா

சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறுவதைப்போல அவர் தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுதலை செய்யப்படுவாரா?

சசிகலாவின் தண்டனைக் காலம் வரும் ஜனவரி 27-ம் தேதியோடு நிறைவடையவிருக்கிறது. அதற்கு முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா விண்ணப்பித்திருக்கிறார். அதையடுத்து விரைவில் அவர் விடுதலையாவார் என அவரின் ஆதரவாளர்கள் பலரும் எதிர் நோக்கிக் காத்திருக்கிறார்கள். உண்மையில் தண்டனைக் காலத்துக்கு முன்பே சசிகலா விடுதலை ஆவாரா என பெங்களூரு சிறைத்துறை ஆணையர் பதிலளித்திருக்கிறார்.

பரப்பனஅக்ரஹாரா
பரப்பனஅக்ரஹாரா

கடந்த 1991 முதல் 96 வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்ந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதையடுத்து ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 15.2.2017-ம் தேதியிலிருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இவர்களுடைய தண்டனைக் காலம் வரும் ஜனவரி 27-ம் தேதியோடு நிறைவடையவிருக்கிறது. இந்தநிலையில் சசிகலா, தன்னை தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுதலை செய்யுமாறு பெங்களூரு சிறைத்துறைக்கு விண்ணப்பித்திருக்கிறார். இதனால் அவருடைய ஆதரவாளர்கள் சசிகலா விரைவில் வெளியே வந்துவிடுவார் எனக் காத்திருக்கிறார்கள்.

நரசிம்மமூர்த்தி
நரசிம்மமூர்த்தி

இந்தநிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சசிகலா தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுதலை ஆவாரா எனக் கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு பெங்களூரு சிறைத்துறை ஆணையர் பதிலளித்திருக்கிறார்.

இது பற்றி பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தியிடம் கேட்டதற்கு, ``சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறுவதைப்போல சசிகலா தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுதலை செய்யப்படுவாரா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பெங்களூரு சிறைத்துறை ஆணையருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, `சசிகலாவுக்கு தண்டனைக் குறைக்கப்படுமா?’ என்று கேட்டிருந்தேன்.

கடிதம்
கடிதம்

அதற்கு பெங்களூரு சிறைத்துறை ஆணையர் அளித்திருக்கும் பதிலில், `சிறைத்துறை வழிகாட்டுதல் விதிமுறைப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட ஆண் சிறைவாசிகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண் சிறைவாசிகளுக்கும், 14 ஆண்டுகள் சிறையிலுள்ள ஆண் சிறைவாசிகளுக்கும், 12 ஆண்டுகள் சிறையிலுள்ள பெண் சிறைவாசிகளுக்கும் மட்டுமே தண்டனைக் குறைப்பு பொருந்தும். மற்றவர்களுக்கு பொருந்தாது’ என்று கூறப்பட்டிருக்கிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு