Published:Updated:

சசிகலா, அ.தி.மு.க தலைமையைக் கைப்பற்ற வாய்ப்பிருக்கிறதா... சட்டம் சொல்வது என்ன?

சசிகலா
சசிகலா

தன் காரில் அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்திய சசிகலா, அ.தி.மு.க தலைமையைக் கைப்பற்றுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வழக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தண்டனை அனுபவித்துவந்த சசிகலா, ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று நேற்று (ஜனவரி 31) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, அ.தி.மு.க கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் பயணம் செய்தார். அது, அ.தி.மு.க வட்டாரத்துக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அது குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிதாக விவாதிக்கப்பட்டுவருகிறது. அ.தி.மு.க தலைமையை சசிகலா கைப்பற்றுவார் என்றும், அதற்கான அறிகுறியாகத்தான், அ.தி.மு.க கொடி பொருத்தப்பட்ட காரில் அவர் பயணம் செய்தார் என்றும் வாதிடப்படுகிறது.

காரில் அ.தி.மு.க கொடி
காரில் அ.தி.மு.க கொடி

தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அதையடுத்து, டிசம்பர் 29-ம் தேதி அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் டிசம்பர் 31-ம் தேதியன்று தற்காலிகப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சசிகலா, 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 5-ம் தேதியன்று அ.தி.மு.க சட்டமன்றக்குழுத் தலைவராக அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களால் தேர்வுசெய்யப்பட்டார். முதல்வர் நாற்காலியில் அவர் அமரவிருந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுச் சிறைத் தண்டனை விதித்து, பிப்ரவரி 14-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையடுத்து, அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியது, எடப்பாடி பழனிசாமி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தது, பின்னர் மீண்டும் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்தது உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்கள் அ.தி.மு.க முகாமில் நடைபெற்றன. `அம்மாதான் அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச்செயலாளர்’ என்று சொல்லி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற இரட்டைத் தலைமை ஏற்படுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமைக்கு அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் வழங்கியது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தமே இல்லை’ என்றும், `சசிகலாவையும் தினகரனையும் அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்’ என்றும் அ.தி.மு.க-வினர் கூறிவந்தனர். குறிப்பாக, சமீபத்தில் டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `அ.தி.மு.க-வில் சசிகலாவைச் சேர்த்துக்கொள்வதற்கு 100 சதவிகிதம் வாய்ப்பு இல்லை’ என்று கூறினார். ஆனால், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்களும் மற்ற சில நிர்வாகிகளும் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்தனர். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், எல்லோரும் அவர் பக்கம் வந்துவிடுவார்கள் என்று சமீபகாலமாக சிலரால் சொல்லப்பட்டுவந்தது.

சசிகலா சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, அந்த எதிர்பார்ப்பும், அது தொடர்பான விவாதங்களும் வலுவடைந்துள்ளன. அ.தி.மு.க-வில் இதுவரை செயலற்றிருந்த தங்கள் ஸ்லீப்பர் செல்களெல்லாம் தற்போது ஆக்டிவேட் ஆகியிருப்பதாக டி.டி.வி.தினகரன் கூறுகிறார். அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவதற்கு சசிகலாவுக்கு முழு உரிமை இருக்கிறது என்று தினகரன் அடித்துச் சொல்கிறார். அது உண்மைதானா, சட்டம் என்ன சொல்கிறது, அ.தி.மு.க-வினரின் மனநிலை எப்படியிருக்கிறது என்று பல கேள்விகள் எழுகின்றன. இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான மகேஸ்வரியிடம் பேசினோம்.

``அ.தி.மு.க-வின் புதிய சட்டவிதிகளின்படி, எங்கள் அம்மா ஜெயலலிதாதான் நிரந்தரப் பொதுச்செயலாளர். எங்கள் கட்சித் தலைமை, அம்மாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்துப்பார்க்க விரும்பவில்லை.

மகேஸ்வரி
மகேஸ்வரி

அ.தி.மு.க உறுப்பினராக சசிகலா, தன் உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக்கொள்ளவில்லை. மேலும், அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா நீக்கப்பட்டுவிட்டார். அதன் பிறகு கட்சிக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், தற்காலிகப் பொதுச்செயலாளர் என்ற பதவியே அ.தி.மு.க-வில் இல்லை. எனவே, அந்த நியமனமே சட்டத்துக்குப் புறம்பானது மாதிரிதான். அ.தி.மு.க சட்ட விதிகளின்படி, பொதுச்செயலாளர் என்கிற பதவியை தொண்டர்கள் வாக்களித்துத்தான் தேர்வுசெய்யவே முடியும்.

எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. பொதுச்செயலாளர் என்ற பதவி இருந்தால், தேர்தல் நடத்தாமல் நிச்சயமாகத் தேர்வுசெய்யவே முடியாது. தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் கட்சியை வழிநடத்திக்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்குத்தான், தேர்தல் ஆணையத்தில் `பி ஃபார்ம்’ கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது. அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதையடுத்து, உச்ச நீதிமன்றத்துக்கு தினகரன் போனார். அங்கும் அவரது மனு ஏற்கப்படவில்லை.

அதுதவிர, சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வாய்ப்பில்லை. எனவே, இவர்கள் மீண்டும் உரிமை கோருவதற்கான அதிகாரம் கிடையாது. அதற்கான எவ்வித அடிப்படையும் கிடையாது. கட்சிக்கொடியையோ, கட்சியின் பெயரையோ, கட்சியின் சின்னத்தையோ பயன்படுத்த எந்த உரிமையும் சட்டப்படி சசிகலாவுக்குக் கிடையாது.

தினகரன்
தினகரன்

வழக்கு தொடர்ந்து, சட்டப்படி எதுவும் செய்ய முடியாது என்ற சூழல் ஏற்பட்ட பிறகுதான், அ.ம.மு.க என்ற கட்சியையே தினகரன் தொடங்கினார். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் பதிவுசெய்துகொண்டார். வழக்கு போட வேண்டும் என்பதால் பொதுச்செயலாளர் பதவியை தினகரன் எடுத்துக்கொண்டார். அப்போது, சசிகலா பொதுச்செயலாளர் இல்லையா என்று தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் வெளியே வந்த பிறகு கட்சிக்குத் தலைமை வகிப்பார் என்று பதில் சொன்னார்.

அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவதற்கு சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அது சட்டமீறல். எனவேதான், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருக்கிறார். எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்றம் வரை சென்று அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஆகிவிட்ட நிலையில், அதற்கு மேல் அவர்கள் எங்கு சென்றாலும், எதுவும் நடக்காது. அ.தி.மு.க-வுக்கும் சசிகலாவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்பது உறுதியானது” என்றார் மகேஸ்வரி.

இது குறித்து வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வின் கொடியைப் பயன்படுத்துவதற்கு வி.கே.சசிகலாவுக்கு உரிமை இருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் கூறுவது ஏற்கக்கூடிய ஒன்று. அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்தியதில் சட்ட மீறல் எதுவும் கிடையாது. அ.தி.மு.க-விலிருந்து சசிகலா நீக்கப்படவே இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன. எந்த இடத்திலேயேயும் சசிகலா நீக்கப்பட்டார் என்ற வாதத்தை அவர்கள் வைக்கவே இல்லை.

ராஜாசெந்தூர்பாண்டியன்
ராஜாசெந்தூர்பாண்டியன்

அ.தி.மு.க விவகாரத்தில் தீர்மானிக்கக்கூடியவை இரண்டே இரண்டு வழக்குகள்தான். ஒன்று, தேர்தல் ஆணையம் முன்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு. மற்றொன்று, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த வழக்கு. தேர்தல் ஆணையத்தின் முன்பாக நடைபெற்ற வழக்கைப் பொறுத்தவரையில், கட்சியின் பெயரையும் கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் யார் பயன்படுத்துவது என்பது தொடர்பானது. அந்த வழக்கில், 23.11.2017 அன்று மதுசூதனன் தலைமையிலான அணிக்குக் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்துவதற்கான உரிமையைத் தேர்தல் ஆணையம் கொடுத்தது. அந்த வழக்கில் எந்த இடத்திலும், சசிகலா கட்சியிலேயே இல்லை என்ற வார்த்தை வரவில்லை.

பொதுக்குழு சம்பந்தப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் ஆணையம் ஏற்பு தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் 28.02.2019 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, 26.04.2019 அன்று உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்றது. அதற்கு மேலாக, சீராய்வு மனுவை சசிகலா தாக்கல் செய்தார். அது, 2019, ஜூலை மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அதில் க்யூரேட்டிவ் மனுவை சசிகலா தாக்கல் செய்யவிருக்கிறார். ஆக, அ.தி.மு.க பெயர் மற்றும் சின்னம் தொடர்பான விவகாரம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

12.09.2017 அன்று அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட எந்தத் தீர்மானமும் செல்லத்தக்கது அல்ல, அவை எதுவும் சட்டத்தின்படி சரியானவை அல்ல என்று சசிகலாவால் தொடரப்பட்ட வழக்கு, இன்று வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக அவர் தாக்கல் செய்த வழக்கு அது. அந்த வழக்கில் இறுதி முடிவு எட்டப்படும்வரை சசிகலாதான் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர். அப்படியிருக்கும்போது, அ.தி.மு.க-வுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வதோ, கட்சியைவிட்டு சசிகலா நீக்கப்பட்டுவிட்டார் என்று சொல்வதோ, சட்டப்படி சரியானது அல்ல.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க கொடி சசிகலா காரில் பயன்படுத்தப்பட்டது குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கருத்து தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, குறிப்பாக, இடைக்கால நிவாரணமாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் வழக்கைப் பொறுத்தவரையில், அதன் சட்டக்கூறுகள் என்னவென்பதை நன்கு அறிந்த அமைச்சர்கள், ஏதோ வாதம் வைக்க வேண்டுமென்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

எந்த இடத்திலும் சசிகலா நீக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. உறுப்பினர் அட்டையை சசிகலா புதுப்பிக்கவில்லை என்ற வாதத்தை சிலர் முன்வைக்கிறார்கள். பொதுச்செயலாளரால் மட்டுமே பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்று சொல்லி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதன் பிறகு கொடுக்கப்பட்ட உறுப்பினர் அட்டைக்கு சட்டத்தின்படி என்ன அதிகாரம் இருக்க முடியும் என்பது முக்கியமான கேள்வி.

எழுவர் விடுதலை: விரைவில் அறிவிப்பு... நம்பிக்கை தரும் தமிழக அரசு... காரணத்தை விளக்கும்  வழக்கறிஞர்!

இந்த வழக்கில் சசிகலாதான் வென்றெடுப்பார் என்பதை ஒரு வழக்கறிஞரான என்னால் சொல்ல முடியும். ஏனென்றால், அவர் இடைக்காலப் பொதுச்செயலாளராக இருந்தாலும்கூட, பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் ஒருவரால்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். எனவே, சட்டத்தின்படி அவர் அ.தி.மு.க-வின் ஓர் அங்கம்தான். அவர்தான் அந்தக் கட்சியின் தலைமை. தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதெல்லாம் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று.

சசிகலா
சசிகலா

சின்னத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பதைப் பொறுத்தவரையில் அதிகமான எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களைக் கொண்டவர்களிடம்தான் கொடுப்பதென்று தீர்ப்பானிப்பார்கள். அதன்படிதான், தேர்தல் ஆணையம் அந்த முடிவை எடுத்தது. ஆனால், கட்சியின் விதி செல்லுமா, செல்லாதா என்பதை சிவில் நீதிமன்றம்தான் தீர்மானிக்கும். அது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதில் சசிகலாதான் வெல்வார்” என்றார் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன்.

`சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று எடப்பாடி பழனிசாமிதான் கூறுகிறாரே ஒழிய, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செலவம் மௌனம் காக்கிறார். பன்னீர்செல்வத்தின் மகன் சசிகலாவுக்கு ஆதரவாக ட்வீட் போடுகிறார். சசிகலா சிறைக்குள் இருக்கும்போதே, `சின்னம்மா... சின்னம்மா’ என்று புளகாங்கிதத்துடன் சில குரல்கள் அவ்வப்போது ஒலிப்பதைக் கேட்க முடிந்தது. சசிகலா விடுதலைக்குப் பிறகு, `தியாகத்தலைவி சின்னம்மா’ என்கிற சத்தம் அ.தி.மு.க-வுக்குள் சற்று அதிகமாகவே ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அது முக்கியமான ஒரு செய்தியைச் சொல்வதுபோலவே இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு