Published:Updated:

சசிகலாவைக் காப்பாற்றுவாரா சுப்பிரமணியன் சுவாமி? - எதிர்பார்ப்பில் எகிறும் அ.ம.மு.க.

ந.பொன்குமரகுருபரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவை, பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி காப்பாற்றுவார் என அ.ம.மு.க வட்டாரங்கள் திடமாகக் கூறுகின்றன. இதன் பின்னணியில் பெரிய திட்டமே இருப்பதாகவும் காதைக் கடிக்கின்றனர்.

சசிகலா
சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இவருக்கு விதிக்கப்பட்ட நான்கு வருட தண்டனைக் காலத்துக்கு முன்னரே, நன்னடத்தை அடிப்படையில் அவரை விடுவிக்க அ.ம.மு.க. தரப்பில் காய்கள் நகர்த்தப்படுகிறது. இதுதொடர்பாக பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடமும் பேசியுள்ளனராம்.

சுப்பிரமணியன் சுவாமி!
சுப்பிரமணியன் சுவாமி!

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், ``ஜெயலலிதா மறைந்ததிலிருந்தே, சசிகலா மீது சுப்பிரமணியன் சுவாமிக்கு ஒரு `சாஃப்ட் கார்னர்’ இருந்தது. இதற்கு முதற்காரணம், மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவர் சசிகலாவுக்கு எதிராக நடத்திய அரசியல்தான். சம்பந்தப்பட்ட அந்த ஆடிட்டருக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் ஆகாது.

எதிரிக்கு எதிரி நண்பன் கணக்காக, சசிகலாவை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்தார், சு.சுவாமி. எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் பெங்களூரு சிறைச்சாலையிலுள்ள சசிகலாவை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கூறினார்.

ஆதரவாகப் பேசினாலும் அவ்வப்போது சில எதிர்ப்பு கருத்துகளையும் பதிவுசெய்ய அவர் தவறவில்லை. 2019 தேர்தல் சமயத்தில், அவர் பதிவுசெய்த ஒரு விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

``தமிழக அரசியல் சூழல் குறித்து விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, தேசப் பக்தி உள்ளவர்கள் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. சசிகலா குடும்பத்தினர்மீது மிதமான போக்கை கடைப்பிடிக்கும் சு.சுவாமிதான் எங்களுக்குள்ள துருப்புச் சீட்டு. சசிகலா பற்றிய தவறான அபிப்ராயம் பி.ஜே.பி தலைமையிடம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள சிலர் திட்டமிட்டு சசிகலாவுக்கு எதிராகக் காய் நகர்த்தி வெற்றிபெற்றுள்ளார்கள். இவற்றையெல்லாம் சு.சுவாமி மூலமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடமும், பி.ஜே.பி தலைவர்களிடமும் கொண்டுசென்றுள்ளோம்” என்றார்.

சமீபகாலமாக பிரதமர் மோடிக்கும், சு.சுவாமிக்கும் நல்ல உறவு இல்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியுடன் கொண்ட பகை காரணமாக பிரதமருடன் முட்டிக்கொண்டது, நிதியமைச்சர் பதவியை எதிர்பார்த்து கடைசிவரை லாபி செய்தது என இருவருக்கும் இடையே மனக்கசப்புகள் அதிகம். இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமியை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறது அ.ம.மு.க.

தினகரனுடன் சசிகலா
தினகரனுடன் சசிகலா

அதேவேளையில், இன்னும் இரண்டு மத்திய அமைச்சர்களும் சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கிறார்களாம். அவர்கள் மூலமாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை நெருங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. `விரைவில் சசிகலாவை விடுதலைசெய்ய சட்டப்படி முயன்று வருகிறோம்’ என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டியளித்ததும் இதையொட்டிய காய்நகர்த்தல்தான் என்கிறார்கள்.

இத்திட்டம் குறித்து நம்மிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி தரப்பினர், ``2017-ம் ஆண்டே, தாம் சசிகலாவை ஆதரிக்கவில்லை என்பதை சுப்பிரமணியன் சுவாமி தெளிவாக்கிவிட்டார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதற்கு சு.சுவாமி தொடுத்த வழக்குதான் காரணம். அதேவேளையில், தி.மு.க., அ.தி.மு.க-வை ஒடுக்க தினகரனை ஆதரிக்குமாறு அவர் கூறியதில் தவறில்லை. `தேச ஒற்றுமையைக் காக்க தி.மு.க., அ.தி.மு.க-வைப் புறக்கணியுங்கள்' என்றுதான் அவர் சொன்னார்” என்றனர்.

சசிகலா
சசிகலா

புலி வருது கதையாக, சசிகலா விடுதலை விவகாரம் நீ…ண்ட நாள்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போது வருகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.