Published:Updated:

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளுக்கு தமிழ்நாடு அரசு இனி செவிசாய்க்காதா?!

பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதனால், இனிமேல் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளுக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளுக்கு தமிழ்நாடு அரசு இனி செவிசாய்க்காதா?!

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதனால், இனிமேல் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளுக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Published:Updated:
பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வந்தது. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சி.ஜி.எஸ்.டி), மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி), ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐ.ஜி.எஸ்.டி), யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (யு.ஜி.எஸ்.டி) என நான்கு வகையாக ஜி.எஸ்.டி வகைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்களை உள்ளடக்கிய 33 உறுப்பினர்களைக் கொண்ட ஜி.எஸ்.டி குழு அமைக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

சுதந்திர இந்தியாவில் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை என்று சொல்லப்பட்ட ஜி.எஸ்.டி மூலமாக, மத்திய - மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்ட பிறகு, மாநிலங்களிடமிருந்து வரி விதிக்கும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டதாக விமர்சனம் எழுந்தது. ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டதால் ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடுசெய்யும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை என்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கொந்தளிக்க ஆரம்பித்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், ஜி.எஸ்.டி கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவுகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளையும், அதன் பரிந்துரைகளையும் மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று என்பதை ஏற்க முடியாது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அந்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், ஜி.எஸ்.டி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த், நரசிம்மா ஆகியோர் கொண்ட அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது

அந்த தீர்ப்பில், ``ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் சில சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசியல் சாசனப் பிரிவு 246 ஏ-ன்படி, வரி விதிப்பு விவகாரத்தில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் சம அதிகாரம் இருக்கிறது. மாநிலங்களும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து உரையாடக்கூடிய இடமாக இந்திய கூட்டாட்சி இருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் பார்க்கும்போது, ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது. மேலும், ஜி.எஸ்.டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்லாமல், அனைத்து சட்டமன்றங்களுக்கும் சம உரிமை உள்ளது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பில், மாநிலங்களின் உரிமை குறித்தும், கூட்டாட்சியின் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு குறித்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

“கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு மாநில உரிமைகளின் வலிமையை உணர்த்தும் வகையில் தீர்ப்பு அமைந்திருக்கிறது” என்று கூறியுள்ள தமிழக நிதியமைச்சர், “பல ஆண்டுகளாக மாநில உரிமைகளைக் குறைக்கும் வகையிலும் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையிலும் மத்திய அரசு, ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் செயல்கள் இருந்தன. ஜி.எஸ்.டி கவுன்சில் மாநில, மத்திய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். அரசுகளை அது கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சில தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள். இந்த தீர்ப்பை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. அதே நேரத்தில், மாநிலங்களின் உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும், மத்திய அரசின் ஏகபோக உரிமைக்கு கடிவாளம் போடப்பட்டிருப்பதாகவும் இந்த தீர்ப்பு பார்க்கப்படுகிறது.

தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

இந்த தீர்ப்புக்குப் பிறகு, ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கான அதிகாரங்கள், அதன் செயல்பாடுகள் சம்பந்தமாக சில சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை தமிழக நிதியமைச்சர் பெரிதாக வரவேற்றிருந்தாலும், ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு தமிழக அரசு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது குறித்து தமிழக நிதித்துறை வட்டாரத்தில் பேசியபோது, “ஜி.எஸ்.டி பாக்கி, இழப்பீடு ஆகியவற்றை வழங்குமாறு தொடர்ச்சியாக மத்திய அரசிடம் போராடிவந்தோம். இந்த நிலையில், சிறப்பான ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது” என்று கூறினர்.