Published:Updated:

ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிய கல்வெட்டு! - சட்டப்பேரவையைப் புதிய இடத்துக்கு மாற்றும் திட்டமா?

ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிய கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையை புதிய இடத்துக்கு மாற்றுவதற்கு அரசு திட்டமிடுகிறதா என்ற கேள்வியும் சர்ச்சையும் தற்போது எழுந்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில், தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் நீண்டகாலமாகச் செயல்பட்டுவரும் நிலையில், அங்கு இடவசதி போதவில்லை என்ற காரணத்தால், 2006-2011 கால தி.மு.க ஆட்சியில் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டப்பட்டது. அன்றைய முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டமாக, திராவிடக் கட்டடக் கலை வடிவமைப்புடன் அந்தக் கட்டடம் கட்டப்பட்டது. ரூ.629 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அந்தக் கட்டடம் அமைக்கப்பட்டது.

புனித ஜார்ஜ் கோட்டை
புனித ஜார்ஜ் கோட்டை

அந்தக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்ட நேரத்தில், 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. புதிய தலைமைச் செயலகத்துக்கான வசதிகளுடன் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தில், சட்டசபையைக் கொண்டு செல்லாமல், அதை ஓர் உயர் பன்னோக்கு மருத்துவமனையாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா மாற்றிவிட்டார். அப்போதிலிருந்து இந்தக் கட்டடம் உயர் பன்னோக்கு மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று தொடங்கியவுடன், கொரோனா தொற்றாளர்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக அது மாற்றப்பட்டது.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், ஓமந்தூரார் உயர் பன்னோக்கு மருத்துவமனை செயல்பட்டுவரும் கட்டடத்தில் சட்டப்பேரவை மாற்றப்படலாம் என்று பேச்சு எழுந்திருந்தது. இந்தநிலையில் திடீரென தற்போது, ‘புதிய சட்டப்பேரவை தலைமைச் செயலக வளாகம்’ என்ற கல்வெட்டு மீண்டும் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கல்வெட்டில், 2010-ம் ஆண்டு, மார்ச் 13-ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங், சட்டப்பேரவை அரங்கத்தையும், தலைமைச் செயலகத்தையும் திறந்துவைத்தார் என்ற விவரம் இடம்பெற்றுள்ளது. அரசு பன்னோக்கு மருத்துவமனையை ஜெயலலிதா திறந்துவைத்த கல்வெட்டு அருகில் மாற்றப்பட்டு, அதன் அருகில் இந்தப் புதிய கல்வெட்டு பொருத்தப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

இதனால், உயர் பன்னோக்கு மருத்துவமனை செயல்படும் கட்டடத்துக்கு புதிய சட்டமன்றம் மாற்றப்படப்போகிறது என்ற பேச்சு பரவலாக எழுந்திருக்கிறது. ஏற்கெனவே, சென்னை கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் அரசு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அந்த மருத்துவமனை தயாராகிவிட்டால், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை செயல்படும் கட்டடத்துக்கு சட்டமன்றம் மாற்றப்படலாம் என்கிற ஒரு பேச்சும் எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை, மருத்துவமனையாகவே செயல்படும் என்றும், அங்கு தலைமைச் செயலகம் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ``சட்டமன்றத்துக்கு என திட்டமிட்டு, அதற்கான வசதிகளுடன் பசுமைக் கட்டடமாக அது கட்டப்பட்டது என்றாலும், மருத்துவமனையாக மாற்றப்பட்ட பிறகு, அதற்கு உள்ளே நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதையெல்லாம் உடைத்தெடுத்து, அங்குள்ள பொருள்களையெல்லாம் மாற்ற வேண்டுமென்றாலே ஒரு வருடம் பிடிக்கும். மேலும், அதற்கு கோடிக்கணக்கில் செலவிடவேண்டியிருக்கும். பாடப் புத்தகப் பையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களை அகற்றுவதற்கு ரூ.13 கோடி செலவாகும் என்பதால், அது அப்படியே இருக்கட்டும் என்று சொன்னவர் முதல்வர் ஸ்டாலின். எனவே, அது போன்ற ஒரு முடிவைத்தான் மருத்துவமனை விஷயத்திலும் முதல்வர் எடுப்பார்” என்றனர்.

கருணாநிதி
கருணாநிதி

மருத்துவமனையை, சட்டமன்றமாக மாற்றுவதற்கு அரசு விரும்பவில்லையென்றால், பழைய கல்வெட்டை மீண்டும் அங்கு வைத்ததற்கான காரணம் என்ன என்ற கேள்வியை அந்த அதிகாரிகளிடம் முன்வைத்தோம். ``சட்டமன்றம் மற்றும் தலைமைச்செயலகத்துக்காகவே அந்தக் கட்டடம் கட்டப்பட்டது என்றும், முதல்வர் கருணாநிதி தலைமையில், சோனியா காந்தி முன்னிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்துவைக்கப்பட்டது என்ற செய்தியும் மறைந்துவிடக் கூடாது என்பதால், புதிய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது’’ என்றனர்.

உத்தரப்பிரதேசம் முதல் குஜராத் வரை... சட்டமன்றத் தேர்தல்களுக்கான பாஜக-வின் அதிரடி நகர்வுகளின் பின்னணி

மேலும், ``பல ஆண்டுகளாக மருத்துவமனையாகச் செயல்பட்ட அந்தக் கட்டடத்துக்கு சட்டமன்றத்தை மாற்றுவதை சென்டிமென்ட்டாக யாரும் விரும்பவில்லை. கொரோனா பொருந்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக அது மாற்றப்பட்ட பிறகு, அங்கு ஏராளமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, அங்கு சட்டமன்றத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற விருப்பம் ஆட்சியாளர்களுக்கு இல்லை. கொரோனாவுக்குப் பிறகு மருத்துவமனையின் தேவை அதிகரித்திருக்கிறது. ஆகவேதான், கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை ஒன்றைத் தமிழக அரசு உருவாக்குகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எனவே, அந்த மருத்துவமனைக்கும், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு சட்டமன்றம் மாற்றப்படும் என்று சொல்லப்படுகிற விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை. அதையும் இதையும் முடிச்சுப்போட வேண்டாம். மக்களுக்கான மருத்துவ வசதியின் தேவை கருதித்தான் கிண்டியில் புதிய மருத்துவமனை கட்டப்படவிருக்கிறது. அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற வளாகம் என்பது கலைஞர் கருணாநிதியின் கனவுத்திட்டம் என்பதால், இன்றைய ஆட்சியாளர்கள் இதை ஒரு சென்டிமென்ட் ஆகப் பார்க்கக்கூடும் என்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், மருத்துவமனையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இல்லை” என்றனர் அதிகாரிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு