Election bannerElection banner
Published:Updated:

அதிமுக-வின் வாஷிங் மெஷின் வாக்குறுதி வாக்காளர்களைக் கவருமா?#TNElection2021

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுக-வின் இலவச அறிவிப்புகள் வாக்களர்களைக் கவருமா... மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.

அதிமுக-வின் தேர்தல் அறிக்கை கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியானது. அம்மா வாஷிங் மெஷின், கல்விக்கடன் தள்ளுபடி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவிகிதம் கட்டணச் சலுகை, விலையில்லா கேபிள் டி.வி இணைப்பு, வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு என ஏராளமான அறிவிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன. இதற்கு முன்பாக மகளிர் தினத்தன்று, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500, ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

``தி.மு.க தலைவர் ஸ்டாலின், இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என திருச்சி மாநாட்டில் அறிவித்ததை காப்பியடித்து அதனுடன் ஐநூறு ரூபாயைச் சேர்த்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு செய்கிறார்'' என தி.மு.கவினர் அப்போது விமர்சனம் செய்தனர். இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``அ.தி.மு.க-வின் திட்டம் இது. நாங்கள் அறிவிக்கவிருப்பதை அறிந்துகொண்டு அதை ஸ்டாலின் அறிவித்துவிட்டார். கட்சியிலிருக்கும் சில ஆர்வக் கோளாறுகளால்தான் இப்படி அ.தி.மு.க-வின் நல்ல திட்டங்கள் கசிந்துவிடுகின்றன” என்று பதிலளித்திருந்தார்.

அந்த அளவுக்கு தேர்தல் களத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் இருக்கின்றன. கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை மக்களை வெகுவாகக் கவர்ந்தது. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என தி.மு.க-வின் பல அறிவிப்புகள் ஏராளமான வாக்குகளை அள்ளிக்கொடுத்தன. அதுவரை இலவசங்களையும் இது போன்ற நலத்திட்டங்களிலும் பெரிதாக கவனம் செலுத்தாத ஜெயலலிதா அப்போது சுதாரித்துக்கொண்டார். 2011 தேர்தலின்போது தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை வரும்வரைக் காத்திருந்து, அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இலவச மிக்ஸி, ஃபேன், முதியோர் உதவித்தொகை உயர்வு, திருமண உதவித்தொகை உயர்வு ஆகிய தி.மு.க-வின் அறிவிப்புகளுடன் இலவச கிரைண்டர், மாணவர்களுக்கு லேப்டாப் எனப் பல அதிரடி அறிவிப்புகளையும் அள்ளி வீசினார். அது அவருக்குத் தேர்தல் களத்தில் கைகொடுக்கவும் செய்தது. ஜெயலலிதாவின் பாணியில்தான் தற்போது எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டிருக்கிறார்.

அதிமுக தேர்தல் அறிக்கை...!
அதிமுக தேர்தல் அறிக்கை...!

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை வெளியான மார்ச் 13-ம் தேதிக்கு அடுத்தநாள் அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை வெளியானது. எதிர்பார்த்ததைப்போலவே இலவச வாஷிங் மெஷின், இலவச டேட்டா என மக்களைக் கவரும் ஏராளமான அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன. இந்தநிலையில், அ.தி.மு.க-வின் இந்த அறிவிப்புகள் வாக்களர்களைக் கவருமா என மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.

அய்யநாதன் (மூத்த பத்திரிகையாளர்)

``மக்கள் மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்துவந்து நிற்கும் சூழலில் இந்தத் தேர்தல் வந்திருக்கிறது. கொரோனா காலத்தில் எதுவும் இல்லாமல் விவசாயிகள், வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். ரேஷன் கடையில் கொடுத்த 1,000 ரூபாயை வைத்துக்கொண்டு உயிர்வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். அதனால், இந்த ஆட்சி நிர்வாகத்தின் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருக்கிறது.

அய்யநாதன்
அய்யநாதன்

அதனால், வாஷிங் மெஷின் வாக்குறுதிகள் எல்லாம் பெரிதாக எடுபடாது. அந்தக் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் வாக்களிக்கலாமே தவிர பொதுவான மக்களின் வாக்குகள் இதனால் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. காரணம், நான் ஏற்கெனவே சொன்னதுபோல, கொரோனா சூழல் மக்களை மிகவும் சிந்திக்கவைத்திருக்கிறது. அந்த அனுபவத்திலிருந்துதான் மக்கள் வாக்களிப்பார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசின் மீதான அதிருப்திதான் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது. அது தற்போது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வின் மூலம் இன்னும் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. அதனால், இந்தமுறை மக்கள் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துத்தான் வாக்களிப்பார்கள். இது போன்ற வாக்குறுதிகளுக்கெல்லாம் செவிசாய்க்க மாட்டார்கள்'' என்கிறார் அவர்.

ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்)

``அ.தி.மு.கவுக்கு கிடைக்கக் கூடிய வாக்குகள்தான் கிடைக்கும். இலவசங்களின் தாக்கமெல்லாம் தற்போது மலையேறிவிட்டது. 1967-ம் ஒரு ரூபாய்க்கு மூணு படி அரிசி, 2006-ல் இலவச கலர் டி.வி-க்கு ஒரு இம்பேக்ட் இருந்தது உண்மைதான். ஆனால், தற்போது, ஒரு கட்சி ஒரு அறிவிப்பு வெளியிட, மற்றொரு கட்சியும் அதே மாதிரியான அறிவிப்புகளை வெளியிட அது சமன் செய்யப்பட்டுவிட்டது. உதாரணமாக, தி.மு.க-வின் வாக்குறுதிகளுக்கு ஒரு லட்சம் வாக்குகள் விழுந்தால், அ.தி.மு.க-வின் வாக்குறுதிகளுக்கு ஒரு லட்சம் வாக்குகள் விழும். ஒரு கட்சிக்கு மட்டும் வாங்குவங்கியாகத் திரளாது. தவிர, இதுவரை கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளில் சில விஷயங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பல விஷயங்கள் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் அனைத்தையும் யோசிப்பார்கள்'' என்கிறார் அவர்.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

தராசு ஷ்யாம் (மூத்த பத்திரிகையாளர்)

``இந்தத் தேர்தலில் நிச்சயமாக வாஷிங் மெஷின் போன்ற இலவச வாக்குறுதிகளெல்லாம் கைகொடுக்காது. 'எது முடியும், எது முடியாது' என மக்கள் தெளிவாகிவிட்டார்கள். கடந்த தேர்தலில் அ.தி.மு.க கொடுத்த பல வாக்குறுதிகளே இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்தமுறை கட்சியைத் தாண்டி போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதியை மக்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது தமிழக தேர்தல் களத்தில் மிகப்பெரிய மாற்றம். ஜனநாயகரீதியில் நல்ல வளர்ச்சி. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லாதது இதற்குக் காரணமாக இருக்கலாம். அவர்களின் மீது மக்கள் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்திருப்பார்கள். ஆனால், தற்போது ஸ்டாலினுக்கோ, எடப்பாடிக்கோ வாக்குகள் இல்லை. பெட்ரோல் விலை, காஸ் விலை உயர்வு போன்ற பிரச்னைகளின் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

`நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம்' - அ.தி.மு.க தலைமைக்கு எதிராக செய்தித் தொடர்பாளர்கள் போர்க்கொடி?!

தவிர, குடியுரிமை திருத்தச் சட்ட விஷயத்தில் நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்துவிட்டு தற்போது சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம் என அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னால், மக்கள் எப்படி நம்புவார்கள். மக்கள் முன்புபோல இல்லை. சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு, எல்லாமே உடனுக்குடன் வீடியோவாக வெளிவந்துவிடுகின்றன. அரசியல்வாதிகளின் கருத்துகள், அறிவிப்புகளுக்கு உடனடியாக எதிர்வினை வந்துவிடுகிறது. அதனால், அரசியல் கட்சிகள் இனி மக்களை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது. கவர்ச்சித் திட்டங்களுக்கு மக்கள் செவிசாய்க்க மாட்டார்கள்'' என அடித்துச் சொல்கிறார்.

சிங்கை ராமச்சந்திரன்
சிங்கை ராமச்சந்திரன்

மேற்கண்ட கருத்துகள், விமர்சனங்கள் குறித்து, அ.தி.மு.க-வின் சிங்கை ராமச்சந்திரனிடம் பேசினோம். ``அம்மாவின் அரசு பொங்கல் பரிசு, லேப்டாப் என இதுவரை சொன்ன விஷயங்களையெல்லாம் சரியாகச் செய்திருக்கிறது. மக்களுக்காக எதெல்லாம் முடியுமோ அதைச் செய்து அண்ணன் எடப்பாடியார் நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் காழ்ப்புணர்ச்சியில் விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றன. அவர்களின் விமர்சனங்களுக்கான பதில் தேர்தல் முடிவுகளின்போது தெரிந்துவிடும். மக்களுக்காக எந்த வேலையையும் செய்யாமல் வெறும் வாஷிங் மெஷின் மட்டும் கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களுக்கான பல நலப்பணிகளைச் செய்து அதோடு பெண்களின் சுமையைக் குறைக்கும் தமாக வாஷிங் மெஷின் வழங்கும்போது மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். மக்கள் எங்களை முழுமையாக நம்புகிறார்கள். எங்களை பெருவாரியாக வெற்றிபெற வைப்பார்கள். கண்டிப்பாக நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம்'' என்கிறார் அவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு