Published:Updated:

இமாச்சல் தந்த உத்வேகம்... விட்ட மாநிலங்களை மீண்டும் பிடிக்குமா காங்கிரஸ்?!

ராகுல் காந்தி, பிரியங்கா

இமாச்சலப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி, ஏற்கெனவே ஆட்சியை இழந்த மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது?

இமாச்சல் தந்த உத்வேகம்... விட்ட மாநிலங்களை மீண்டும் பிடிக்குமா காங்கிரஸ்?!

இமாச்சலப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி, ஏற்கெனவே ஆட்சியை இழந்த மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது?

Published:Updated:
ராகுல் காந்தி, பிரியங்கா

ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. சொல்லப்போனால், 18 மாநிலங்களில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தற்போது ஒரு மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. தற்போது, ராஜஸ்தான், சத்தீஸ்கர் என இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், மூன்றாவதாக இமாச்சலப் பிரதேசம் சேர்ந்திருக்கிறது.

ராகுல், பிரியங்கா, சுக்விந்தர் சிங் சுகு, மற்றும் காங். தலைவர்கள்
ராகுல், பிரியங்கா, சுக்விந்தர் சிங் சுகு, மற்றும் காங். தலைவர்கள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுக்விந்தர் சிங் சுகு இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். அந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். குஜராத்தில் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், இமாச்சலப் பிரதேசத்தில் பெற்றிருக்கும் வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது.

``இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க-விடமிருந்து ஆட்சியைப் பறித்திருக்கிறோம். இந்த வெற்றி, மற்ற மாநிலங்களிலும் பா.ஜ.க-வுக்கு எதிராகப் போராடக்கூடிய கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது என்கிற செய்தியை, கூட்டணிக் கட்சியினருக்குச் சொல்வதாக இருக்கிறது” என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்று இரண்டு மாதங்களில் கிடைத்திருக்கும் வெற்றி இது.

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்
பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்

கடந்த ஒன்பது ஆண்டுகளில், குறிப்பாக மோடி தலைமையிலான பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, 37 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கிறது. சமீபத்தில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றது. 2021-ம் ஆண்டு அஸ்ஸாமில் பா.ஜ.க-விடமும், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸிடமும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸிடமும், கேரளாவில் சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியிடமும் காங்கிரஸ் தோற்றுப்போனது.

இந்த நிலையில், இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்து சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். சுக்விந்தர் சிங் சுகு முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, இமாச்சலப் பிரதேச மக்களுக்கு இதயபூர்வமான நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறினார். அப்போது, காங்கிரஸ் கட்சி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று ராகுல் உறுதியளித்தார்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

அந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள், இமாச்சலப் பிரதேசம், பெரிய மாநிலம் கிடையாது. ஆனாலும், அடுத்து ஒன்பது மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருக்கும் சூழலில், தற்போது பெற்றிருக்கும் வெற்றி, காங்கிரஸ் கட்சியினருக்கும் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்திருக்கிறது” என்று குறிப்பிட்டனர். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, திரிபுரா, மிசோரம், மேகாலயா, தெலங்கானா, நாகலாந்து ஆகிய ஒன்பது மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருக்கின்றன.

இந்த ஒன்பது மாநிலங்களில் ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரை பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. `அங்கு நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம்’ என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.

மத்தியப்பிரதேசத்தில் 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று கமல்நாத் தலைமையில ஆட்சியமைத்தது. அங்கு, சுமார் இரண்டு ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. ஆனால், சில காய்நகர்த்தல்களால் பா.ஜ.க வசம் ஆட்சி சென்றுவிட்டது. இந்த முறை அங்கு ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். விட்ட மாநிலங்களைப் பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை காங்கிரஸாருக்கு இருக்கலாம்.

யாத்திரையில் ராகுல் காந்தி
யாத்திரையில் ராகுல் காந்தி

ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வை. பா.ஜ.க-வின் அதிகார பலத்தையும், அதன் தேர்தல் உத்திகளையும் எதிர்கொள்வது கடினம் என்கிற யதார்த்தத்தை காங்கிரஸார் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், இமாச்சல் பிரதேசத்தில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றிபெற்றாலும், பதவியேற்புக்கு முன்னதாக, பா.ஜ.க மீதான அச்சத்தால் தனது எம்.எல்.ஏ-க்களை சிம்லாவில் தங்கவைத்திருந்தனர். உத்திகளை மாற்றுவது, உட்கட்சிப்பூசல்களைச் சரிசெய்வது, மக்கள் சந்திப்புகளைத் தொய்வின்றி தொடர்வது ஆகியவற்றைச் சாத்தியப்படுத்தினால், சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றியைச் சுவைப்பதற்கு வாய்ப்பு கிடைக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.