Published:Updated:

பிரியா மரண வழக்கு: மருத்துவ சங்க அறிக்கை... பின்வாங்குகிறதா திமுக அரசு? - அமைச்சர் மா.சு பதில் என்ன?

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம்

சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த விவகாரத்தில் அரசு பின்வாங்குகிறதா..?

பிரியா மரண வழக்கு: மருத்துவ சங்க அறிக்கை... பின்வாங்குகிறதா திமுக அரசு? - அமைச்சர் மா.சு பதில் என்ன?

சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த விவகாரத்தில் அரசு பின்வாங்குகிறதா..?

Published:Updated:
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம்

வீராங்கனை மரணம்!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி பிரியா. கால்பந்து வீராங்கனையான இவருக்கு வலது கால் மூட்டுப் பகுதியில் வலி ஏற்பட்டிருக்கிறது. கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கடந்த 7-ம் தேதி அவருக்கு மூட்டுச் சவ்வு அறுவை சிகிச்சைசெய்தனர். இருந்தபோதிலும், அவருக்குத் தொடர்ந்து கால்வலி இருந்த காரணத்தால், அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா

அங்கு மாணவியைப் பரிசோதனை செய்தபோது மருத்துவர்களுக்கு, பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, பிரியாவின் வலது கால் வெட்டி அகற்றப்பட்டது. மருத்துவமனையில் தவறான சிகிச்சை வழங்கப்பட்டது என்று புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவத்துறை சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்த மாணவி கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மருத்துவர்கள் மீது நடவடிக்கை!

கவனக்குறைவாகச் செயல்பட்ட காரணத்துக்காக, கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனை எலும்பியல்துறையைச் சேர்ந்த கே.சோமசுந்தர், ஏ.பல்ராம் ஆகிய இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மருத்துவத்துறை அறிவித்தது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதே சமயத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பெற்றோர் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள். `இயற்கைக்கு மாறான மரணம்’ என்ற பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. அதே சமயத்தில், மாணவியின் மரணம் தொடர்பாக மருத்துவக்குழு அமைத்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று துறை சார்பில் உத்தரவு வெளியானது.

பிரியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் முதல்வர்
பிரியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் முதல்வர்

அந்தக் குழு தனது விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. அதில், "மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம்" என்று விசாரணைக்குழு குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 304A அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று கருதப்பட்ட நிலையில், இரண்டு மருத்துவர்களும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் மருத்துவர்களைப் பிடிக்க, தனிப்படை போடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.

மருத்துவர் சங்கம்

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், "சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பாக, சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. முதல்வரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலுக்கும் உதவித்தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி மருத்துவச் சிகிச்சையின்போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக, அந்தத் துறை மூத்த நிபுணர் கருத்தை காவல்துறை பெற வேண்டும். அவ்வாறு மூத்த நிபுணர் அந்த மரணத்தில் மருத்துவச் சிகிச்சையின்போது கடும் கவனக்குறைவு (Criminal Negligence) இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304 A பிரிவில் வழக்கு தொடர வேண்டும்.

பிரியா குடும்பத்தினருக்கு நிவாரணங்களை வழங்கும் முதல்வர்
பிரியா குடும்பத்தினருக்கு நிவாரணங்களை வழங்கும் முதல்வர்

அப்படி 304 A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் மருத்துவர்களைக் கைதுசெய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. தற்போது நடந்த மரணத்தில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாகச் சிறப்பு மருத்துவர்குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்திருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழக காவல்துறை கிரிமினல் வழக்கில் மருத்துவர்களைச் சேர்த்து அவர்களைத் தனிப்படை அமைத்துத் தேடிவருவதாகச் செய்திகள் வருகின்றன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் மருத்துவர்களைக் கொலைக் குற்றவாளிபோல முன்ஜாமீன் மறுத்து, உடனடியாகச் சரணடையக் கூறியிருப்பது நாட்டிலுள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.

இந்த நிகழ்வில் சிவில் கவனக்குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள்மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. நோயாளியின் காலை சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பிறகு கவனக்குறைவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும் அது சிவில் நெக்லிஜென்ஸில் மட்டுமே வரும். போலீஸ் நடவடிக்கை அதிகப்படியானது. மருத்துவர் செவிலியர், சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது. எனவே, மருத்துவர்மீது பதியப்பட்ட 304 A பிரிவு மாற்றப்பட வேண்டும்.

கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர்
கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர்

அதையும் மீறி மருத்துவர் கைதுசெய்யப்பட்டால், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பியிருக்கிறது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள்தான். கவனக்குறைவால் துரதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும்" என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

`கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்!’

இந்த விவகாரம் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``கால்பந்து வீராங்கனை பிரியாவின் இழப்பு எந்த நிவாரணத்தாலும் ஈடு செய்ய முடியாதது. மூட்டு அறுவை சிகிச்சை நடந்த சமயத்தில் போடப்பட்ட கட்டால் மாணவியின் உடலில் ரத்த ஓட்டம் தடையானது. சிகிச்சை அளித்த மருத்துவர்களின் கவனக்குறைவுதான் மாணவியின் மரணத்துக்குக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணைக்குழு அறிக்கை அடிப்படையில், இதில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் கண்டிப்பாக துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தொடர்ந்து பேசியவர், "அரசுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இது போன்ற அசம்பாவிதம் இனிவரும் காலங்களில் நடைபெறாமலிருக்க, நாட்டிலேயே முன்மாதிரியாக அறுவை சிகிச்சை தணிக்கை செய்யும் குழு அமைக்கப்படவிருக்கிறது. கடந்த 23.11.2022 அன்று அறுவை சிகிச்சைக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சென்னை ஆகிய நான்கு மண்டலங்களில் அறுவை சிகிச்சை தணிக்கை செய்யும் குழு அமைக்கப்படும்" என்று பேசினார்.