Published:Updated:

மூன்றாவது முறையாக குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்! -பேரறிவாளன் விடுதலையில் உடனே முடிவெடுப்பாரா ஆளுநர்?

பேரறிவாளன்
News
பேரறிவாளன்

'தமிழக அரசே நேரடியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம்' என்கிற கருத்துகளும் ஒருசிலரால் முன்வைக்கப்படுகின்றன.

'பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தாமதித்தததை ஏற்க முடியாது' என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், எழுவர் விடுதலை விவகாரத்தில், 'ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசே நேரடியாக விடுதலை செய்யவேண்டும்' என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கடந்த 2018, செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கவே, அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளன். 2020 நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆளுநர் தாமதம் செய்துவருவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

எழுவர் விடுதலை
எழுவர் விடுதலை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து, இந்தாண்டு ஜனவரி 21-ம் தேதி, மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ''தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களில் முடிவெடுப்பார்'' என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், விடுதலை குறித்து தெளிவுபடுத்தக் கூறி பேரறிவாளன் தரப்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து, 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க ஒரு வார கால அவகாசம் வழங்கி விசாரணையை 2 வாரங்களுக்கு ஓத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். ஆனால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் கடந்த 7-ம் தேதி நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்போது, பேரறிவாளன் தரப்பில், “முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துவருகிறேன். என்னை விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பான தமிழக அரசு தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அதன் மீது முடிவெடுக்காமல் கால தாமதம் செய்துவருகிறார்தவர் விரைந்து முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது. அதேபோல, தமிழ்நாடு அரசு சார்பில், “7 பேர் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த்திவருகிறார். அதன் மீது அவர் முடிவெடுக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கின் விசாரணையை ஒருவாரம் தள்ளிவைக்கக் கோரியிருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

மூன்று தரப்பின் வாதங்களையடுத்து பேசிய நீதிபதிகள், “பேரறிவாளன் விடுதலை மீது ஆளுநர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என ஏற்கனவே 2018-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், அவரை விடுதலை செய்வதா, வேண்டாமா? என முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. அதேசமயம் முடிவெடுக்கக் கால தாமதம் செய்வதை ஏற்க முடியாது. அதனால், தமிழக அரசின் தீர்மானத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்” என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'கடந்த 2020 ஜனவரியில் ஒருமுறை, அதே ஆண்டு நவம்பரில் ஒருமுறை, தற்போது ஒருமுறை என இதுவரை மூன்றுமுறை ஆளுநர் தாமதம் செய்வது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், இன்னமும் சரியான தீர்வு கிடைத்தபாடில்லை' என வருத்தம் தெரிவிக்கின்றனர் வழக்கறிஞர்கள். இந்தநிலையில், தமிழக அரசு ஆளுநருக்கு உரிய அழுத்தம்தர வேண்டும் என்கிற குரல்கள் எழுந்துள்ளன. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''7 தமிழர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக இந்த விஷயத்தில் ஆளுwaர் நல்ல முடிவு எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

ஆனால், 'தமிழக அரசே நேரடியாக விடுதலை செய்யலாம்' என்கிற கருத்துகளும் ஒருசிலரால் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்துப் பேசும் வழக்கறிஞர் புகழேந்தி,

`` கருணை மனுக்களைத் தீர்மானம் செய்யும் அதிகாரம் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று 72, மற்றொன்று 161. அவற்றில், 72 மத்திய அரசின் அதிகாரம் பற்றியது. பிரிவு 161 மாநில அரசின் அதிகாரம் பற்றியது. இதில், குடியரசுத் தலைவருக்கோ, கவர்னருக்கோ, முடிவு செய்யும் எந்த அதிகாரமும் இல்லை. 'அமைச்சரவையின் முடிவுக்குக் கவர்னர் கட்டுப்பட்டவர், கவர்னர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அதுபோல, கவர்னரின் கையெழுத்தே இல்லாமல் விடுதலை செய்யமுடியும்' என 1980 மாரூராம் வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு கருத்துத் தெரிவித்தது. அதுமட்டுமல்ல, 6.9.2018-ல், 161 பிரிவின்படி ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை எனவும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.

அதனடிப்படையில்தான், 2018-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கேபினெட், ஏழு பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் அதில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். குடியரசுத்தலைவர் அதை மத்திய அரசின் அமைச்சரவைக்கு அனுப்புகிறார். இது அப்பட்டமான அரசியலமைப்பு விதிமீறல். நளினி இதுகுறித்து தொடர்ந்த வழக்கு, கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது. அதில், 'கவர்னர் அரசியலமைப்புச் சட்டப்படி நடப்பேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறார். ஆனால், அரசியலமைப்புச் சட்டப்படி நடக்காமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் நடந்திருக்கிறார். அவருடைய செயல் சட்டவிரோதம். அதனால், என்னை விடுதலை செய்யவேண்டும்' எனக் கோரியிருக்கிறார். கூடுதலாக, கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பியது அரசியலமைப்பை மீறிய செயல் என உச்ச நீதிமன்றம் அறிவிக்கவேண்டும் எனவும் ஒரு வழக்குப் போட்டிருக்கிறார். இது விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இதில் இனி கவர்னருக்கு எந்த வேலையும் இல்லை. அவரிடம் மனுவே இல்லாதபோது அவர் எப்படி முடிவெடுக்க முடியும். ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியது மட்டுமல்ல, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியதும்கூட தவறு.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

இந்தநிலையில், மாநில அரசுக்கு இதில் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி அவர் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பிவிட்டார். அதனால் தமிழக அரசு எதுவும் செய்யமுடியாது என தப்பித்துக்கொள்வது. ஆனால், அப்படிச் செய்வது மாநில அரசு தன்னுடைய அதிகாரத்தை விட்டுக் கொடுத்ததாகி விடும். இல்லையென்றால், மாருராம் வழக்கை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, கவர்னரின் ஒப்புதலே இல்லாமல் ஏழு பேரையும் சட்டப்படி தமிழ்நாடு அரசு விடுதலை செய்வது. பிறகு உச்ச நீதிமன்றத்தில் அதுகுறித்து அறிக்கை சமர்பிப்பது. இந்த அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்'' என்கிறார் அவர்.

தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம்,

``மாநில அமைச்சரவைக்குத்தான் இந்த விஷயத்தில் அதிகாரம் இருக்கிறது என்பதில் திமுக அரசும் தெளிவாக இருக்கிறது. ஆனால், சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்புவது என்பது சட்ட நடைமுறை. அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டார். அதனால்தான் கடிதம் எழுதப்பட்டது. ஆளுநர் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார். இல்லாதபட்சத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை இந்த அரசு உறுதியாக எடுக்கும்'' என்கிறார் நம்பிக்கையாக.