Published:Updated:

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பாஜக அரசுக்கு பின்னடைவா?!

உச்ச நீதிமன்றம்

``இந்த விமர்சனம் பா.ஜ.க மட்டுமல்ல, மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வைக்கப்படுவது வழக்கம். இதற்கு காங்கிரஸும் விதிவிலக்கல்ல” - பா.ஜ.க-வின் பால் கனகராஜ்

Published:Updated:

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பாஜக அரசுக்கு பின்னடைவா?!

``இந்த விமர்சனம் பா.ஜ.க மட்டுமல்ல, மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வைக்கப்படுவது வழக்கம். இதற்கு காங்கிரஸும் விதிவிலக்கல்ல” - பா.ஜ.க-வின் பால் கனகராஜ்

உச்ச நீதிமன்றம்

மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்தவர் அருண் கோயல். பஞ்சாப் மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி தானாக முன்வந்து ஓய்வுபெற்றார். ஆனால், மறுநாளே இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. அதன் பிறகு அருண்கோயல் தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பார் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் மின்னல் வேகத்தில் நடந்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுத்தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு கொலீஜியம் போன்ற அமைப்பு இருக்க வேண்டும் என அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அருண் கோயல்
அருண் கோயல்
ட்விட்டர்

இந்த மனுக்களை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹரிஷிகேஷ் ராய், சிடி ரவி குமார் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, “முன்னாள் அரசு அதிகாரி அருண் கோயலை 24 மணி நேரத்துக்குள் மின்னல் வேகத்தில் நியமனம் செய்தது ஏன்... இது எந்த மாதிரியான மதிப்பீடு... அருண் கோயல் நியமனம் தொடர்பான அசல் கோப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அருண் கோயலின் தகுதி, நம்பகத்தன்மை குறித்து நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. நியமன நடைமுறை பற்றிதான் கேள்வி எழுப்புகிறோம். தேர்தல் ஆணையர் பதவிக்கு நான்கு பெயர்கள் அடங்கிய பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சர், பிரதமருக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். இவர்களில் யாருமே 6 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்யப் போவதில்லையே” என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கூறியது.

இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, “அருண் கோயல் நியமன நடைமுறையை முழுவதுமாகப் பார்க்காமல் நீதிபதிகள் கருத்து தெரிவிக்கக் கூடாது. தேர்தல் ஆணைய சட்டத்தில், `தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, இதில் எது முன்போ அதுவரை அவர்கள் பதவி வகிக்க முடியும்’ என இருக்கிறது. அருண் கோயல் நியமனம் சரியாகச் செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.

அருண் கோயல் நியமனம் தொடர்பான அசல் கோப்புகளை ஆய்வுசெய்த நீதிபதிகள் இதன் மீதான தீர்ப்பை கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி தள்ளிவைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த வாரம், ஒருமனதாகத் தீர்ப்பு வழங்கியது. இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ரஸ்தோகி, நீதிபதி ஜோசப் தலைமையிலான அமர்வின் ஒருமனதான முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனாலும், தனது காரணங்களுடன் அவர் தனிப்பட்ட தீர்ப்பையும் வழங்கினார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இல்லையென்றால், தனிப் பெரும்பான்மையுள்ள எதிர்க்கட்சியின் தலைவர், இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த நடைமுறை தொடரும்.

தலைமை தேர்தல் ஆணையம்
தலைமை தேர்தல் ஆணையம்

ஜனநாயகத்தில் தேர்தல் எந்தவித சந்தேகமும் இன்றி நியாயமாக நடைபெற வேண்டும். புனிதத்தன்மை காக்கப்படுவதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும். அரசியல் சாசன அமைப்புக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் சட்டப்படி செயல்பட வேண்டும். நியாயமற்ற முறையில் செயல்பட முடியாது. நியாயமான தேர்தலை தேர்தல் ஆணையத்தால் உறுதிசெய்ய முடியவில்லை என்றால், ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் சட்ட விதிகளின்கீழ் அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் சிதைந்து போகும். அரசியல் சாசனத்தின் 324-வது பிரிவில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் நியமனத்துக்குச் சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்தச் சட்டத்தையும் நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லை” என அதில் கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து ட்வீட் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தனது ட்வீட்டில், ``தன்னாட்சி பெற்ற அமைப்புகள் களவாடப்படும்போது, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க உரிய காலத்தில் நிகழ்ந்த உச்ச நீதிமன்றத்தின் தலையீடு முக்கியமானது. தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான செயல்பாடு துடிப்பான ஜனநாயகத்தைக் காப்பாற்ற இன்றியமையாதது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது தொடர்பாக பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாநில பார்வையாளர் பால் கனகராஜ், “தேர்தல் ஆணையத்தை ஆளும் கட்சி வசம் வைத்திருப்பதாக எல்லோரும் சொல்வார்கள். அதில் தலையிடுவார்கள், அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுவார்கள் என்பதெல்லாம் ஒரு மாயை. ஏனென்றால் இந்த விமர்சனம் பா.ஜ.க மட்டுமல்ல மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வைக்கப்படுவது வழக்கம். இதற்கு காங்கிரஸும் விதிவிலக்கல்ல. இந்திய அரசியல் அமைப்புப்படி தேர்தல் ஆணையம் என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு. அதில் தலையிடுவதோ அல்லது தலையிடாமல் இருப்பது எல்லாம் அங்கிருக்கும் அதிகாரிகளைப் பொறுத்துதான்.

 பால் கனகராஜ்
பால் கனகராஜ்

அந்த நியமனம் பிரதமர் மட்டும் நியமித்தாலும் சரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் நியமித்தாலும் சரி, சம்பந்தப்பட்ட, நியமிக்கப்பட்ட நபரை பொறுத்துதான் நடவடிக்கைகள் இருக்கும். ஒரு நபர் இந்தியாவிலிருக்கும் அரசியல் தலைவர்களை ஏமாற்ற முடியும், அவர் போக்குக்குச் செயலாற்ற முடியும் என்பதெல்லாம் நம்பமுடியாத விஷயம். அப்படியே அவர்கள் ஏதாவது தவறு செய்தாலும் களத்துக்கு வரும்போது முறியடிக்கப்படும். ஒரு தேர்தல் அதிகாரியால் நினைத்ததை இஷ்டத்துக்கு செய்ய முடியும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் எவ்வளவோ எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. அவர்கள் சும்மாவிட்டு விடுவார்களா... அதே வேளையில் இதுவரை எந்த ஓர் அதிகாரி மீதும் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டு நடந்ததில்லை. குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இதனால் பா.ஜ.க-வுக்கு எந்த ஒரு பின்னடைவும் இல்லை” என்றார்.