மாநிலத்தில் நிலவும் நிதிச்சுமையையும், மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கிவருவதையும் கருத்தில்கொண்டு மின்கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்தக் கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18-ம் தேதி மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பாக மதுரை, கோவை, சென்னை ஆகிய ஊர்களில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தியது. இந்தக் கூட்டங்களில் பல தரப்பினரும் கட்டணம் உயர்வுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், `பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு. மேலும், கடந்த எட்டு ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. எனவே, இந்தக் கட்டண உயர்வு தற்போது அவசியமாகப் பார்க்கப்படுகிறது' எனத் தெரிவித்து கட்டண மாற்றத்துக்கு அனுமதித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், `வீடுகளுக்கு 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம், குடிசைத் தொழில், விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்களில் வழங்கப்பட்டுவரும் மின்சார மானியம் தொடரும்' எனவும் அறிவித்திருக்கிறது. ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதியிலிருந்து 6 சதவிகிதம் மின்கட்டணத்தை உயர்த்தவும் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது. அதே நேரம், இந்தக் கட்டண மாற்றத்தின் காரணமாக, மின்சாரக் கட்டணம் 17 சதவிகிதத்திலிருந்து 52 சதவிகிதமாக உயரும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கட்டண உயர்வை பொதுமக்கள் மட்டுமின்றி, தொழில் நிறுவனங்களும் கடுமையாக எதிர்த்தன. மின் கட்டண உயர்வுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில், மின்கட்டணம் சிறிது குறைக்கப்பட்டிருக்கிறது. தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பீக்ஹவர்ஸில் உயர்த்தப்பட்ட 25 சதவிகிதத்திலிருந்து கட்டணத்தை 15 சதவிகிதமாகக் குறைத்து அரசு அறிவித்தது.

ஆனால், `தொழில் நிறுவனங்களுக்கு இதனால் எந்த நிவாரணத்தையும் தர முடியாது, இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே' என தொழில் அமைப்புகள் கருத்து தெரிவித்தன. மேற்படி குறைந்த அழுத்த இணைப்புக்கொண்ட தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 50 கிலோ வாட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 100 நிலைக் கட்டணம் நிர்ணயிக்கத் திட்டமிட்ட நிலையில், தற்போது அது 75 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், 5 முதல் 12 கிலோ வாட்டுகள் பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.325 உயர்ந்த திட்டமிருந்த நிலையில், ரூ.150 உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், 112 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு கிலோ வாட்டுக்கு முன்னதாக ரூ.600 உயர்த்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.550-ஆக கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன், ``மின்கட்டண உயர்வுக்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால் குறைந்த மின் அழுத்தத்தைப் பயன்படுத்தும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நிரந்தரக் கட்டணம் கூடுதலாக விதிக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, ரூ.35-க்கு அனுமதிக் கட்டணம் ரூ.300-ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் தேவைக்காகக் கூடுதல் மின்சாரத்தை வாங்கி வைப்பதற்கு தொகை அதிகம் செலவாகும்.
பீக்ஹவர்சில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்குப் பெரிய வணிகக் கட்டடங்களுக்கு மின்வெட்டு அதிகமாக இருந்த காலங்களில், கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, அனைத்து வகை சிறு, குறு தொழில் மற்றும் வணிகக் கட்டடங்களுக்கு எட்டு மணி நேரம் பீக்ஹவர்ஸுக்கு மின்கட்டணம் 25 சதவிகிதம் மடங்கு உயர்த்தி வழங்க ஆணையம் அனுமதித்தது. ஆனால், தொழிற் சங்கங்கள் எதிர்ப்பால் அது 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், இது எங்கள்மீதான சுமையில் எந்த மாற்றத்தையும் தராது.

மேலும் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத மற்றொரு ஆபத்து, ஆண்டுதோறும் நுகர்வுக் கட்டணம் 6 சதவிகிதம் அதிகரிக்கும் என்பது. தற்போது இதன் தாக்கம் தெரியாது. ஆனால், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இதன் தாக்கம் தெரியும்" என்றார்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கொரோனா பொதுமுடக்கம், சொத்து வரியைத் தொடர்ந்து இந்த மின்சாரக் கட்டண உயர்வால் தாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் நிலவுவதாக தொழில்துறையினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொரொனா காலத்தில் மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள் கிட்டத்தட்ட இன்னும் 22 சதவிகிதம் திறக்கப்படாமல் இருக்கின்றன. இந்த நிலையில், இந்தக் கட்டண உயர்வு கூடுதல் சுமையாக இருக்கும்.
ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் குறைவு என்பது உண்மை. எனவே அரசு, இந்தக் கட்டணத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினம் கோவையில் மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவை குறு, சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான போசியா சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.