தென் மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுவிக்கின் மணி மண்டபம் பராமரிப்பின்றி கிடக்கிறது. குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, இருக்கை வசதி என எதுவும் இல்லாமல் சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

1895-ம் ஆண்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட முல்லைப்பெரியாறு அணையை ஆங்கிலேயப் பொறியாளா் பென்னிகுவிக் கட்டினாா். பென்னிகுவிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையால்தான் தென் தமிழக விவசாயிகள் சுமாா் 2. 57 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து பயனடைகின்றனர். கடந்த 2013, ஜனவரி 15-ம் தேதி கூடலூர் அருகில் அமைந்துள்ள லோயா் கேம்ப்பில் இவருக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் திறந்துவைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பென்னிகுவிக் மணிமண்டபம் கடந்த ஜனவரி மாதம் மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. ஜனவரி 14-ம் தேதி பென்னிகுவிக்கின் பிறந்தநாளை முன்னிட்டு மணிமண்டபத்தைத் திறந்து, விழா கொண்டாட அரசு உத்தரவிட்டது. அப்போது கண்துடைப்புக்காக அவசரமாக சில வேலைகள் விரைவாகச் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து விழாவைக் கொண்டாடினர்.

ஆனால், எந்தவிதப் பராமரிப்புப் பணிகளும் மணிமண்டபத்தில் முறையாக மேற்கொள்ளப்படாததால், இன்றளவும் மணிமண்டபத்தில் குடிநீர், கழிவறை மற்றும் இருக்கை வசதிகளின்றி காணப்படுகிறது. அதேபோல, முன்பு பசுமையுடன் காணப்பட்ட புல்தரை இன்று பராமரிப்பில்லாமல் வறண்டு காட்சியளிக்கிறது. தண்ணீர்த் தொட்டியின் பின்புறம் உள்ள மோட்டார் மின் பெட்டியும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

``ஊர் தாகம் தீர்த்த மாமனிதரின் மணிமண்டபத்தில் மக்களின் தாகம் தீர்க்க வழியில்லாமல் போய்விட்டது. கோடைக்காலத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் இந்த மணிமண்டபத்தை அரசு விரைவில் சீரமைக்க வேண்டும்" என்று பொதுமக்கள் அரசு அதிகாரிகளை வலியுறுத்திவருகின்றனர்.

இதுகுறித்து தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ``பென்னிகுவிக் மணிமண்டபம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனக் கூறி, துறைரீதியாக உடனடியாக கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். விரைவில் மணிமண்டபம் நவீன முறையில் சீரமைக்கப்படும்" என்று கூறினார்.