Published:Updated:

நீட் விலக்கு முயற்சி:தமிழகத்தில் பாஜக நீங்கலாக ஒட்டுமொத்தக் கட்சிகளின் ஒற்றுமைக்குப் பலன் கிட்டுமா?!

நீட் தேர்வு விலக்கு - அனைத்துக் கட்சிக் கூட்டம்
News
நீட் தேர்வு விலக்கு - அனைத்துக் கட்சிக் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் விவகாரம் தொடர்பாக அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானத்தால் பலன் கிடைக்குமா?

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம்தாழ்த்திவருவதால், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 13 கட்சிகள் ஒருமனதாக தீர்மானத்தை ஆதரிக்க, பாஜக மட்டும் வெளிநடப்பு செய்திருக்கிறது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அனைத்துக் கட்சிக் கூட்டம்:

கடந்த ஜனவரி 8-ம் தேதி, தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம் என சட்டப் பேரவையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்க உரை:

அனைவரையும் வரவேற்றுப் பேசிய ஸ்டாலின், ``நீட் தேர்வு கூடாது என்பதில் நாம் அனைவரும் ஒரு கருத்துகொண்டவர்கள் என்பதில் மாறுபாடும் வேறுபாடும் இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்னை; தமிழக மாணவர்களின் பிரச்னை; இதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற கருத்துருவாக்கம் மிகவும் தேவைப்படுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு வரை கற்ற கல்வியைவிட மேலானதாக நீட் என்ற இரண்டு மணி நேரத் தேர்வு அமைவதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்... இது சமூக அநீதி அல்லவா... லட்சக்கணக்கில் பணம் செலுத்தி எத்தனை பேர் நீட் தேர்வு எழுத பயிற்சி பெற முடியும்?

கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலின்
கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலின்

ஒரு சட்டமன்றம், தனக்கு இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் கீழ் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது, அதை ஆளுநர் அவர்கள் மதித்து ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம். ஆகவே, நான் நேரில் சென்று ஆளுநர் அவர்களை வலியுறுத்தியும் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பவில்லை. மாநில உரிமையும், சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்படும் சூழ்நிலை உருவானதால்தான் அவசரமாக, அவசியத்துடன் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூட்டத்தைவிட்டு வெளியேறிய பா.ஜ.க:

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால், பா.ஜ.க மட்டும் உடன்படாமல் வெளிநடப்பு செய்தது. பா.ஜ.க சார்பில் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ``சமூகநீதிக்கு எதிராக நீட் தேர்வு இருப்பதாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பான ஒன்று. நீட் தேர்வு தீர்மானத்தில் உடன்பாடு இல்லை!" என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

கூட்டத்தைவிட்டு வெளியேறிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
கூட்டத்தைவிட்டு வெளியேறிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

அதையடுத்து, பா.ஜ.க தவிர மற்ற 12 கட்சிகளின் முழு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்பட்டவை:

``மருத்துவத்துறையில் தமிழ்நாடு இந்த நாட்டுக்கே முன்னோடியாக விளங்கிவருகிறது. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வு திருத்தச் சட்டம் மற்றும் அதன் பிறகு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியவை மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்னிறுத்தி நம் மாணவர்களைப் பெருமளவில் பாதித்துள்ளன. மாநில அரசு நிதியிலிருந்து, மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டுவரும் மருத்துவக் கல்லூரிகளில் அந்த மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறித்துவிட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.

இதுமட்டுமின்றி, ஒன்றிய அரசால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வானது, இது போன்ற நுழைவுத்தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவர் மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக் கல்வியால் எந்தவிதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி, பள்ளிக்கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும். இந்த நீட் தேர்வு மாணவர்களின் கல்விக் கனவை சிதைப்பதாக மட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை சீரழிப்பதாகவும் அமைந்துவிட்டது. ஆகவே, மாநில உரிமைகளை நிலைநாட்டவும், நம் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று ஒருமனதாக ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

ஆனால், இந்தச் சட்ட முன்வடிவை மாநில ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டப்பேரவையின் இறையாண்மைக்கு ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது. தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி முதல்வரே நேரில் சென்று ஆளுநரைச் சந்தித்து, நீட் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். மேலும் இது தொடர்பாக, கடந்த 28.12.2021 அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் சந்திக்கச் சென்ற நேரத்தில், அவரைச் சந்திக்க இயலவில்லை என்பதால், மனுவை அவரது அலுவலகத்தில் அளித்து, அன்று மாலையே அந்த மனுவும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக எம்.பி-க்களைச் சந்திக்க மறுத்த அமித் ஷா
தமிழக எம்.பி-க்களைச் சந்திக்க மறுத்த அமித் ஷா

இந்த நிலையில், இது குறித்து மேலும் வலியுறுத்திட, மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் கோரி, பல நாள்கள் ஆகியும் சந்திக்க மறுத்துவிட்டதால், அவரிடம் கொடுக்கப்படவேண்டிய மனுவும் அவரது அலுவலகத்திலேயே கொடுக்கப்பட்டது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் மறுத்தது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது என்று 6.1.2022 அன்று, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்து, இன்றைக்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரிடம் நாம் ஏற்கெனவே அளித்த கோரிக்கையைப் பரிசீலிக்க அவரிடமிருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத்துக் கட்சிகளின் சார்பில் அவரைச் சந்திக்கலாம் எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. நாமும் நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூகநீதிக்கான அரசியல், சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலமே பெற்றுள்ளோம் என்ற அடிப்படையில் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளைச் சிதைத்திடும், மாநில சுயாட்சித் தத்துவத்தை சீர்குலைத்திடும் நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிடத் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்த பிறகு, தமிழக சட்டப்பேரவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வது எனவும், நீட் தேர்வின் பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது" என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, நீட் விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என தி.மு.க செய்தித் தொடர்பாளர் இராஜீவ் காந்தியிடம் கேட்டோம். ``நீட் தேர்வைப் பொறுத்தவரையில் அதிலிருக்கும் பாதிப்புகளின் உண்மைத்தன்மையைப் பற்றி அறிவியல்பூர்வமாக ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தி.மு.க அரசு அமைத்தது. அந்த ஆய்வுக்குழு அளித்த முடிவுகளின் படி, நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் அதிகம் பாதிப்படைகிறார்கள், எனவே நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை ஏற்று, முறைப்படி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கவேண்டிய ஆளுநர் அதைக் கிடப்பில் போட்டிருக்கிறார். உள்துறை அமைச்சகத்திடமிருந்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

ஆகவே இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்தில் பேசி, அரசியல் அழுத்தம் கொடுத்து, பேசுபொருளாக மாற்றுவதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். எப்போதுமே தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான வேலையைச் செய்யக்கூடிய பா.ஜ.க-வைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கின்றன. எப்படி இருப்பினும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரையில் மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருவோம்" என இராஜீவ் காந்தி தெரிவித்தார்.

பலன் கிடைக்குமா?

அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு தமிழக அரசு நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தில், மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து சட்ட நடவடிக்கைகளையும், நீட் தேர்வால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் மற்ற மாநிலங்களும் உணரக்கூடிய வகையில் தேவையான முயற்சிகளையும் எடுப்பதாகக் கூறியிருக்கிறது. தமிழக அரசு மேற்கொள்ளும் வலுவான நடவடிக்கையின் அடிப்படையில்தான் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும், பலன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதை எதிர்வரும் காலம் நமக்குத் தெரிவுபடுத்தும்.