Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் வெற்றியால் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர் பிம்பம் கிடைக்குமா?! -ஓர் அலசல்

ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றியை தி.மு.க பெற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இமேஜை தேசிய அளவில் உயர்த்த இந்த வெற்றி எந்தளவுக்கு கைகொடுக்கும்?

உள்ளாட்சித் தேர்தல் வெற்றியால் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர் பிம்பம் கிடைக்குமா?! -ஓர் அலசல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றியை தி.மு.க பெற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இமேஜை தேசிய அளவில் உயர்த்த இந்த வெற்றி எந்தளவுக்கு கைகொடுக்கும்?

Published:Updated:
ஸ்டாலின்

தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக விளங்கிவரும் தி.மு.க தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என வரிசையாக வெற்றிகள் பெற்று தி.மு.க மேலும் வலுப்பெற்றுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியில் நீண்டகாலமாக தி.மு.க இருந்துவருகிறது. மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உட்பட எதிர்க்கட்சி முதல்வர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல உறவில் இருக்கிறார். இந்த நிலையில், தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக உருவாகும் அணியில் முக்கியப்பங்கு வகிக்கும் நிலையில் தி.மு.க இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றியை தி.மு.க பெற்றிருப்பது தேசிய அளவில் அதன் மதிப்பை மேலும் அதிகரிக்குமா? தேசிய தலைவர் என்கிற பிம்பம் முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைக்குமா? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.

``கருணாநிதி மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் வலிமைமிக்க ஒரு தலைவராக ஸ்டாலின் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி என தொடர்ந்து ஐந்து வெற்றிகளைப் பெற்று மக்கள் செல்வாக்கை ஸ்டாலின் தக்கவைத்துக்கொண்டுள்ளார். சாதாரண மக்களை சாலையில் சந்திப்பது, செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற அணுகுமுறைகள் மூலமாக மக்களுடன் நெருக்கமான முதல்வராக இருக்கிறார்.

ஸ்டாலின், ராகுல்
ஸ்டாலின், ராகுல்

தமிழக அரசியலில் கோலோச்சிய இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாதது ஸ்டாலினுக்கு ஒரு சாதகமான அம்சம். மேலும், இவர் அளவுக்கு செல்வாக்குமிக்க தலைவர்களாக எதிர்க்கட்சிகளில் யாரும் இல்லை. இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் 5-வது முறையாகத் தோல்வியடைந்துள்ளனர். சொந்தக் கட்சியில் மட்டுமல்ல, வேறு கட்சிகளிலும் ஸ்டாலினுக்கு சமமான தலைவர்கள் இல்லை.

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணியைக் கட்டமைத்த ஸ்டாலின், இன்றுவரை அதை வெற்றிகரமாகக் கொண்டுசெல்கிறார். தி.மு.க-வின் கூட்டணி கட்சிகள், பா.ஜ.க எதிர்ப்பில் மட்டுமல்லாமல் ஆட்சிக்கு உறுதுணையாகவும் இருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம்.

மாநிலங்களின் உரிமைகள் மத்திய பா.ஜ.க அரசால் பறிக்கப்படுவதற்கு எதிராகவும், மாநிலத்துக்கு தர வேண்டிய நிதியை தராததற்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்கு தயங்காத ஸ்டாலின், இந்துத்துவா கொள்கைக்கு நேர் எதிராக திராவிட மாடல் என்கிற கருத்தியலை முன்வைக்கிறார். பா.ஜ.க-வை எதிர்ப்பதில் தி.மு.க சரியாக இருக்கிறது என்ற எண்ணத்தை மோடி எதிர்ப்பாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் நிலைநிறுத்துகிறார்.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இதில், மம்தாவையும் காங்கிரஸையும் ஒன்றிணைப்பதற்கான புள்ளியாக ஸ்டாலின் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பு இல்லை.

ப்ரியன்
ப்ரியன்

அடுத்த இரண்டே கால் ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலும் இல்லை என்பதால், ஆட்சியில் கவனம் செலுத்துவதுடன், அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் அவர் கவனம் செலுத்துவார். குறிப்பாக, வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி காங்கிரஸையும் மம்தா பானர்ஜியையும் ஒன்றுசேர்ப்பதற்கான முயற்சிகளில் ஸ்டாலின் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஸ்டாலினை பொறுத்தளவில், அகில இந்திய அளவிலான ஒரு தலைவராக இன்னும் அவர் புரொஜெக்ட் ஆகவில்லை. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் மத்தியில் முக்கியமான ஒரு தலைவராக இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான முயற்சியில் தீவிரமாக அவர் இறங்கும்போது, அவரது இமேஜ் இந்திய அளவில் உயரும்” என்கிறார் ப்ரியன்.

இது குறித்து பதிப்பாளரும் அரசியல் விமர்சகருமான பத்ரி சேஷாத்ரியிடம் பேசினோம். ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றி, அகில இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், இந்த வெற்றி இல்லாமலேயே ஸ்டாலினுக்கு தேசிய அரசியலில் நல்ல இமேஜ் இருக்கிறது. உங்களால் எத்தனை எம்.பி-க்களை ஜெயிக்க முடியும் என்பது முக்கியமான கேள்வி. உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகியவை பெரிய மாநிலங்கள்.

பத்ரி சேஷாத்ரி
பத்ரி சேஷாத்ரி

மகாராஷ்டிராவிலும் மேற்கு வங்கத்திலும், தமிழகத்தைவிட அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆனால், அங்கு இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க-வுக்கு செல்வாக்கு இருக்கிறது. அந்த மாநிலங்களில் ஒரு கட்சியால் ஒட்டுமொத்த தொகுதிகளையும் கைப்பற்றிவிட முடியாது.

ஆனால், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களையும் பிடிப்பதற்கு தி.மு.க தலைமையிலான கூட்டணியால் முடியும். அதன் காரணமாக, ஸ்டாலினுக்கு தேசிய அரசியலில் மதிப்பும் செல்வாக்கும் இருக்கிறது. நமது அணியில் ஸ்டாலின் இருக்க வேண்டும் என்று எல்லா அணிகளும் விரும்பும்” என்கிறார் பத்ரி சேஷாத்ரி.