Published:Updated:

தமிழகத்தில் இந்தமுறை மூன்றாவது அணி உருவாகுமா? - தேர்தல் கள நிலவரம்! #TNElection2021

தேர்தல் - அனைத்துக் கட்சிக் கொடிகள்
தேர்தல் - அனைத்துக் கட்சிக் கொடிகள்

2021 சட்டமன்றத் தேர்தலில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்ததுபோல இரண்டு பிரதான கட்சிகளின் தலைமையிலேயே கூட்டணி அமையுமா அல்லது 2014, 2016 தேர்தல்களில் அமைந்ததுபோல மூன்றாவது அல்லது மாற்று அணி உருவாக வாய்ப்பிருக்கிறதா?

`யானை வரும் பின்னே... மணி ஓசை வரும் முன்னே...’ என்கிற பழமொழிக்கு இணங்க, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிகுறி, இங்குள்ள கட்சித் தலைவர்களின் கூட்டணி குறித்த தொடர் கருத்துகள் மூலம் தெரியவருகிறது. தமிழகத்தில் இரு பெரும் திராவிடக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க-வை மையப்படுத்தியே பிரதான கூட்டணிகள் அமையும். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றம் என்கிற கோஷத்தை முன்வைத்து தனிக்கட்சிகள் அல்லது பல கட்சிகள் இணைந்து கூட்டணியாகக் களமிறங்குவதும் உண்டு. உதாரணமாக, 2014 நாடாளுமன்றத் தேர்தலில்,தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க ஆகிய கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியாகட்டும்... அதைத் தொடர்ந்து 2016 சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், த.மா.கா ஆகிய கட்சிகள் இணைந்த மக்கள் நலக்கூட்டணியாகட்டும்... முதன்மையான மாற்று அணிகளாக தேர்தலைச் சந்தித்தன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி

2014 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வே ஓர் இடத்திலும் வெற்றிபெறாதபோதும்கூட, இந்தக் கூட்டணியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகிய இருவரும் வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 2016 சட்டமன்றத் தேர்தலில் மாற்று அணியாகப் போட்டியிட்ட மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியாவிட்டாலும், ஒட்டுமொத்தமாக வெற்றியை திசைமாற்றியதில் இந்தக் கூட்டணி பெற்ற வாக்குகளுக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது.

``தற்போதைய கூட்டணி என்பது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இனிமேல்தான் கூட்டணிகள் அமையும். தமிழக பா.ஜ.க தற்போதிருக்கும் கூட்டணியிலேயே தொடரலாம் அல்லது தி.மு.க-வோடு கூட்டணி அமையலாம். இந்த இரண்டு கூட்டணியும் இல்லாமல் புதிதாக நாங்களேகூட ஒரு கூட்டணியை அமைக்கலாம். இவையெல்லாமே அந்தந்த சூழல்களைப் பொறுத்தவை.''
பொன்.ராதாகிருஷ்ணன்

பா.ஜ.க., பா.ம.க மற்றும் ரஜினியின் புதிய கட்சி ஆகிய மூன்றும் இணைந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை அவ்வப்போது செய்திகள் வெளியாகிக்கொண்டேயிருந்தன. அடுத்ததாக, ரஜினியின் புதிய கட்சியோடு விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைத்து தேர்தலைச் சந்திக்க, மக்கள் நீதி மய்யம் கட்சி வியூகம் அமைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இவை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளே.

இந்தநிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்ததுபோலவே, 2021 சட்டமன்றத் தேர்தலிலும், இரண்டு பிரதான கட்சிகளின் தலைமையிலேயே கூட்டணி அமையுமா அல்லது 2014, 2016 தேர்தல்களில் அமைந்ததுபோல மூன்றாவது அல்லது மாற்று அணி உருவாக வாய்ப்பிருக்கிறதா?

பா.ம.க - ரஜினி - பா.ஜ.க
பா.ம.க - ரஜினி - பா.ஜ.க

அப்படி அமைந்தால், அந்த அணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம்பெறும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்,

``தமிழக அரசியல் களத்தில் தற்போதிருக்கும் சூழலைப் பொறுத்தவரை தி.மு.க கூட்டணி மிகவும் கட்டுக்கோப்புடனேயே இருக்கிறது. வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள கூட்டணியாகவும் இந்தக் கூட்டணி கருதப்படுகிறது. அதேவேளையில், அ.தி.மு.க கூட்டணியில் தெளிவு இல்லை. காரணம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, `தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்' என்கிறார். ``நாடாளுமன்றத் தேர்தலோடு கூட்டணி முடிவடைந்துவிட்டது’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார். ``தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தற்போது அ.தி.மு.க அங்கம்வகிக்கிறது’’ என்று பா.ஜ.க தலைவர்கள் சிலரும் பேசிவருகின்றனர். அதேபோல பா.ம.க., தே.மு.தி.க-வும்கூட அ.தி.மு.க-வுடனான கூட்டணி குறித்து இன்னும் தெளிவான முடிவுகளை அறிவிக்கவில்லை.

பா.ம.க - தி.மு.க - வி.சி.க:  கூட்டணிக் குழப்பங்கள்... பின்னணியில்  யார்? #TNElection2021

இப்படியான தமிழக அரசியல் சூழலில், மூன்றாவது அணி உருவாக ரஜினி கட்சி ஆரம்பித்தால் மட்டுமே வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவருடன் பா.ஜ.க., பா.ம.க இணைவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவேளை ரஜினி, பா.ஜ.க-வுடன் சேர விரும்பாவிட்டால், கமல் அவருடன் இணைவதற்கு அதிக அளவில் வாய்ப்பிருக்கிறது. ரஜினியும் பா.ஜ.க., பா.ம.க போன்ற கட்சிகளைத் தன்னுடன் இணைத்துக்கொள்வதைவிட கமலை இணைத்துக்கொள்ள அதிகம் விரும்புவார். ரஜினி, கமல் ஆகியோர் இணையும்போது டி.டி.வி-யும் அவர்களுடன் இணைய அதிக வாய்ப்பிருக்கிறது. டி.டி.வி., அ.ம.மு.க-வைக் கலைத்துவிட்டு அ.தி.மு.க-வுக்குச் சென்றுவிட்டால் அந்த வாய்ப்பும் இருக்காது.

அதேவேளையில், தி.மு.க கூட்டணியில் தங்களுக்கான டிமாண்டை அதிகரிக்க, ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வி.சி.க-வும், காங்கிரஸும் காட்டிக்கொள்ளும். ஆனால், அவர்கள் தி.மு.க கூட்டணியைவிட்டு நிச்சயம் வெளியேற மாட்டார்கள். ஆனால், ரஜினி கட்சி ஆரம்பிக்காமல் அல்லது கட்சி ஆரம்பித்து பா.ஜ.க-வுடன் சேராவிட்டால், பா.ஜ.க தலைமையில் ஒரு மூன்றாவது அணி அமைய வாய்ப்பு மிகவும் குறைவு.

ப்ரியன்
ப்ரியன்

அதேபோல, ரஜினியின் புதிய கட்சியோடு, விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட்கள் இணைந்து ஓர் அணியை அமைத்து தேர்தலைச் சந்திக்க மக்கள் நீதி மய்யம் முயன்றுவருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், விடுதலைச் சிறுத்தைகளோ, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளோ தி.மு.க கூட்டணியைவிட்டு நிச்சயம் வெளியே வர மாட்டார்கள்'' என்கிறார் அவர்.

தமிழகத்தில் மூன்றாவது அணிக்கான சாத்தியம் குறித்து, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்.

``பா.ஜ.க தலைமையில் ஓர் அணி அமையலாம். அப்படி அமைந்தால், அவர்களுடன், புதிய தமிழகம், தே.மு.தி.க., த.மா.கா ஆகிய கட்சிகள் இணைய வாய்ப்பிருக்கிறது. மற்றபடி வேறு எந்த வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேபோல, ரஜினி இன்னும் களத்துக்குள்ளேயே வரவில்லை. ஒருவேளை வந்தாலும் கமல் அவருடன் இணைந்து புதிதாக ஓர் அணி உருவாகுமா என்பது சந்தேகம்தான்'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு