Published:Updated:

புதுச்சேரி: `தி.மு.கவை வெற்றிபெற வைக்காவிட்டால்.. இதே மேடையில் தற்கொலை!’ ஜெகத்ரட்சகன் எம்.பி ஆவேசம்

தி.மு.க ஜெகத்ரட்சகன்
தி.மு.க ஜெகத்ரட்சகன்

”புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் 30 தொகுதிகளிலும் தி.மு.கவை வெற்றிபெறச் செய்யாவிட்டால் இதே மேடையில் தற்கொலை செய்துகொள்வேன்” என்று தி.மு.க முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான ஜெகத்ரட்சகன் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி மாநிலத்தின் தி.மு.க தேர்தல் பணி பொறுப்பாளரான முன்னாள் தி.மு.க அமைச்சரும், எம்.பியுமான ஜெகத்ரட்சகன் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த மேடையில் அமர்ந்தவுடன் எனக்கு பேச்சே மறந்துவிட்டது. அரைக்கால் சட்டையுடன் சிறு வயதில் இந்த மண்ணிலே விளையாடிய ஒரு சாதாரண தொண்டருக்கு தளபதி கொடுத்த அங்கீகாரம் தான் இவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சிவாவையும் சிவக்குமாரையும் பார்த்து நான் பிரமித்து போய் நிற்கிறேன். புதுச்சேரியில் எங்கு பார்த்தாலும் கறுப்பு சிவப்பு கொடி. 23 ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பு, சிவப்பு கொடி பறந்த மண் இது.

ஜெகத்ரட்சகன் எம்.பி
ஜெகத்ரட்சகன் எம்.பி

காந்தியடிகள் ஒரு முறை எனக்கு பின்னால் என் மொழியில் நேரு பேசுவார்கள் என கூறினார்கள். அதுபோல கலைஞருக்கு பின்னால் தளபதி ஸ்டாலின் பேசுகிறார். தளபதி பிறக்கும்போதே இனமொழியுடன் பிறந்தார். 8 கோடி தமிழர்களின் மனங்களிலே தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் ஸ்டாலின். அந்த தளபதி என்னை வாழ்த்தி புதுவைக்கு சென்று வா என அனுப்பியுள்ளார். தளபதியின் தூதுவனாக இங்கு வந்துள்ளேன். 23 ஆண்டுகளுக்கு முன் கறுப்பு சிவப்பு கொடி பறந்த மண் அல்லவா இது. மீண்டும் இங்கு தி.மு.க வின் ஆட்சி அமையும். புதுச்சேரி ஒரு சொர்க்க பூமி. ஆனால் இப்போது இதனை பார்க்கும் போது எனக்கு வயிறு எரிகிறது. பல குடும்பங்கள் வீதிக்கு வந்துவிட்டன. இந்த மண்ணின் மைந்தன் நான். இந்த மாநிலம் தான் நமக்கு முக்கியம். ஏன் மாநிலத்திற்கு நன்மைகள் செய்ய முடியாது. ஏன் பஞ்சாலைகளை திறக்க முடியாது? ஏன் வேலை வாய்ப்புகளை வழங்க முடியாது?

இதுவரை புதுவைக்கு என்ன திட்டம் தீட்டியிருக்கிறீர்கள்? என் புதுவை மண் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். புதுச்சேரியில் எனக்கு 14 லட்சம் பேரை தெரியும். தேவையற்ற சண்டை போட்டு இந்த மண்ணை வீணாக்கிவிட்டார்கள். விவசாயம் பொய்த்து போய் விட்டது. ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது என்பது பெரிய விஷயமா? 10 நிறுவனங்களை கொண்டு வந்தால் ஒரே வருடத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை கொடுத்து விடலாம். பெரிய தொழிலதிபர்களை போய் கேளுங்கள். நம் மக்களுக்காக நாம் கேட்கலாமே ?

`நான்கைந்து முறை ஜெயிச்சி மக்களை ஏமாத்திட்டேன்!’ - கலகலத்த தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன்

புதுவையில் உள்ள துறைமுகத்தை நவீனப்படுத்தினால் பலருக்கு வேலை கிடைக்கும். உங்கள் வீட்டு பிள்ளை நான். கூட்டணியைப் பற்றி தளபதி ஸ்டாலின் முடிவு செய்வார். நீங்கள் ஒரு உறுதியைத் தரவேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த மண்ணுக்கு நான் வந்திருக்கிறேன். தலைவர் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தந்தால்தான் நான் இங்கே வருவேன். இல்லையென்றால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு