Published:Updated:

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், சுப்பிரமணியன் சாமி ஆதரவு... தப்பிப்பாரா கர்நாடக முதல்வர் எடியூரப்பா?

கர்நாடக முதல்வர் எடியூரப்பா
கர்நாடக முதல்வர் எடியூரப்பா

எடியூரப்பாவுக்கு எதிராக நடந்துவரும் களேபரங்களுக்குக் காரணம் என்ன, நான்காவது முறையாக கர்நாடகாவின் முதல்வராகப் பதவி வகித்துவரும் எடியூரப்பா இந்த முறையும் தன்னுடைய பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ய முடியாமல் தத்தளிப்பது ஏன் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

``பா.ஜ.கவின் விசுவாசமான தொண்டன் என்பதில் பாக்கியம் அடைகிறேன். கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கட்சிக்கு பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தொண்டர்கள் யாரும் கட்சிக்கு அவமரியாதை மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தும், எதிர்ப்புகள் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் போன்ற போராட்டங்களில் ஈடுபடக் கூடாது''

என கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று போட்ட ட்வீட், கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எடியூரப்பாவுக்கு எதிராக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் போர்க்கொடி உயர்த்திவந்த நிலையில், இந்த மாத இறுதியில் அவர் முதல்வர் பதவி பறிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது மாநிலம் முழுவதுமுள்ள அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் அவருக்கு ஆதரவாகப் போராட்டங்களும் நடந்துவருகின்றன.

எடியூரப்பா ட்வீட்
எடியூரப்பா ட்வீட்

இந்தநிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, ``ஜூலை 26-ம் தேதியுடன் கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதன் பிறகு என்ன முடிவு என்பதை ஜே.பி.நட்டா முடிவு செய்வார். அதை நான் பின்பற்றுவேன். பா.ஜ.க-வை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்வதே எனது பணி. இதில் எந்த மாற்றமும் இல்லை. கட்சித் தொண்டர்கள், மடாதிபதிகள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,

``கர்நாடகாவில் முதன்முதலில் பா.ஜ.க-வின் ஆட்சியைக் கொண்டுவந்தவர் எடியூரப்பா. அவரை நீக்க சதி நடக்கிறது. அவர் இல்லாமல் மாநிலத்தில் பாஜக-வை நடத்த முடியாது. பாஜக-வுக்கு மீண்டும் எடியூரப்பா வந்த பிறகுதான் வெற்றிபெற முடிந்தது. எதற்காக மறுபடியும் அதே தவற்றைச் செய்கிறீர்கள்'' என எடியூரப்பாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருக்கிறார்.

கர்நாடகா அரசியலில் செல்வாக்கு செலுத்தும், லிங்காயத்து மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும் எடியூரப்பாவைத் தொடர்ச்சியாகச் சந்தித்து, தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல், லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.பாட்டீல், ஷாம்னூா் சிவசங்கரப்பா உள்ளிட்டோரும் எடியூரப்பாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். ``லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த எடியூரப்பாவை கண்ணியமாக நடத்த வேண்டும்'' என்றும் அவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுப்பிரமணியன் சுவாமி டிவிட்
சுப்பிரமணியன் சுவாமி டிவிட்

எடியூரப்பாவுக்கு எதிராக நடந்துவரும் களேபரங்களுக்குக் காரணம் என்ன, நான்காவது முறையாக கர்நாடகாவின் முதல்வராகப் பதவி வகித்துவரும் எடியூரப்பா இந்த முறையும் தன்னுடைய பதவிக்காலத்தை நிறைவு செய்ய முடியாமல் தத்தளிப்பது ஏன் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

2004-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் மதச்சார்பற்ற தனதா தளத்தின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. ஒருகட்டதில், காங்கிரஸுக்குக் கொடுத்த வந்த ஆதரவை விலக்கிக்கொண்டு பா.ஜ.கவுடன் கைகோர்த்தார் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர், குமாராசாமி. ஆளுக்கு இருபது மாதங்கள் முதல்வர் பதவி என்கிற ஒப்பந்தத்துடன், முதலில் குமாராசாமி முதல்வரானார். அப்போது, பா.ஜ.க தலைவர் எடியூரப்பா, துணை முதல்வராகவும் நிதியமைச்சராகவும் பதவிவகித்தார். தொடர்ந்து, எடியூரப்பாவின் டர்ன் வந்தது. தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் எடியூரப்பா. ஆனால், அந்த சந்தோஷம் ஒரு வாரம் மட்டுமே நீடித்தது. கூட்டணிக் கட்சியான ம.ஜ.தளம் ஆட்சியைக் கவிழ்க்க, பதவியை இழந்தார் எடியூரப்பா.

அதற்கடுத்து, 2008-ல் நடந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. இரண்டாவது முறையாக முதல்வரான எடியூரப்பாவுக்கு மூன்று ஆண்டுகள் சுமுகமாகவே சென்றன. நான்காவது ஆண்டின் தொடக்கத்திலேயே, ஊழல் புகார்கள் விஸ்வரூபம் எடுத்தன. அதன் காரணமாக 2011, ஜூலை 31-ம் தேதி மீண்டும் முதல்வர் பதவியை இழந்தார் எடியூரப்பா.

கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, 2012-ல் `கர்நாடக ஜனதா பக்‌ஷா’ என்ற பெயரில் தனிக்கட்சி கண்டு, இரண்டே ஆண்டுகளில் கட்சியோடு மீண்டும் பா.ஜ.க-வில் போய் இணைந்தார் எடியூரப்பா. ஆனால், அதற்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது, 2013-ல் நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில், எடியூரப்பா விலகல் காரணமாக பா.ஜ.க-வின் வாக்குவங்கி சிதறுண்டு போக, ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. சித்தராமையா கர்நாடகாவின் முதல்வரானார். தொடர்ந்து, 2018-ல் நடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளரானார் எடியூரப்பா.

எடியூரப்பா பதவியேற்றபோது...
எடியூரப்பா பதவியேற்றபோது...

அந்தத் தேர்தலில் 104 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியநிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற எடியூரப்பாவால் வெறும் மூன்று நாள்கள் மட்டுமே பதவியில் நீடிக்க முடிந்தது. பெரும்பான்மை இல்லாத காரணத்தால், கண்ணீர்மல்க, தன் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. அடுத்து காங்கிரஸ் தயவுடன் குமாரசாமி முதல்வரான நிலையில், `ஆபரேஷன் கமலா’ என்ற பெயரில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்யவைத்தும், சுயேச்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றும் 2019, ஜூலையில் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா. வரும் 26-ம் தேதியோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக `முதல்வர் எடியூரப்பாவுக்கு 78 வயதாகிவிட்டது. அவரால் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியவில்லை. காது கேட்கவில்லை; பார்வை சரியில்லை’ என்பதில் தொடங்கி, ‘`கோவிட் பிரச்னையை முதல்வர் எடியூரப்பா சரியாகக் கையாளாததன் விளைவே, கர்நாடக மக்கள் இவ்வளவு நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்’ என்பதுவரை பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களே கடுமையான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். பா.ஜ.க மேலவை உறுப்பினர் விஸ்வநாத், `ரூ.21,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் பத்ரா மேலணைத் திட்டத்தில், முதல்வர் எடியூரப்பாவின் குடும்பம் ஊழல் செய்திருப்பதாக’ பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். `அந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் பத்து சதவிகிதம் எடியூரப்பாவின் குடும்பத்துக்கு கமிஷனாகச் சென்றுள்ளது’ என்றும் அதிரடி கிளப்பினார். `ஆட்சியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும்’ விமர்சனங்களை முன்வைத்தார்.

எடியூரப்பா -  மோடி
எடியூரப்பா - மோடி

முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டும் என எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் எத்னால், எம்.எல்.சி விஸ்வநாத் ஆகியோர் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்துவருகிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் எடியூரப்பாவை மிகக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அமைச்சர் யோகேஸ்வர், எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லாட் உள்ளிட்டவர்களும்கூட எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், தன்னுடைய தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுவதாக, அரசுமீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பா.ஜ.க எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லாட். தொடர்ந்து எடியூரப்பாவிடமிருந்து முதல்வர் பதவியை டெல்லி பா.ஜ.க மேலிடம் பறிக்கப்போவதாக பேச்சுகள் அடிப்பட்டன. அவருக்கு பதிலாக, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை முதல்வராக நியமிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. அந்த நேரத்தில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்தார்.

மேக்கேதாட்டு அணை விவகாரம்; பாஜக தலைமைக்கு செக் வைக்க நினைக்கும் எடியூரப்பா!

தொடர்ந்து, கர்நாடக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங், பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் 50 எம்.எல்.ஏ-க்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களிடம், எடியூரப்பா அரசின் மீதான குறைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ``கர்நாடகாவில் ஆட்சித் தலைமையில் எந்த மாற்றமும் இல்லை. கட்சி விவகாரங்களை வெளியில் பேசி, கட்சிக்கு யாரும் பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு கட்சியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பிரச்னைக்குரிய ஒன்றிரண்டு நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். எடியூரப்பாவின் பதவி தப்பித்தது என்றே நினைத்துவந்த நிலையில், அடுத்த வாரம் அவர் பதவி பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரைச் சந்தித்துவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷாவுடன் எடியூரப்பா
அமித் ஷாவுடன் எடியூரப்பா

கொரோனாவிலிருந்து இரண்டு முறை மீண்டு வந்த எடியூரப்பாவா, இரண்டாவது முறையாக தன் கட்சி சகாக்கள் வைத்த செக்கிலிருந்து மீள்வாரா, முதல்வராகத் தொடர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு