Published:Updated:

மும்முனைப் போட்டியில் குஜராத்... சட்டமன்றத் தேர்தல் முன்னோட்டம்!

அமித் ஷா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா, மோடி

பஞ்சாப்பை வென்ற உற்சாகத்தோடு குஜராத்தில் வேலை செய்துவருகிறது ஆம் ஆத்மி. இதுவரை நான்கு முறை குஜராத்துக்கு விசிட் அடித்துவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.

மும்முனைப் போட்டியில் குஜராத்... சட்டமன்றத் தேர்தல் முன்னோட்டம்!

பஞ்சாப்பை வென்ற உற்சாகத்தோடு குஜராத்தில் வேலை செய்துவருகிறது ஆம் ஆத்மி. இதுவரை நான்கு முறை குஜராத்துக்கு விசிட் அடித்துவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.

Published:Updated:
அமித் ஷா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா, மோடி

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கிறது. பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால், நாட்டின் மொத்த கவனமும் குஜராத் மாநிலத் தேர்தல்மீது திரும்பி யிருக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க மட்டுமே மோதிக்கொண்டிருந்த குஜராத் அரசியல் களத்தில், ஆம் ஆத்மியும் காலடியெடுத்து வைத்திருக்கிறது. மும்முனைப் போட்டி நிலவும் குஜராத்தில் முந்துவது யார்?

பா.ஜ.க மீதான அதிருப்தி!

25 ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில், குஜராத்தின் குறிப் பிட்ட பகுதிகள் மட்டுமே வளர்ச்சியடைந்திருப்பது, மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முளைத்திருக்கும் சிறிய கட்சிகள், இளம் தலைவர்கள் எனப் பலரும் பா.ஜ.க-வுக்கு எதிராக நிற்கின்றனர். போதாக்குறைக்குப் புதுவரவான ஆம் ஆத்மி யும் கல்வி, சுகாதாரத்தில் குஜராத் மிகவும் பின்தங்கியிருப்பது குறித்துத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பிரசாரங்களும் பா.ஜ.க மீதான அதிருப்தியை அதிகப்படுத்தியிருக்கிறது.

மும்முனைப் போட்டியில் குஜராத்... சட்டமன்றத் தேர்தல் முன்னோட்டம்!

குஜராத்தில் எப்போதும் சாதி, மத அரசியலை மட்டுமே முன்னெடுக்கும் பா.ஜ.க., இந்த முறை ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளால் வியூகத்தைச் சற்று மாற்றியிருக்கிறது. `பா.ஜ.க 25 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருவதால், தாங்கள் செய்த திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வேலை களைச் செய்யத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. பாரம்பர்ய மான பா.ஜ.க வாக்குவாங்கி, படேல் சமூக வாக்குகள், மோடி, அமித் ஷாவுக்கான வாக்குவங்கி உள்ளிட்டவை குஜராத் தேர்தலில் தங்களைக் கரை சேர்க்கும் என நம்புகிறது பா.ஜ.க.

கவனம் பெறும் ஆம் ஆத்மி!

பஞ்சாப்பை வென்ற உற்சாகத்தோடு குஜராத்தில் வேலை செய்துவருகிறது ஆம் ஆத்மி. இதுவரை நான்கு முறை குஜராத்துக்கு விசிட் அடித்துவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் அறிவிக்கும் அதிரடித் திட்டங்களும், பிரசார பாணியும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் கவனம்பெற்றிருக்கிறது. `மாதம்தோறும் வீட்டுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்; 18 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000; 10 லட்சம் பேருக்கு அரசு வேலை; இலவசக் கல்வி’ என வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். `வேலை கிடைக்கும் வரை மாதம்தோறும் ரூ.3,000 நிதியுதவி’ என்ற அவரது வாக்குறுதி இளைஞர்களைக் கவர்ந்திருக்கிறது.

மும்முனைப் போட்டியில் குஜராத்... சட்டமன்றத் தேர்தல் முன்னோட்டம்!

ஆம் ஆத்மியின் `டெல்லி மாடல்’ பிரசாரம் நகர்ப்புறப் பகுதிகளில் எடுபடத் தொடங்கியிருக்கிறது; குஜராத்திலுள்ள 16,000 கிராமங்களில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்களை ஈர்த்து, கிராமப்புறங்களிலும் கட்சியை வலுப் படுத்திவருகிறது. ஆனால், கெஜ்ரிவாலைத் தவிர குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கென வேறு முகமில்லாதது அந்தக் கட்சிக்கு மைனஸ். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டம்-ஒழுங்கில் ஏற்பட்ட பெரும் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி, மற்ற கட்சியினர் பிரசாரம் செய்வதும் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்திவருகிறது.

திண்டாடும் காங்கிரஸ்!

குஜராத்தில் கடந்த தேர்தலில், 77 இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ். கிட்டத்தட்ட 16 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டது. போன முறையே பா.ஜ.க மீதிருந்த அதிருப்தியால்தான் காங்கிரஸ் இத்தனை இடங்களைக் கைப்பற்றியதாகச் சொல்லப்பட்டது. இந்த முறை, மேலும் பா.ஜ.க-மீது அதிருப்தி அதிகரிக்கும், அதைவைத்து எளிதாக வென்றுவிடலாம் என்று நினைத்திருந்த காங்கிரஸுக்கு ஆம் ஆத்மியின் வளர்ச்சி ‘ஷாக்’ கொடுத்திருக்கிறது. ஆம் ஆத்மியைக் கண்டுகொள்ளாததுபோல, `குஜராத்தில் பா.ஜ.க-வுக்கும், காங்கிரஸுக்கும் மட்டுமே போட்டி’ என்பதைத் தொடர்ந்து சொல்லிவருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். இருந்தும், காங்கிரஸின் வாக்குவங்கியில் மிகப் பெரிய ஓட்டையை ஏற்படுத்திவருகிறது ஆம் ஆத்மி என்பதுதான் உண்மை.

குஜராத்தில், தொடர்ந்து டன் கணக்கில் பிடிபடும் போதைப்பொருள்களைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க அரசுமீது குற்றம்சாட்டினார் ராகுல் காந்தி. இதுபோல, பா.ஜ.க செய்யத் தவறிய விஷயங்களையும், கோட்டைவிட்ட விவகாரங்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டி, அரசு மீதான அதிருப்தியை அதிகப்படுத்தி, வாக்குகளைச் சேகரிக்கும் திட்டத்திலிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இளம் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் பக்கம் நிற்பதால், தலித் மக்களின் வாக்குகளைக் கவர்ந்துவிடலாம் என நினைக்கிறது. இருந்தும், எதிர்க்கட்சியாகச் சரியான அரசியலை முன்னெடுக் காததும், ஹர்திக் படேல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை பா.ஜ.க-விடம் இழந்துவிட்டதும் காங்கிரஸுக்குப் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

மும்முனைப் போட்டியில் குஜராத்... சட்டமன்றத் தேர்தல் முன்னோட்டம்!

முந்துவது யார்?

குஜராத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள 14 மாவட்டங்களில் பழங்குடி மக்கள் அதிகமாக இருக்கின்றனர். குஜராத் வாக்கு வங்கியில் ஏறக்குறைய 14 சதவிகிதம் பேர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், 27 தொகுதிகள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, பழங்குடி வாக்குகளைக் கவர, கட்சிகள் மும்முரம் காட்டு கின்றன. `பழங்குடி இனத்தவரான திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கியிருக்கிறோம்’ என்று பேசிவருகிறது பா.ஜ.க. பழங்குடிகள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியான `பாரதிய பழங்குடிகள் கட்சி’ காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்துவிட்டது. இதனால், பழங்குடிகள் மத்தியில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு உயர, காங்கிரஸின் மதிப்பு சரிந்துவிட்டது.

``தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க-வே தேர்தல் களத்தில் முந்தி நிற்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி களிடையே எதிர்க்கட்சி இடத்துக்கான போட்டி நிலவுகிறது. குஜராத்தில் சிறிய அமைப்புகள், பிராந்தியக் கட்சிகளின் பங்கு தேர்தல் களத்தில் முக்கியமானது. அவர்கள் யார் பக்கம் சாய்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். எனவே, தேர்தல் நெருங்கும் நேரத்தில் காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்’’ என்கின்றனர் குஜராத் அரசியல் நோக்கர்கள்.