Published:Updated:

`போலி பெர்மிட், மணல் கடத்தல்!'- மக்களுடன் சேர்ந்து அதிரடி காட்டிய நாமக்கல் எம்.பி

ர.ரகுபதி

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே மணல் கடத்திய லாரியை நாமக்கல் எம்.பி சின்ராஜ் சிறைப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

Mp sinraj
Mp sinraj

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ஓடப்பாளையத்தில் நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

எம்பியுடன் வாக்குவாதம் செய்யும் சப்-இன்ஸ்பெக்டர்
எம்பியுடன் வாக்குவாதம் செய்யும் சப்-இன்ஸ்பெக்டர்
Vikatan

இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் எம்.பி சின்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து டிப்பர் லாரி மணலையும், ஆவணங்களையும் சோதனை செய்து எத்தனை யூனிட் மணல் உள்ளது என எடை போட்டு பார்த்தார். போலி பெர்மிட்டுடன் 6 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த லாரியைச் சிறைப்பிடித்த எம்.பி. மற்றும் பொதுமக்கள், மோகனூர் போலீஸ் நிலையத்தில் லாரியை ஒப்படைத்தனர்.

அப்போது, காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் வழக்கு பதிவு செய்யும்படி கூறினர். மேலும், அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரும் ஒப்புக்கொண்டும் மோகனூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வழக்கு பதியவில்லை எனத் தெரிகிறது. இதனால் நாமக்கல் எம்.பி சின்ராஜ் மற்றும் மோகனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த வாக்கு வாதத்தால் அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. தொடர்ந்து அந்தப் பகுதியில் திருட்டுத்தனமாக மணல் குவாரி நடைபெறுகிறதா? எனப் பல்வேறு இடங்களில் எம்.பி., பொதுமக்களுடன் சென்று சோதனை செய்தார்.

Chinraj MP
Chinraj MP
Vikatan

கடந்த 24-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற சட்டக்கல்லூரி தொடக்க விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் பி.தங்கமணி முன்னிலையில் புகார் தெரிவித்திருந்தார். அப்போது பேசிய அமைச்சர் பி.தங்கமணி, `அவ்வாறு மணல் அள்ளுவது கிடையாது. மாட்டு வண்டிகள் அனுமதி பெற்று அந்த மணல்தான் அள்ளுகின்றனர்" என்று விளக்கமளித்தார். அடுத்த நாளே கொ.ம.தே.க-வின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், "மணல் கடத்தல் சம்பவத்தில் யாரையும் குற்றம் சொல்லுவதற்காகக் கூறவில்லை. அப்படி திருட்டு மணல் அள்ளாவிட்டால் நல்லது தான்" என்று பேசியிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.