Published:Updated:

`எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? - கேள்வி எழுப்பிய இஸ்லாமிய பெண்; சமாளித்த செல்லுர் ராஜு #CAA

பதில் கூறும் அமைச்சர் செல்லூர் ராஜு
பதில் கூறும் அமைச்சர் செல்லூர் ராஜு

``சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவா உங்க எம்.பி-க்கள் வாக்களிக்காம இருந்திருந்தா எங்களுக்கு இந்தப் பிரச்னை வந்திருக்குமா?” என இஸ்லாமிய கூட்டுறவு சங்கத் தலைவி பாத்திமா கேள்வி எழுப்ப, மழுப்பலான பதிலளித்தனர் அமைச்சர்கள்.

விருதுநகரில் தமிழ்நாடு கூட்டுறவு இணையம் சார்பில் பெட்ரோல் பங்க் திறப்புவிழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது, கூட்டுறவுத்துறை மூலம் கூட்டமைப்புக் கடன் ரூ.8 லட்சம் பெறுவதற்காக இஸ்லாமிய கூட்டுறவு சங்கத்தலைவி முகமது நிலோபர் பாத்திமா என்பவர் மேடை ஏறினார்.

கடன் உதவி பெறும் பாத்திமா
கடன் உதவி பெறும் பாத்திமா

அக்கடனுக்கான காசோலையை அமைச்சர்களிடம் பெற்ற பின்னர், அமைச்சர்களைப் பார்த்த பாத்திமா, ``மாநிலங்களவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க எம்.பி-க்கள் ஓட்டு போடாம இருந்திருந்தா இந்தச் சட்டம் நிறைவேறியிருக்குமா? மக்கள் போராட்டம் இவ்வளவு நடத்த வேண்டிய நிலைமை வந்திருக்குமா? இஸ்லாமியர்கள் நாங்கள் ஓட்டு போடாம நீங்க ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?” என தொடர்ந்து கேள்விகள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தைக் கைவிடச் சொன்ன ஓ.பி.எஸ்! - பதில் கொடுத்த தேனி இஸ்லாமிய அமைப்பினர் #CAA

இப்படி கேள்விகளை அந்தப் பெண் கேட்பார் என யாரும் எதிர்பார்க்காததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு,``சி.ஏ.ஏ-வால எந்த பாதிப்பும் வராது மாமி. உங்களுக்கு இதனால பாதிப்பு ஏதும் இருக்கா? என்.பி.ஆரில் மூன்று கேள்விகளுக்கு மத்திய அரசிடம் விலக்கு கேட்டிருக்கோம். பாதிப்பு வராது மாமி” என அவருக்கே உரிய பாணியில் பேசி சமாளித்தார். உடனே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேடை அருகே நின்ற பெண் அதிகாரிகளைப் பார்த்து,``இந்தம்மாவை அழைச்சுட்டுப் போங்கம்மா” என்றதும், அவரை கீழே அழைத்துச் சென்றனர். இஸ்லாமிய பெண் கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிலளிக்கும் செல்லூர் ராஜு
பதிலளிக்கும் செல்லூர் ராஜு

மொத்த மீடியாக்களின் பார்வையும் அந்த இஸ்லாமியப் பெண் மீதுதான் இருந்தது. இதேபோல தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச்சாலையில், இஸ்லாமிய கல்லூரி நிறுவனர் நூற்றாண்டு தின விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிக்கொண்டிருக்கும்போது, ``சி.ஏ.ஏ-வுக்கு அ.தி.மு.க எம்.பி-க்கள் வாக்களித்ததால் அமைச்சர், கல்லூரியை விட்டு உடனே வெளியேற வேண்டும்” என கோஷமிட்டதால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உரையை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பினார்.

அடுத்த கட்டுரைக்கு