Published:Updated:

முகிலன் தொடர்பாக அந்தப் பெண் என்ன சொல்கிறார்?!

முகிலன்
முகிலன்

முகிலன்தரப்பு, "முகிலன் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். நாய்கள் கடித்த தடம் இருக்கு. அதற்கு தகுந்த வைத்தியம் பார்க்கப்படவில்லை!" என்று தெரிவித்துள்ளது.

சூழலியல் போராளி முகிலன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவருடன் போராட்டக் களத்தில் இருந்த குளித்தலையைச் சேர்ந்த பெண், அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தற்போது முகிலன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 'தன் மீதான வழக்கு பற்றியும், தான் 5 மாதங்கள் அனுபவித்த கொடுமைகளையும் நீதிபதியிடம் சொல்வேன்' என்று முகிலன் தெரிவித்துள்ளதால், 'இந்த வழக்கின் அடுத்த எபிசோடு என்ன?' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாலியல் வழக்கில் சமூக ஆர்வலர் முகிலன் கைது!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகிலன். கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம், கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் என்று சூழலியலைப் பாழாக்கும் சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார். இதற்காக, பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முக்கிய ஆவணங்களை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்டார். பின்னர் மதுரைக்குப் புறப்பட்ட முகிலன், சென்னை ரயில்வே ஸ்டேஷனில் மர்மமான முறையில் காணாமல் போனார். இதுகுறித்து ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முகிலன்
முகிலன்

தமிழகத்தில் சமூக வலைதளங்களில், 'முகிலன் எங்கே?' என்ற ஹேஷ்டேக் வைரலானது. ஐ.நா சபை வரை அவரது விவகாரம் எதிரொலித்தது. 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முக்கிய ஆவணங்களை வெளியிட்டதால் அவர் காணாமல் போனதாக பரவலாகப் பேசப்பட்டது. 'முகிலன் காணாமல் போன விவகாரத்தில் அரசு மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்குப் பங்கு இருக்கலாம்' என்றும், 'காவல்துறை அவரை கடத்தி இருக்கலாம்' என்ற ரீதியிலும் பரபரப்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்கிடையே, முகிலனுடன் போராட்டக் களங்களில் பயணித்த குளித்தலையில் வசிக்கும் இளம்பெண், தன் ஃபேஸ்புக் பக்கத்தில், 'முகிலன் என்னைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றி விட்டார். என்னை அவரின் மகள் என்று பலரிடம் சொன்னார். ஆனால், மகளுக்கும் மனைவிக்குமான உறவின் வித்தியாசம் முகிலனுக்குத் தெரியாதா?' என்று கேள்வி எழுப்பியதுடன், 'முகிலன் அவராகவே தலைமறைவாக இருக்கலாம்' என்கிற ரீதியிலும் பதிவு போட்டு பரபரப்பைப் பற்ற வைத்தார். இதனால், 'பெண்கள் விவகாரத்தில்தான் முகிலன் காணாமல் போய் உள்ளார். அல்லது அவராகவே தலைமறைவாகி உள்ளார்' என்ற பரபரப்பும் ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட பெண், குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முகிலன் மீது புகார் கொடுக்க, மூன்று பிரிவுகளின் கீழ் முகிலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில்தான், முகிலனின் நண்பர் சண்முகம் என்பவர் மூலமாக திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் முகிலன் கைது செய்யப்பட்டு, போலீஸார் அழைத்துச் சென்றதாக முகிலனின் மனைவி பூங்கொடிக்குத் தகவல் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை சி.பி.சி.ஐ.டி போலீஸார், திருப்பதிக்கு விரைந்து, முகிலனை அழைத்து வந்தனர். "எல்லா உண்மைகளையும் நீதிபதியிடம்தான் சொல்வேன்" என்று முகிலன் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள்.

"அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. இது தமிழக போலீஸாரால் அவருக்கு நேர்ந்த கொடுமை" என்றும் சொல்கிறார்கள். இந்தச் சூழலில்தான், முகிலன் மீது பாலியல் வழக்கு கொடுத்த குளித்தலையைச் சேர்ந்த அந்தப் பெண், தன்னுடைய போட்டோவையோ, பெயரையோ வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன், பத்திரிகை, டி.வி சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

முகிலன்
முகிலன்
நா.ராஜமுருகன்

நம்மிடமும் பேசிய அந்தப் பெண், "கடத்தப்பட்டாரோ அல்லது அவராகவே தலைமறைவானாரோ, எப்படி இருப்பினும், முகிலன் உயிரோடு திரும்பி வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. மத்தபடி, என்னை யாரும் இயக்கவில்லை. என்னை முகிலன் தவறாகப் பயன்படுத்தியது உண்மை. எனக்கு அவர் கொடுத்த நம்பிக்கையைக் காப்பாற்றவிலை. அதனால், மற்ற சமூக அமைப்பைச் சேர்ந்த தலைவர்களிடம் இதுபற்றித் தெரிவித்தேன். அவர்கள் முகிலனிடம் பேச, அவர் காணாமல் போனதற்கு அடுத்தநாள், பிப்ரவரி மாதம் 17-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வர்றதாகச் சொன்னார். ஆனா, முதல்நாளே அவர் மாயமாகி விட்டார். அதனால்தான், அவர்மீது வழக்கு கொடுத்தேன்.

அதுவும் ஸ்டெர்லைட், மணல் பிரச்னைகளுக்காக முகிலன் கடத்தப்பட்டிருக்கலாம்னு என்று மத்தவங்க சொன்ன காரணங்கள் போலவே, நான் கொடுத்த பாலியல் வழக்கைச் சந்திக்க பயந்துகொண்டு தலைமறைவாகி இருக்கலாம்ங்கிற ஒரு காரணத்தை நான் முன்வைத்தேன். அவர் என்னிடம் வரம்புமீறி நடந்துகொண்டதாகச் சொன்ன இடத்தில் 'பேருந்து நிலையமோ, லாட்ஜோ இல்லை' என்று சிலர் சொல்கிறார்கள். முகிலன் குறித்து வழக்கில் நான் என்ன புகார் கூறி இருக்கிறேனோ, அதற்குரிய ஆதாரங்கள் அனைத்தையும் போலீஸாரிடம் கொடுத்துள்ளேன். காவல்துறையும் தகுந்த ஆதாரமில்லாமல் ஒருவர் மீது வழக்கை பதிவுசெய்யாது. சிலர் சொல்வதுபோல் காவல்துறையே எனக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும், கோர்ட்டுன்னு ஒண்ணு இருக்குல்லையா? அங்கேதானே குற்றவாளி யார், நிரபராதி யார்னு இறுதிசெய்யமுடியும்? நான் முகிலன் மீது கொடுத்த பாலியல் வழக்கு உண்மைதான் என்பதை நிரூபிப்பேன். முகிலன் வழக்குக்குப் பயந்து இப்படி நாடகம் அரங்கேற்றுவதை விட்டுவிட்டு, கோர்ட்டில் தன்னை நிரூபித்துக் கொள்ளட்டும்" என்றார்.

‘என்னைக் கடத்திக்கிட்டு போறாங்க!’ -தரதரவென இழுத்துச்சென்ற போலீஸாரிடம் திமிரியெழுந்த முகிலன்

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர், "அந்தப் பெண் முகிலனுக்கு எதிராக, முழுக்க முழுக்கப் பொய்யான அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறார். முகிலனோடு இருந்தவரை, அவர் மீது எந்தப் புகாரையும் அவர் சொல்லவில்லை. அவர் காணாமல் போனபிறகு, திட்டமிட்டு வேகவேகமாக, அவதூறு பரப்புவதன் மர்மம் என்ன? புகார் அளித்த பெண்ணை இயக்குவது ஆளுங்கட்சியின் காவல்துறையும், ஸ்டெர்லைட் ஆலை தரப்பும்தான். இதற்கான முக்கிய ஆதாரம் எங்கள் கைகளில் கிடைத்திருக்கிறது. அதை விரைவில் வெளியிடுவோம்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு