Published:Updated:

`தீயில் சிக்கிய கணம்; மாடியிலிருந்து குதித்த குழந்தைகள்' - டெல்லி வன்முறையை நினைவுகூர்ந்த பெண்கள்

60 வயதான பில்கிஸ் பானோ
60 வயதான பில்கிஸ் பானோ ( NDTV )

``ஒவ்வொருமுறை பால்கனிக்குச் செல்லும்போதும், தீயிலிருந்து தப்பிக்க என்னுடைய பேரக்குழந்தைகள் மாடியிலிருந்து குதித்ததுதான் நினைவுக்கு வருகிறது" என்று கூறுகிறார், குழந்தைகளின் பாட்டி சந்தோஷ்.

டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் சில நாள்களுக்கு முன்பு நடந்தது. வன்முறைகள் தற்போது ஓய்ந்துவிட்டது என்றாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. சமூக வலைதளங்களில் பகிரப்படும் வன்முறைகள் தொடர்பான புகைப்படங்களும் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளும் தாக்குதல்கள் எவ்வளவு கொடுமையாக நடந்துள்ளது என்பதை சமூகத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது. அவ்வகையில், வன்முறையில் ஏற்பட்ட தீக்கிடையில் மாட்டிக்கொண்டு போராடிய துயரத்தை பெண்கள் பகிர்ந்துள்ளனர்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

சிவ விஹார் பகுதியில் நடந்த வன்முறையில் எரிந்த வீடுகளுக்கு நடுவே அமர்ந்து அழுதபடியே தாக்குதல்களை நினைவு கூர்கிறார், 60 வயதான பில்கிஸ் பானோ. அவர் பேசும்போது, ``சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்தால் கடந்த திங்கள் கிழமை நடந்த வன்முறையில் என்னுடைய வீடு தீக்கிரையாக்கப்பட்டது. வீட்டுக்குத் தீ வைக்கப்படும்போது நானும் உள்ளே இருந்தேன். சுமார், 35 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறேன். வீடு மொத்தமாக எரிந்துகொண்டிருந்தது. என்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினேன். ஆனால், கீழே விழுந்துவிட்டேன். கூட்டத்தில் சிக்கினேன்" என்று நடுங்கியபடி கூறினார்.

`டாக்டர் கனவு; தலையில் துளைத்த தோட்டா!”- டெல்லி கலவரத்தில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

தொடர்ந்து பேசிய அவர், ``வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைத்துக்கொண்டிருந்தனர். நான் முழங்காலிட்டு நடந்து கூட்டத்திலிருந்து தப்பிக்க முயன்றேன். என்னுடைய மகன் யூசுப் என்னைக் கண்டுபிடித்து கூட்டத்திலிருந்து வெளியே இழுத்தான். நாங்கள் அனைவரும் பாதுகாப்பான ஓர் இடத்தை நோக்கி ஓடினோம். என்னுடைய கடை, வீடு எல்லாம் சாம்பலாகிவிட்டது" என்று கவலையுடன் கூறுகிறார். வன்முறையின்போது அணிந்திருந்த அதே ஆடையுடன்தான் அவர் சிலநாள்கள் இருந்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, சிவ விஹார் பகுதியின் அருகிலிருக்கும் யமுனா விஹாரைச் சேர்ந்த ப்ரீத்தி கார்க் என்பவரும், கலவரத்தின்போது தன்னுடைய வீட்டுக்குத் தீ வைத்தது பற்றி அச்சத்துடன் கூறினார். அப்போது, ``திங்களன்று பலமணி நேரம் தாக்குதல்கள் நடந்தது. முதலில் கற்களால் தாக்கினர். பின்னர், தீ வைக்கத் தொடங்கினர். எங்கள் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள பெட்ரோல் பங்கிற்கும் தீ வைத்தனர். பின்னர், எங்கள் வீட்டின் முன் பகுதியில் தீ வைத்தனர்" என்று சொல்லி அதன் அடையாளங்களையும் காட்டுகிறார்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

மேலும், ``என்னுடைய குழந்தைகளுடன் முதல் மாடியில் இருந்தோம். தீ அதிகமாக ஆரம்பித்ததால் குழந்தைகளை முதலில் காப்பாற்ற நானும் என்னுடைய கணவரும் முடிவு செய்தோம். பால்கனியிலிருந்து குழந்தைகளின் கைகளைப் பிடித்து முடிந்தவரை இறக்கி குதிக்கச் சொன்னோம். என் வாழ்க்கையின் பயங்கரமான தருணங்களில் ஒன்றாக இருந்தது. பிறகு, மொட்டைமாடிக்குச் சென்று பக்கத்துவீட்டின் மாடியில் குதித்து நாங்களும் தப்பித்தோம்" என்று வேதனையுடன் கூறினார்.

``ஒவ்வொருமுறை பால்கனிக்குச் செல்லும்போதும், தீயிலிருந்து தப்பிக்க என்னுடைய பேரக்குழந்தைகள் மாடியிலிருந்து குதித்ததுதான் நினைவுக்கு வருகிறது" என்று கூறுகிறார், குழந்தைகளின் பாட்டி சந்தோஷ்.

தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் கண்களில் தென்பட்ட எல்லாவற்றையும் அடித்தனர், தீ வைத்தனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வன்முறைகளில் இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் சுமார் 150 வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Credits : NDTV

`துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்!’ - டெல்லி மெட்ரோவில் எதிரொலித்த வன்முறை கோஷங்கள்
அடுத்த கட்டுரைக்கு