Election bannerElection banner
Published:Updated:

`சொன்ன வார்த்தையை திரும்ப வாங்கிக்கிறேன்னு சொல்லுங்க’ -ஓ.பி.எஸ் குறித்து பேசிய பெண்; பதறிய ஸ்டாலின்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

`நீங்க ஆத்திரத்தில் தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க. ஜனநாயத்தில் அது முறை இல்லை. நீங்க சொன்ன வார்த்தையைத் `திரும்ப வாங்கிக்கிறேன்’ என்று சொல்லுங்க" என்றார் ஸ்டாலின்.

தேனி, அரண்மனைப்புதூர் ஊராட்சியில் இன்று நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். தி.மு.க தேனி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஸ்டானின் பேசும்போது, "உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும்கட்சியினர்தான் அராஜகம் செய்வார்கள். ஓட்டு எண்ணும் இடத்திலும் அக்கிரமம் செய்வார்கள். அதை மீறி 70% இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்குக் காரணம் மக்கள்தான். ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளில், ஆட்சியில் இருப்பத போல நாங்கள்தான் மக்களுக்காகப் பணியாற்றியிருக்கிறோம்" என்று பேசிய ஸ்டாலின், ``ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் லக்கில் வந்தவர். அதனால்தான் மூன்று முறை முதல்வர் பதவி கிடைத்தது. மூன்று முறை முதல்வராக இருந்து, நாட்டுக்காக என்ன செய்தார்... நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? `ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கு’னு சொன்னார். என்ன மர்மம்னு அவரும் சொல்லலை, ஆளும்கட்சியினரும் சொல்லலை. 27-ம் தேதி சசிகலா வெளியே வந்த பிறகு, ஓ.பி.எஸ் இதே பதவியில் இருப்பாரா என்றுகூடத் தெரியாது. அது அவர்கள் பிரச்னை" என ஓ.பன்னீர்செல்வத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

`நாடாளுமன்றத்துக்கு இணையானது கிராம சபை!' -உள்ளாட்சிக்கு வழிகாட்டும் ராசிபுரம் வழக்கறிஞர்

தொடர்ந்து அங்கிருத்த பெண்கள் சிலரிடமும் உரையாடினார் ஸ்டாலின். அப்போது, பூதிப்பரத்தைச் சேர்ந்த லெட்சுமி என்ற பெண் பேசினார். லெட்சுமி பேசும்போது, "எங்க பகுதியில முதல் ரோடு போட்டாங்க. கமிஷன் வாங்கினதுனால ரோடு பேந்துபோச்சு. இப்ப ரோட்டுக்கு பஞ்சர் போடுறாங்க. ஓ.பி.எஸ் எங்க ஊருக்கு வந்தா என் உயிரே போனாலும் பரவாயில்லை, கொலையே பண்ணுவேன்" என்றார் ஆவேசமாக.

லெட்சுமி
லெட்சுமி

அதைக் கேட்ட ஸ்டாலின், ``உங்களுக்கு எவ்வளவு ஆத்திரம் இருக்குனு வெளிப்பட்டது" என்றார். தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களிடம் பேசிய ஸ்டாலின், லெட்சுமி பேசியதைத் தாமதமாக சுதாரித்துக்கொண்டு, `நீங்க ஆத்திரத்தில் தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க. ஜனநாயத்தில் அது முறை இல்லை. நீங்கள் சொன்ன வார்த்தையை, `திரும்ப வாங்கிக்கிறேன்’னு சொல்லுங்க" என்றார்.

ஈரோடு: `ஏன் பயப்படுறீங்க ஸ்டாலின்..? ; விவாதத்துக்கு வாங்க!’ - எடப்பாடி பழனிசாமி

அதைக் கேட்ட லெட்சுமி, "நாங்க ரொம்ப வெறுப்புல இருக்கோம். கோபத்துல இருக்கோம். உங்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன். அவரிடம் நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்" என்றார். ``சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன்னு சொல்லுங்க" என்று அழுத்தமாகச் சொன்னார் ஸ்டாலின். அதன் பின்னர், `வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன்’ என்ற லெட்சுமி, ``இன்னும் நான் பேசணும்’’ என்றார். சட்டென, ``வேற ஏதாவது பேசப்போறீங்க?" என்றார் ஸ்டாலின். தொடர்ந்து தன்னுடைய பகுதி குறைகளைச் சொன்னார் பூதிப்புரம் லெட்சுமி.

ஸ்டாலின் பங்கேற்ற கூட்டம்
ஸ்டாலின் பங்கேற்ற கூட்டம்

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ``போடிநாயக்கனூர் மாம்பழக் கூழ் தொழிற்சாலையைக் கொண்டுவரவில்லை. சங்கராபுரம் பகுதியில் சிப்காட்டுக்கு பூமி பூஜை மட்டுமே போடப்பட்டிருக்கிறது. குமுளியில் போக்குவரத்துப் பணிமனை இல்லை.

அரண்மனைப் புதூர், கொடுவிலார்பட்டி, நாகலாபுரம் போன்ற பகுதிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. குரங்கணி டாப்ஸ்டஷன் போன்ற பகுதிகளில் விளையும் விளைபொருள்களைக் கொண்டு செல்வதற்கு சாலை வசதி இல்லை" என்றார். பூதிப்புரம் லெட்சுமியின் பேச்சு, கிராமசபைக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

`கிராமசபைக் கூட்டத்தில் பெண் வெளியேற்றம்; கனிமொழி கண்டனம் தெரிவிக்காதது ஏன்?’ - கடம்பூர் ராஜூ கேள்வி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு