கர்நாடக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்காக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி `பஞ்சரத்னா யாத்திரை’ எனும் பெயரில் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தும்கூரு மாவட்டம், திப்தூரில் இந்த யாத்திரையை மேற்கொண்டவர், தமது கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். அதில், ``விவசாயிகள் கடன்காரர்களாக இருக்கக் கூடாது.
கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில், ஒவ்வோர் ஆண்டும் பருவமழையின் காலம் தொடங்கும் முன்பே உழவுப் பணியை மேற்கொள்ள ஏக்கருக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும். அதிகபட்சமாக 10 ஏக்கருக்கு 1 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
தரமான கல்வி விவசாயிகளின் குழந்தைகளுக்குக் கிடைக்க, கிராம பஞ்சாயத்துகளில் அரசு பொது பள்ளிகள் தொடங்கப் படும். கிராம மக்களின் நலனை மேம்படுத்தச் சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

அடுத்தபடியாக பெரும்பாலான விவசாயிகள் என்னிடம் வைத்த கோரிக்கை, விவசாயம் செய்யும் விவசாயிகளின் மகன்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை என்பதுதான். விவசாயிகளின் மகன்கள் விவசாயம் செய்யும்போது இந்தப் பிரச்னை வருகிறது. ஆக, விவசாயிகளின் மகன்களைத் திருமணம் செய்யும் பெண்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படும். நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளை நன்றாக வைத்துக் கொள்வது நமது கடமை’’ என்று தெரிவித்துள்ளார்.