Published:Updated:

``கர்நாடகாவுக்கு ஒரு கிராமத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்'' - மகாராஷ்டிரா அரசு திட்டவட்டம்

ஏக்நாத் ஷிண்டே

``கர்நாடகாவுக்கு ஒரு கிராமத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்’’ என்று மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேயும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் தெரிவித்திருக்கின்றனர்.

``கர்நாடகாவுக்கு ஒரு கிராமத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்'' - மகாராஷ்டிரா அரசு திட்டவட்டம்

``கர்நாடகாவுக்கு ஒரு கிராமத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்’’ என்று மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேயும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் தெரிவித்திருக்கின்றனர்.

Published:Updated:
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது. மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் பெல்காமை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்துவருகிறது. தற்போது கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை மகாராஷ்டிராவிலுள்ள எல்லையோர மாவட்டமான சாங்கிலியில் இருக்கும் ஜாட் தாலுகாவிலுள்ள 40 கிராமங்களை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், `` ஜாட் தாலுகாவுக்கு உரிமை கோருவது குறித்து கர்நாடகா தீவிரமாகப் பரிசீலித்துவருகிறது. ஜாட் தாலுகாவில் இருக்கும் கிராமங்களில் குடிநீர்ப் பிரச்னை பெரிய அளவில் உண்டானபோது அந்தக் கிராம பஞ்சாயத்துகள் தங்களை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றன'' என்றார். கர்நாடகா முதல்வரின் இந்தக் கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் கேட்டுக்கொண்டார்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ``மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் கர்நாடகாவின் பெல்காம் மற்றும் கார்வார் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மூலம் போராடிவருகிறோம். தற்போது கர்நாடகா கேட்கும் எந்த ஒரு கிராமத்தையும் மகாராஷ்டிரா விட்டுக்கொடுக்காது. ஜாட் தாலுகாவில் இருக்கும் கிராமங்கள் 2012-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றின. அது பழையது. புதிதாக கர்நாடகாவிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை'' என்று தெரிவித்தார்.

இந்தப் பிரச்னையைக் கையாள கர்நாடகா அரசு, வழக்கறிஞர்கள் குழு ஒன்றையும் அமைத்திருக்கிறது. மகாராஷ்டிராவும் இதற்காக இருவர் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது. கர்நாடகா எல்லைப் பிரச்னை குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச மகாராஷ்டிரா அரசு தனிக்குழு ஒன்றையும் டெல்லிக்கு அனுப்ப முடிவுசெய்திருக்கிறது.