Published:Updated:

``விமானம் வேண்டாம், அனுமதியுங்கள், நானே வாறேன்!'- காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் பதில்

``காஷ்மீர் குறித்து வெளிவரும் செய்திகள் கவலையளிப்பதாக உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும்” என்கிறார், ராகுல்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி ( விகடன் )

ஜம்மு - காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கிவந்த 370 மற்றும் 35ஏ ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகளும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீக்கப்பட்டன. மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

காஷ்மீர் வரைபடம்
காஷ்மீர் வரைபடம்

மத்திய பி.ஜே.பி. அரசின் இந்த முடிவுக்கு, சிவசேனா, ஆம் ஆத்மி, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேவேளையில் காங்கிரஸ், இடதுசாரிகள், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு எதிராகக் கண்டனக் குரல்களைப் பதிவுசெய்தன.

மேலும், காஷ்மீர் குறித்தான விவாதங்கள் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த கேரள வயநாடு தொகுதி எம்.பி-யான ராகுல் காந்தி, ``காஷ்மீர் குறித்து வெளிவரும் செய்திகள் கவலையளிப்பதாக உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
விகடன்

ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்த ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், “நான் ராகுல் காந்தியை இங்கு வரவேற்கிறேன். உங்களுக்காக விமானம் அனுப்பக்கூடத் தயாராக உள்ளோம். நீங்கள் ஜம்மு - காஷ்மீர் வந்து, இங்குள்ள நிலைமையைப் பார்த்து, பிறகு உங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்யுங்கள். ஒரு பொறுப்புள்ள தலைவராக நடந்துகொள்ளுங்கள். சில வெளி ஊடகங்கள் தவறுதலான கருத்துகளை வெளியிட்டுள்ளன. அவர்களைக் கண்டித்துள்ளோம்” என்றார்.

ஆளுநர் சத்ய பால் மாலிக்கின் இந்தக் கருத்துக்குத் தன்னுடைய ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, “அன்புள்ள ஆளுநர் மாலிக், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளைப் பார்வையிடுவதற்கான உங்களுடைய அழைப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எங்களுக்குத் தனி விமானங்கள் தேவையில்லை. ஆனால், அங்குப் பயணித்து அந்த மாநில மக்களையும், முக்கியத் தலைவர்கள் மற்றும் வீரர்களையும் சந்திப்பதற்கான சுதந்திரத்தை உறுதிசெய்யுங்கள் “ எனப் பதிவுசெய்துள்ளார்.